நாணய சபை தொடக்கம் சீனக்கடன் வரை - இலங்கையின் பொருளாதார நெருக்கடி பற்றிய கூற்றுகள் எந்தளவுக்கு உண்மையானவை?

நாணய சபை தொடக்கம் சீனக்கடன் வரை - இலங்கையின் பொருளாதார நெருக்கடி பற்றிய கூற்றுகள் எந்தளவுக்கு உண்மையானவை?

சுதந்திரம் அடைந்ததிலிருந்து இது வரை காணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டு வருவதுடன், 2022 ஏப்ரல் மாதம் தனது வெளிநாட்டு கடன்களை அடைக்க இயலாத கைவிரிநிலையை அது அடைந்து விட்டது. இந்நெருக்கடி கடந்த சில பத்தாண்டுகளாக தொடர்ச்சியாக பொருளாதாரத்தை நலிவடைய செய்து வந்த தவறான கொள்கை முடிவுகளின் விளைவாகும். 2020 மற்றும் 2022 இல் நிபுணர்களின் வழிகாட்டுதல்களுக்கு மாறாக மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் சேதத்தின் அளவை படம் போட்டு காட்டியது. இதன் விளைவாக நாடு வெளிநாட்டு கடன் கொடுப்பனவுகள் தொடர்பில் கையை விரிக்க நேர்ந்ததுடன் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டி ஏற்பட்டது. நெருக்கடியின் மூலங்களாக கொள்கைகளும், நிர்வாக சிக்கல்களும் இருக்க சில உலக ‘நிபுணர்களும்’ அரசியல்வாதிகளும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் தத்தமது பார்வைகளை முன்வைத்திருந்தனர். இக்கூற்றுகளின் சிலவற்றினை நாம் விரிவாக ஆராய்ந்ததோடு உண்மைகளையும் பட்டியலிட்டுள்ளோம்.

image

@October 18, 2022

Read this article in English | සිංහල | தமிழ்

  • சுதந்திரம் அடைந்ததில் இருந்து இலங்கை காணும் மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி அது துடித்துக்கொண்டிருக்கிறது. உலகளாவிய பேசு பொருளாக இது மாறிய நிலையில், பல்வேறுபட்ட ‘நிபுணர்கள்’ இது தொடர்பில் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
  • அவர்களுள் பேராசிரியர் ஸ்டீவ் ஹாங்க் மிக முக்கியமானவர். அவர் நாணய சபையொன்றை நிறுவுவதன் மூலம் இலங்கையின் நெருக்கடியை தீர்க்க முடியுமென்று எதிர்வு கூறினார். ஆனால் அதுவொன்றும் அவ்வளவு இலகுவில்லை.
  • சிலர் ரஸ்யாவின் உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணமென்றனர். இது மிகவும் தவறான கூற்றாகும்.
  • இலங்கையின் பொருளாதார நெருக்கடி பல பத்தாண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட தவறான பொருளாதார கொள்கைகளின் விளைவாக வரி வருமானம் மற்றும் ஏற்றுமதி வருமானம் குறைவடைந்து, அதன் விளைவாக அரசுகள் வெளிநாட்டு மூலங்களிடமிருந்து தொடர்ச்சியாக கடன்களை பெற்றதன் காரணமாக விளைந்ததொன்றாகும்.
  • இலங்கை சீனாவிடமிருந்து கடன் பெறுவதை ஒரு வாடிக்கையாக கொண்டுள்ள போதிலும், அது மட்டுமே இந்நெருக்கடிக்கு முற்று முழுதான காரணமில்லை. அக்கடன்கள் ஒட்டுமொத்த வெளிநாட்டு கடன்களில் வெறும் 20% மாத்திரமே.
  • பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முதலில் உள்நாட்டில் உள்ள கொள்கை சிக்கல்களை தீர்க்க வேண்டும்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் அதன் கைவிரி நிலையின் வரலாறும்

சுதந்திரம் அடைந்ததிலிருந்து இது வரை காணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டு வருகிறது. இலங்கையின் அரசியல் நிலவரங்கள் காரணமாக அதன் பொருளாதார நெருக்கடி உலகளாவிய கவனத்தை பெற்று, வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் கொள்கை வகுப்பு குழுக்கள் மத்தியில் அடிக்கடி எடுத்துக்கொள்ளப்படும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதன் விளைவாக பல ‘நிபுணர்கள்’ நெருக்கடிக்கான மூலகாரணங்களாக தாம் எண்ணுபவையையும் அதற்குரிய தீர்வுகளையும் முன்வைக்கும் நிலை உண்டாகியுள்ளது. இவை அனைத்தும் அவர்களது தனிப்பட்ட கொள்கைகள், சார்புகள் மற்றும் நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்டு கட்டியெழுப்பப்பட்டுள்ளவையாக விளங்குகின்றன.

இதன் விளைவாக அவற்றுள் பல கூற்றுகள் முழுமையான விளக்கத்தை தருபவையாக அமையவில்லை. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான மூல காரணங்களையும் அவை முழுமையாக விளக்கவில்லை இலங்கை ஏன் வெளிநாட்டு கடன்களை கட்ட முடியாத கைவிரிநிலையை அடைந்தது என்பதையும் அவை முழுமையாக விளக்கவில்லை.

அவற்றுள் சில புகழ்மிக்க கூற்றுக்களும் அவை எந்தளவுக்கு உண்மையானவை என்பதும் பின்வருமாறு.

ஸ்டீவ் ஹாங்க்கின் நாணய சபை மீதான காதலும் பண அச்சிடலும்

ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக செயன்முறை பொருளியல் பேராசிரியரான ஸ்டீவ் ஹாங்க் எந்த நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானாலும் கையில் ஒரு தீர்வுடன் காணப்படுகிறார். அத்தீர்வுதான் நாணய சபையொன்றை அமைப்பது.

💡
1998 இந்தோனேசிய ஜனாதிபதி சுகார்த்தோவினால் ஆசிய பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தோனிசியாவினை மீட்டெடுக்க நாணய சபையொன்றினை உருவாக்க நியமிக்கப்பட்ட நிபுணர்தான் இந்த ஹாங்க். இந்நாணய சபைக்கு எதிராக பல இந்தோனேசிய பொருளாதார நிபுணர்களும், அரசியல்வாதிகளும், உலக தலைவர்களும் இருந்தனர். இது தொடர்பில் மேலதிக விவரங்களுக்கு இச்சுட்டியினை அணுகவும்.

பணவீக்கம் அதிகரித்து பெறுமதி குன்றிப்போயிருக்கும் நாணயத்தினை கொண்டிருக்கும் எந்தவொரு நாட்டுக்கும் நாண சபையினை முன்மொழியும் வரலாற்றினை இந்த போராசிரியர் கொண்டிருக்கிறார். தற்போது அவர், பாக்கிஸ்தான், கானா, மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் நாணய சபையினை அமைக்க வேண்டும் என கருத்து கூறிவருகின்றார். நாணய சபைக்கு ஈடானதென அவர் கூறுகின்ற முறையான உள்நாட்டு பணத்திற்கு மாற்றீடாக அமெரிக்க டொலரினை குறித்த நாட்டின் பணமாக பயன்படுத்தும் முறையான டொலர்மயமாக்குதலை வெனிசுவேலாவிலும், ஆர்ஜென்ரினாவிலும் நடைமுறைப்படுத்தவும் அவர் முயற்சித்து வருகிறார்.

இந்த ஒரு வழியை தவிர வேறெதையும் தெரியாதவர் ஹாங்க் என எண்ணும்படியாக, இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கும் ‘‘மத்திய வங்கியினை பத்திவிட்டு நாணயசபையொன்றினை உருவாக்குவதைத்தான்’’ தீர்வாக அவர் கூறுகிறார்.

எமது உள்ளூர் ஊடகங்கள் பல, ஸ்டீவ் ஹாங்க்கினது பணவீக்க கணிப்புகள் காரணமாக அவரது பெயரை அடிக்கடி குறிப்பிட தொடங்கின. ஹாங்கினது வேறுபட்ட முறையில் கணிக்கப்பட்ட பணவீக்க கணிப்புகள் எமது புள்ளி விபரத்திணைக்களம் கணித்த கணிப்புகளை விட பரபரப்பானவையாக இருந்தன.

நாணய சபை என்றால் என்ன? ஸ்டீவ் ஹாங்க் கூறுவது போல எமது பொருளாதார நெருக்கடிக்கு அது தீர்வாகுமா?

💡
நிலையான நாணய மாற்று வீதத்தின் அதியுச்சகட்ட வடிவம்தான் நாணய சபை முறைமையாகும். நாணய சபையானது உள்நாட்டு நாணயத்தினை பிறிதொரு வெளிநாட்டு நாணயத்திற்கு (இது நங்கூர நாணயம் எனப்படும்) ஒரு நிலையான நாணய மாற்று வீதத்தில் (உ+ம்: ஒரு ரூபா = ஒரு டொலர்) மாற்றும் சட்டபூர்வ கடப்பாடுடைய ஒரு நாணய அதிகார மையமாகும்.

நாணய சபையொன்றின் கீழ், நாணயக்கொள்கை தொடர்பான உரிமையினை நாடொன்று விட்டுக்கொடுத்து விடும். வட்டி வீதங்களினை கட்டுப்படுத்தும் அமைப்பு என்ற ஒன்றே இருக்காது என்பதே இதன் பொருள். தற்போது, மத்திய வங்கிகள் வட்டி வீதங்களினை தீர்மானிப்பதன் மூலம் பண வீக்கத்தினை கட்டுப்படுத்துகின்றன. நாணய சபையின் கீழ், மத்திய வங்கி என்ற ஒன்றே இருக்காது. முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்ட உள்நாட்டு நாணயத்திற்கும் நங்கூர நாணயத்திற்கும் இடையே நிலையான நாணய மாற்று வீதத்தினை தொடர்ச்சியாக பேணுவதிலேயே முழுமையான கவனமும் குவிக்கப்பட்டு விடும். பணவீக்கம் மேற்படி நிலையான நாணய மாற்று வீதத்தினை பேணுவதன் மூலம் கட்டுப்படுத்தப்படும். பண வழங்கலானது முழுமையாக நங்கூர நாணயத்தின் கையிருப்பிலேயே (பணத்தாள்கள், தங்கம், கடன் முறி, பத்திரங்கள் ஆகிய வடிவில்) தங்கியிருக்கும். இதன் மூலம் நாணய மாற்று வீதம் பேணப்படும்.

ஏன் இத்தீர்வு வேலைக்கு ஆகாது

நாணய சபையின் முதன்மையான நோக்கம் பற்றாக்குறை நிதியாக்கம் எனப்படும் பண அச்சிடலை தடுப்பதேயாகும்.

பற்றாக்குறை நிதியாக்கம் இலங்கையில் பல பத்தாண்டுகளாக நிகழ்ந்து வருகிறது. எவ்வாறாயினும் அது 2020 இல் புதிய ஆர்முடுகலை அடைந்திருப்பது என்பதையும் மறுப்பதற்கில்லை. பேராசிரியர் டபிள்யூ.டி லக்ஷ்மன் மற்றும் ஏ.என்.கப்ரால் ஆகிய ஆளுநர்களின் கீழ் 2020 க்கும் 2021 க்கும் இடையான காலப்பகுதியில் பரவலான பண வழங்கல் 40% ஆல் உயர்ந்துள்ளது. இது தற்போதைய இலங்கையின் விரைவான பண வீக்கத்தில் முக்கிய பங்காற்றுகிறது. பணவீக்கமானது 2022 ஆகஸ்டில் 70% எனும் புதிய உயரத்தினை அடைந்துள்ளது.

இவ்வாறு புதிதாக பணத்தை அச்சிட்டுக்கொண்டே இருக்கின்ற மத்திய வங்கியினை ஒழித்து கட்டிவிட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று தோன்றினாலும் அதில் உண்மையில்லை. மத்திய வங்கியின் கடமைகளிலேயே குறைபாடு உள்ளது என்று கூறிவிட முடியாது. விலைகளின் நிலைத்தன்மையை (குறைவான நிலையான பணவீக்கம்) பேணும் அதிகாரம் இலங்கை மத்திய வங்கிக்கு உண்டு. எவ்வாறாயினும் ஊதாரித்தனமான அரசின் தேவைகளை ஈடுசெய்வதற்காக கடந்த இரு ஆண்டுகளாக மத்திய வங்கியின் இந்த பொறுப்பு புறக்கணிக்க விடப்பட்டிருந்தது.

மேலும், பாதீட்டு பற்றாக்குறையின் உச்ச வரம்பாக நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 5% இனை வரையறுக்கும் நிதிக்கொள்கை விதிகள் இலங்கை அரசிற்கு விதிக்கப்பட்டுள்ளன. மேலும் இலங்கை அரசின் கடன் மற்றும் அரச நிறுவனங்கள் மீதான கடன்கள் ஆகியவற்றின் உச்ச வரம்பாக நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 85% வரையறுக்கப்பட்டுள்ளது. மேற்படி இரு வரையறைகளும் இலங்கை அரசினால் மீண்டும் மீண்டும் மீறப்பட்டு வந்துள்ளன.

மேற்படி எந்த வரையறைகளுமே இலங்கையினை விதிகளை மீறுவதிலிருந்து தடுக்கவில்லை. மத்திய வங்கியின் இடத்தில் நாணய சபையை கொண்டு வந்து வைத்து விட்டால் மட்டும் விதிகளை மீறும் அரசின் போக்கு மாறிவிடும் என்று எவ்வாறு நம்புவது?

அரசியல் நோக்கற்ற பார்வையில்

இலங்கையில் நாணய சபை என்ன பங்கு வகிக்க கூடும் என்பதை பார்ப்போம். மத்திய வங்கிக்கு பதிலீடாக நாணய சபையொன்று நிறுவப்படும். அதன் முதன்மையான நோக்கமாக நங்கூர நாணயத்தின் அடிப்படையில் நாணய மாற்று விகிதத்தை மாறாது பேணுவது காணப்படும்.

நங்கூர நாணயமாக எது தேர்ந்தெடுக்கப்படும்? சில இந்திய ரூபாயினை பரிந்துரைக்கின்றனர். இந்தியா நமக்கு மிக அண்மையில் உள்ளபோதும் எமது பெரும்பாலான இறக்குமதிகள் சீனாவிடமிருந்தும் பெரும்பாலான ஏற்றுமதிகள் அமெரிக்காவுக்கும் இடம்பெறுகின்றன. இந்தியா இலங்கையின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி சந்தையாகும். இந்திய ரூபாய் நங்கூர நாணய போட்டியில் சீன யுவான் மற்றும் அமெரிக்க டொலருக்கு அடுத்த இடத்தில் உள்ளது. இராஜதந்திர நெருக்குதல்கள் இல்லாமல் ஏதாவதொரு நாணயத்தினை நங்கூர நாணயமாக இலங்கை தெரிவு செய்து விட்டது என்றே வைத்துக்கொள்வோம், அதனால் என்ன மாற்றம் ஏற்படும்? இதனால் இலங்கை நாணயக் கொள்கையில் என்ன விளைவுகள் ஏற்படும்?

எம்மால் எமக்கென்று ஒரு நாணய கொள்கையை வைத்திருக்க முடியாது போகும், நங்கூர நாணயத்தினை அச்சடிக்கும் நாட்டின் மத்திய வங்கியின் (இந்திய ரிசர்வ் வங்கி, அமெரிக்க ரிசர்வ் வங்கி அல்லது சீன மக்கள் வங்கி) கருணையின் கீழ் வாழ நேரிடும். மேற்படி எந்த வங்கியுமே இலங்கையின் பொருளாதார நலனையோ மக்கள் நலனையோ கருத்தில் கொண்டு தமது நாணய கொள்கைகளினை வகுக்க போவதில்லை. இலங்கை தனது நாணய கொள்கையின் மீதான ஒட்டுமொத்த தன்னாட்சி உரிமையையும் வெளிநாடொன்றின் கையில் ஒப்படைத்து விட வேண்டுமா என்பதே இங்கு எமக்கு எழும் கேள்வியாகும்?

நாணய சபை போன்றல்லாது மத்திய வங்கி பரந்து பட்ட பணிகளை செய்கின்றது என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். மத்திய வங்கி நாட்டின் பொருளாதார முறைமையின் நிலைத்தன்மையை பேணும் தனது கடமையிலிருந்து தவறி விட்டுள்ள போதிலும், இப்போதும் கூட வங்கிகளுக்கு உதவவும் நாட்டினது பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டவும் மத்திய வங்கியினால் முடியும்.

ஒரு சில நாடுகளுக்கு வேண்டுமென்றால் பேராசிரியர் ஹாங்க் சொல்லும் முறை தீர்வாக அமையலாம், ஆனால் எல்லா நாடுகளுக்கும் அது ஒற்றை தீர்வாக அமைந்து விட முடியாது.

2019 இல் கொண்டு வரப்பட்டு 2020 இல் நடந்த ஆட்சி மாற்றத்துடன் கைவிடப்பட்ட புதிய நாணய கொள்கையை மீளக்கொண்டு வருவதே இவ்வேளையில் சாத்தியமானதொரு தீர்வாக அமையும். இந்த சட்டம் மத்திய வங்கிக்கு மேலதிக சுதந்திரத்தை வழங்குவதுடன்  பற்றாக்குறை நிதியாக்கம் எனப்படும் பண அச்சிடலை குறைப்பதை நோக்காக கொண்டிருந்தது.

💡
பண அச்சிடல் என்றால் என்ன? பண அச்சிடல் என்பது மத்திய வங்கி அரச கடன் பத்திரங்களை (திறைசேரி உண்டியல் மற்றும் முறிகள்) கொள்வனவு செய்வதுடன் தொடர்புட்டதாகும். பொதுவாக அரச கடன் பத்திரங்கள் வங்கிகளாலும் ஏனைய நிதி நிறுவனங்களாலும் அவற்றிடம் உள்ள பணத்தின் மூலம் கொள்வனவு செய்யப்படும். இதன் போது, நாட்டிலுள்ள பணம் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு நகரும். உதாரணமாக ஒரு வங்கி அரச கடன் பத்திரங்களை கொள்வனவு செய்கையில் பணமானது வங்கியிடமிருந்து அரசிடம் நகரும். எவ்வாறாயினும், மத்திய வங்கி அரச கடன் பத்திரங்களை கொள்வனவு செய்கையில், அது புதிதாக அச்சிட்ட பணத்தினை கொண்டு வாங்கப்படுவதால் நாட்டிலுள்ள பண கையிருப்பில் புதிதாக பணம் உட்செலுத்தப்படுகிறது. இதன் விளைவாக நாட்டிலுள்ள மொத்த பண கையிருப்பின் அளவு அதிகரிக்கிறது.

மீளசுழற்சியாகும் சீனக்கடன் பொறி

சீனாவின் கடன் பொறியில் இலங்கை சிக்குகிறது என்ற வதந்தி ஒன்றும் புதிய விடயமல்ல. இது பலதடவைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களாலும் கட்டுடைக்கப்பட்டுள்ளது.

image
image

எவ்வாறியினும், நாங்கள் தொடர்ச்சியாக சீனா தொடர்ச்சியகா கடன்களை வழங்குவதனால் தான் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது எனப்படும் கூற்றுக்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. இந்த கதையாடல் பின்வருமாறு பின்னப்படுகிறது.

இலங்கை சீனாவிடமிருந்து அதியுயர் வட்டி வீதத்தில் அளவுக்கதிகமான கடன்களை பெற்றது. பல்வேறுபட்ட மீள வருமானம் கிடைக்காத திட்டங்களுக்காக இக்கடன்கள் பெறப்பட்டது. தற்போது இந்த அதியுயர் வட்டிகளை சீனாவுக்கு மீளச்செலுத்த முடியாமல் இலங்கை திண்டாடி வருவதால் கடன்களை மீளச்செலுத்த முடியாத கைவிரி நிலையினை அது அடைந்து விட்டடது.

இது மிகவும் எளிமையானதொரு கதையாடல். ஆனால் இவ்வாறான எளிமையான கதையாடல்கள்தான் புகழ் பெறுகின்றன. சீன எதிர்ப்பு மனநிலையில் மக்கள் உள்ள போது இவ்வாறான எளிமையான கதையாடல்கள் தொடர்ச்சியாக திணிக்கப்படுகையில் திகைப்பூட்டும் வகையில் அனைவராலும் நம்பப்பட்டு விடுகின்றன.

எந்தளவுக்கு இக்கதையாடல்களில் உண்மை உள்ளது?

இலங்கையின் வெளிநாட்டு கடன்களை பற்றிய உண்மை இக்கதையாடல்களை விடவும் சிக்கலானது. நாங்கள் ஏற்கனவே இந்த இடியாப்பச்சிக்கலை எமது ஆய்வுக்கட்டுரையொன்றில் விளக்கியுள்ளோம்.

இலங்கையின் கடன் சிக்கல் சீனாவை தாண்டியும் நீண்டு செல்கிறது. வெளிநாட்டு கடன்களை கட்ட முடியாத கைவிரி நிலையை இலங்கை அடைந்த போது, இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடன்களில் 20% மாத்திரமே சீனாவிற்கு செலுத்த வேண்டியவை. ஏன் 2022-2023 மற்றும் 2024 இல் கூட சீன கடன் வழங்குனர்களுக்கு வழங்க வேண்டிய கடனின் அளவு ஒட்டு மொத்த வெளிநாட்டுக்கடனில் 20% இனை தாண்ட வாய்ப்பில்லை.

2020 தொடங்கி 2025 வரையில் இலங்கை செலுத்த வேண்டிய கடன் மீளக்கொடுப்பனவுகளில் அண்ணளவாக 50% இனை கொண்டிருப்பது சர்வதேச இறையாண்மை பத்திரங்களேயாகும் (ISB). இவற்றுள் ஒரேயொரு தடவை மட்டும் செலுத்தப்பட வேண்டிய மீளக்கொடுப்பனவுகளின் அளவுகள் மாத்திரம் ஆண்டொன்றுக்கு அண்ணளவாக 1 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு குறைவில்லாமல் இருக்கின்றது.

மேற்படி சர்வதேச இறையாண்மை பத்திரங்களிற்குரிய மீளக்கொடுப்பனவுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும். எனினும், கடன் மதிப்பீடுகள் குறைவடைந்ததன் விளைவாக புதிய சர்வதேச இறையாண்மை பத்திரங்களை விநியோகிக்க முடியாமை, ஏற்றுமதி வருமான தேக்கம் மற்றும் சுற்றுலா மூலம் கிடைக்கும் டொலர் வருமானத்தின் சடுதியான குறைவு ஆகிய காரணங்களால் இலங்கையினால் மேற்படி சர்வதேச இறையாண்மை பத்திரங்களிற்குரிய மீள் கொடுப்பனவுகளை செய்ய முடியாது. இலங்கை வெளிநாட்டு கடன்களை மீளச்செலுத்த முடியாத கைவிரிநிலையினை அறிவிப்பதை தவிர்க்க முடியாமல் போனது.

சீன கடன்களால் சிக்கலேயில்லை என நாங்கள் கூறவில்லை. அவற்றுள் சில அதிக செலவுகள் மிக்க பயனதரா திட்டங்களான மத்தள விமானநிலையம் போன்ற திட்டங்களுக்காக பெறப்பட்டது என்னவோ உண்மைதான். மேலும், சீன எக்சிம் வங்கியிடமிருந்து பெறப்பட கடன்கள் பெரும்பாலும் கோரல்கள் இன்றி பெறப்பட்டன. எதுவித போட்டி கோரல்களுமின்றி மேற்படி திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் சீன ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டன. உதாரணமாக, அம்பாந்தோட்டை துறைமுக திட்டத்திற்காக சீன எக்சிம் வங்கியிடமிருந்து நான்கு கடன்கள் பெறப்பட்ட பின், போட்டி கோரல்கள் எதுவுமின்றி சீன துறைமுக கூட்டுத்தாபனத்திற்கு அத்திட்டத்திற்குரிய ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

எவ்வாறாயினும், இலங்கை வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் போனதற்கான மூல காரணம், வரிக்கும் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்திக்குமான விகிதம் தொடர்ச்சியாக குறைக்கப்பட்டமை, ஏற்றுமதி செயற்றிறனின் குறைவடைதல் போக்கு, போதுமான அளவுக்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகளை (FDI) ஈர்க்கத்தவறியமை போன்ற நீண்ட கால கட்டமைப்பு பலவீனங்களே ஆகும்.

எனவே, இலங்கையின் கடன் சிக்கல் எனும் பாரிய பனிப்பாறையின் மேலே தெரியும் வெறும் சிறு நுனிதான் சீனக்கடனாகும். இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு சீனாவினை குற்றஞ்சாட்டுவது, உண்மையிலேயே இருக்கின்ற குறைபாடுகளான, சர்வதேச இறையாண்மை பத்திரங்களில் அதிகளவில் தங்கியிருத்தல், வரி, ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு முதலீடு குறைபாடுகளினை புறக்கணிப்பதில் போய் முடியும்.

ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமித்தது இலங்கையின் பொருளாதார நெருக்கடியை மோசமாக்கியதா?

இலங்கையின் பொருளாதார நெருக்கடி ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமித்ததன் விளைவாக ஏற்பட்டது என்பதும் உலகில் பல இடங்களில் புகழ் பெற்றிருக்கும் ஒரு கதையாடலாகும். இக்கதையாடலின் முக்கியமானதொரு பரப்புரையாளர் உக்ரேனிய ஜனாதிபதி விளாடிமர் செலன்ஸ்கி ஆவார். இக்கதையாடல் மேலும் பலரால் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் வழிமொழியப்பட்டது.

உலகளாவிய பார்வையில், ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமித்ததனால் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்பட்ட உயர்வு இலங்கையின் பொருளாதார நெருக்கடியுடன் இலகுவாக தொடர்புபடுத்தப்படலாம். ரஷ்ய படைகள் உக்ரேனுக்குள் நுழைந்து ஒரு மாதத்தின் பின் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மிகவும் மோசமானதும், கச்சா எண்ணெய் மற்றும் ஏனைய விளைபொருட்களின் விலையுயர்வு பொருளாதார நெருக்கடியுடன் கூட்டிணைந்து நிலைமை மோசமானதும் என்னவோ உண்மைதான். கச்சா எண்ணெய் விலை உயர்வு நெருக்கடி மோசமாவதில் பங்களித்திருந்ததும் உண்மைதான். இருந்த போதிலும், உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பு இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான மூல காரணமில்லை என்பதும் உறுதி.

இது எவ்வாறு எம்மை பாதித்தது

ரஷ்யா உக்ரேன் மீது தொடுத்த தாக்குதலினால் இலங்கைக்கு ஏற்பட்ட முதன்மையான தாக்கம் எண்ணெய்களின் விலை உயர்வாகும். 2022 ஜனவரியில் 430 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியாயிருந்த ஒரு மாதத்திற்கு தேவையான முழுமையான எண்ணெயின் விலை ஆக்கிரமிப்பின் பின்பு 600 மில்லியனாக உயர்வடைந்திருந்தது. ரஷ்யா மற்றும் உக்ரேனிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா மற்றும் சோளம் ஆகியவற்றின் விலைகளும் பாதிக்கப்பட்டன.

இவையெல்லாம் இலங்கையின் வெளிநாட்டு நாணய நெருக்கடியில் பங்களித்திருந்த சிறு சிறு காரணிகள் மாத்திரமே. பெரும் மின்வெட்டுகள் மற்றும் நீண்ட எரிபொருள் வரிசைகள் ஆகியன எதிர்பாரா விதமாக எண்ணெய் விலை உயர்வடைந்ததன் காரணமாக ஏற்பட்டவையில்லை. அவை, இலங்கை தனது கையிருப்பில் இருந்த அனைத்து டொலர்களையும் கடன்களை அடைப்பதிலும் நாணய மாற்று வீதத்தினை கட்டுப்படுத்தும் முயற்சியிலும் செலவிட்டதால் ஏற்பட்டவையாகும்.

இதன் விளைவாக, எம்மிடம் எரிபொருளினை கொள்வனவு செய்வதற்கு டொலர் எஞ்சியிருக்கவில்லை.

மேற்படி ஆக்கிரமிப்பு நடைபெற்றிருக்காவிடின், எண்ணெய் பரல் ஒன்றுக்கு 100 டொலருக்கு பதில் 50 டொலராக இருந்திருக்கும், அவ்வாறு இருந்திருந்தாலும் அதை வாங்குவதற்கு இலகையிடம் டொலர் இருந்திருக்க போவதில்லை. அனைத்திற்கும் அடிப்படையான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்து விட்டிருந்தது.

இந்த பெறுமதி வீழ்ச்சி கூட ரஷ்யா உக்ரேன் மோதல் காரணமாக ஏற்பட்டதில்லை. இலங்கையின் பொருளாதார நெருக்கடி பல பத்தாண்டுகளாக, குறைவான வரிகள், குறைவான ஏற்றுமதிகள், குறைவான முதலீடுகள் மற்றும் அதிகளவான கடன் ஆகியவற்றின் பலனாக நீடித்து கொண்டிருக்கும் ஒரு சிக்கலாகும். இலங்கையர்களாகிய எமக்கு குழி பறிக்க வெளியிலிருந்து ஒருவரும் வரத்தேவையேயில்லை.

பசுமைவாதிகளும் இலங்கையின் இயற்கை விவசாய புரட்சியும்

இலங்கை இரவோடிரவாக அசேதன உரங்களை தடை செய்தமையும் பல கதையாடல்கள் உருவாக களமாகி விட்டது. பசுமைவாதிகளான டெமோகிரட் கட்சியை சேர்ந்த கலிபோர்னியா அரசியல்வாதிகள், வணிக பெருமுதலைகளான டாவோஸ், இ.எஸ்.ஜீ முதலீட்டாளர்கள், பில் கேட்ஸ் போன்றோரின் தூண்டுதலால் சடுதியாக இயற்கை விவசாயத்துக்கு திரும்பிவிட்டது என்பது இவற்றுள் முக்கியமான கருத்தாடலாகும்.

இங்கு குறிப்பிடப்பட்டவர்களை வைத்து பார்க்கையில் இக்கதையாடலில் தெளிவானதொரு அபிவிருத்திக்கு எதிரான சார்பு தெரிகிறது, இவற்றுள் பல அமெரிக்காவிலிருந்து கிளைப்பதாகவும் தெரிகிறது. நிலைபேறான விவசாயம் சாத்தியமா இல்லையா என்பது ஒருபுறமிருக்க இலங்கையின் இம்முடிவின் பின்னால் காலநிலை பற்றிய கவலையோ சுற்றுச்சூழல் சார் எண்ணங்களோ இல்லை என்பது மட்டும் திண்ணம்.

இலங்கையில் இரசாயன பயன்பாடு பற்றி எழுகின்ற பொதுவான எதிர்வாதம் சிறுநீரக நோயை பற்றியதாகும். அத்துடன் சேர்ந்து, இலங்கையின் தற்சார்பை பற்றிய தேசியவாதிகளின் வாதங்களும் எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றியது. இதன் பலனாக இலங்கை உலகிலேயே அதிசிறந்த அறுவடையை பெற்றதாக கூறப்படும் கற்பனாவாத பழங்காலத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் தொடங்கின.

அடுத்ததாக சீறுநீரக நோய் பற்றிய வாதங்களும் முக்கிய மருத்துவர்கள் சங்கமாகிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் மூத்த மருத்துவ அதிகாரிகளால் ஆதரவளிக்கப்பட்டதால் அதுவும் முக்கிய வாதமாக விளங்கியது. மருத்துவ மற்றும் விவசாய துறைகளிலிருந்து மேற்படி வாதத்துக்கு எதிர்வாதங்களும் முன்வைக்கப்பட்டிருந்தது. எது எவ்வாறாயினும் இந்த இரண்டிலுமே மேற்குலகின் பங்கு சுத்தமாக இல்லை.

கிணற்று தவளையின் மனநிலை

இயற்கை விவசாயத்துக்கு திரும்பியதை மட்டும் மனதில் வைத்து கொண்டு இலங்கையின் பொருளாதார நெருக்கடியை மக்கள் பார்ப்பதுதான் இதில் உள்ள சிக்கலே. இயற்கை விவசாயத்துக்கு திரும்ப முயன்றதால் நாட்டின் உணவுப்பாதுகாப்பு, விவசாய சமூகங்கள் ஆகியவற்றுக்கு பாதிப்புகள் ஏற்பட்டதென்னவோ உண்மைதான். எவ்வாறாயினும் இது மட்டமே இலங்கையின் நெருக்கடிக்கு ஒரேயொரு முழுமுதற் காரணமில்லை.

சொல்லப்போனால், உணவுப்பாதுகாப்பில் விழுந்து அடி மற்றும், பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டமை ஆகியனவெல்லாம் இரவோடிரவாக மேற்படி செயற்றிட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவேயாகும். சேதன விவசாயத்திற்கு வெற்றிகரமாக மாறிய பல்வேறு உதாரணங்கள் உலகளாவிய ரீதியாக உள்ளன. அங்கெல்லாம் இம்மாற்றம் மிகவும் நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டு நன்றாக வழிநடத்தப்பட்டு காலம் கணிக்கப்பட்டு நடாத்தப்பட்டிருந்தது. இலங்கையில் குறைந்தது இரவோடிரவாக இல்லாமல் சிறிது காலம் கொடுத்தாவது இம்மாற்றம் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம்.

இலங்கைக்கு ஏற்பட்ட நெருக்கடியோ, முன்பே குறிப்பிட்டது போல அதிகளவான ஏற்றுமதிகள், மிகமிக குறைவான வரி வருமானம் மற்றும் தாங்க முடியாத கடன் சுமை ஆகியவற்றால் விளைந்தது. மேற்படி நெருக்கடி 2021 இலிருந்தே வேகம் எடுக்க தொடங்கியதன் விளைவாகவுந்தான் இரசாயன உரத்தடை விதிக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட உணவுற்பத்தி குறைபாடு நிலைமையை மோசமாக்கியது. (உள்நாட்டு உற்பத்திகளுக்கு அதிக விலை, வெளிநாட்டிலிருந்து உணவு இறக்குமதி செய்வதற்கான செலவு உடனடி செலவாக இருத்தல், நாட்டின் முதன்மையான ஏற்றுமதி பயிரான தேயிலையும் உரத்தடையால் பாதிப்படைந்தது) தற்போது தடை நீக்கப்பட்டு விட்டபின் (இருப்பினும் உரங்கள் முன்னெப்போதும் இல்லா வகையில் மானியத்தில் வழங்கப்படுகின்றன) மேற்படி பாதிப்புகள் மெல்ல மெல்ல நீங்கி வருகின்றன.

இலங்கை இயற்கை விவசாயம் எனும் குளத்தில் ஆழமறியாமல் காலை விட்டது ஆபத்தான மிக மிக தவறானதொரு முடிவு, இம்முடிவு பேரழிவாக முடிந்திருக்க தக்க முடிவாகும். ஆனால் மேற்படி முடிவின் பின்னணியில் எந்தவொரு ‘பசுமைவாதிகளும்’ இருந்ததாக தெரியவில்லை. உள்ளூர் தேசியவாதம் மற்றும் தற்போதையை வெளிநாட்டு நாணய நெருக்கடியின் தொடக்கம் ஆகியனவே முக்கியமான காரணிகளாக இருந்திருக்க வாய்ப்புள்ளது.

முடிந்த முடிவாக

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மிகவும் சிக்கலானதொரு விடயமாகும், அதை நாங்கள் முன்பேயொரு கட்டுரையில் தெளிவாக விளக்கியுள்ளோம். பல சர்வதேச நிபுணர்களும் தத்தமது விருப்பிற்குரிய விடயங்களை இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குரிய மூல காரணமாக்க முயன்றிருக்கின்றனர்.

உண்மையில் இந்நெருக்கடி தொடர்ச்சியாக பல பத்தாண்டுகளாக வெற்றிகரமான அரசுகளால் உள்நாட்டில் கொண்டுவரப்பட்ட மோசமான கொள்கை முடிவுகளால் ஏற்பட்டதாகும். நிச்சயமாக சீனக்கடனும் ரஷ்ய-உக்ரேன் போரும் இந்நெருக்கடியில் பங்கு வகித்திருக்கின்ற போதிலும் இந்நெருக்கடியின் மூலம் நாட்டின் மோசமான பொருளாதார கொள்கைகளும் அதனால் ஏற்றுமதி செயற்றிறனில் ஏற்பட்ட தேக்கமும், ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி வருமானத்தின் பங்கின் வீழ்ச்சியும் ஆகும்.

எனவே இந்த குற்றஞ்சாட்டும் விளையாட்டால் இலங்கையினால் இந்நெருக்கடியிலிருந்து மீண்டு வர முடியாது. நாணய சபையொன்றினை அமைப்பதாலோ சீனாவையோ ரஷ்யாவையோ பசுமைவாதிகளையோ குறை கூறுவதாலோ உண்மையான காரணங்களிலிருந்து எமது கவனத்தை திருப்புவதை தவிர்த்து வேறெதையும் அடைந்து விட முடியாது. இலங்கை தனது பொருளாதார கட்டமைப்பிலுள்ள பலவீனத்தை முதலில் சரி செய்ய வேண்டும். (குறைவான அரச வருமானம் மற்றும் குறைவான ஏற்றுமதி வருமானம் போன்ற பலவீனங்கள்) இதற்கெல்லாம் முதலில் கொள்கைகளை வடிவமைப்பதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் எமது கவனத்தினை திருப்ப வேண்டும்.