Ask Watchdog #1: நாம் செல்ல வேண்டிய பாதை

Ask Watchdog #1: நாம் செல்ல வேண்டிய பாதை

இலங்கை நெருக்கடி பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அவற்றுக்கான எமது பதில்களும்

image
பதில்கள்: யுதஞ்சய விஜேரத்ன, நிசால் பெரியப்பெரும மொழிபெயர்ப்பு: செல்வராஜா கேசவன்

எமக்கு கேள்விகள் கிடைத்த ஒழுங்கிலேயே இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு அறிவூட்டி வதந்திகள் பரவாமல் தடுப்பதை நோக்காக கொண்டு இங்கு தரப்பட்டுள்ள கணக்கீடுகள் அண்ணளவானவையே, எனவே முழுமையான புரிதலுக்கு மேலதிக வாசிப்பை நாம் பரிந்துரைக்கின்றோம்.

எமக்கு கேள்விகளை அனுப்ப: டுவிட்டர்: https://twitter.com/TeamWatchDog இன்ஸ்ராகிராம்: http://instagram.com/teamwatchdog

எமது நேரமும், பாதீடும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளபடியால், எம்மால் முடிந்தவரை பதிலளிக்கவும் இதை தொடரவும் முயற்சிப்போம்.

Read this article in English | සිංහල | தமிழ்

1. வெற்றிகரமான பொருளாதரத்தை கொண்டுள்ள சீனா போன்ற நாடுகள் ஆடம்பர பொருட்கள், இலத்திரனியல் கருவிகள் மற்றும் அலங்கார பொருட்கள் ஏற்றுமதி மூலம் பெருமளவான வெளிநாட்டு நாணயங்களை ஈட்டுகின்றன. அவற்றை போல நாமும் செய்யலாமே?

சீனா மிகமிகப்பெரிய நாடு. அதன் சனத்தொகை 1.402 பில்லியன் (1402000000), அதாவது மொத்த உலக சனத்தொகையின் 18% சனத்தொகை சீனாவினுடையது. இலங்கையின் சனத்தொகையோ 21 (21000000) மில்லியன் மட்டுமே.

சனத்தொகை அடிப்படையில் சீனா இலங்கையை விட 66.76 மடங்கு பெரியது. இதை புரிந்து கொள்ள உலக பொருளாதார மன்றத்தின் இவ்வரைபடத்தை பாருங்கள்:

image

இதனால் சீனாவிடம் மிகப்பெரிய ஆளணி பலமும், இயற்கையாகவே அமைந்த மிகப்பெரிய உள்ளூர் சந்தையும் இருப்பது எமக்கு தெளிவாகிறது. இதனால்தான் சியோமி போன்ற நிறுவனங்கள் அங்கு உருவாகி செழித்து வளர்கின்றன. உங்கள் நாட்டில் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் உங்கள் உற்பத்திகளை உருவாக்கவும் கொள்வனவு செய்யவும் இருப்பார்களாயின், உங்களால் இலகுவாக பொருட்களை உற்பத்தி செய்வது, விற்பனை செய்வது, மட்டுமன்றி உற்பத்தி துறையில் தொடர்ந்து நிலைத்து நிற்கவும் முடியும். வெற்றி பெற்றுவிட்ட உள்ளூர் நிறுவனங்களால் பின்பு தமது எல்லையையும் தாண்டி வெளிநாடுகளிலும் தமது உற்பத்திகளை விற்க முடியும்.

இதற்கெல்லாம் மேலாக, நீண்ட நெடுங்காலமாக சீனா ஆற்றல் உற்பத்தியில் தன்னிறைவடைந்து இருப்பது அதன் தனித்துவமானதொரு பலமாக காணப்படுகிறது. அதனிடம் கணக்கிலடங்காத நிலக்கரி, நீர்மின், மற்றும் எண்ணெய் வளங்கள் காணப்படுகின்றன. எம் நாட்டுக்கும் சீனாவுக்கும் இடையே இருக்கின்ற இயற்கை வளங்களின் இருப்பின் வேறுபாடு காரணமாக எம்மால் சீனாவின் பாதையில் செல்வது பற்றி சிந்தித்துக்கூட பார்க்க முடியாது.

எனவே எம்மைப் போன்ற நிலையிலுள்ள நாடுகளைப் போன்றே எம்மாலும் செயற்படமுடியும்.

சீனாவின் பொருளாதாரம் ஒன்றும் ஒரே இரவில் கட்டியெழுப்பப்பட்டதில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 1978 தொடங்கி இன்றுவரை,அரசியலமைப்பு மற்றும் பொருளாதார ஊக்கப் பொதிகள் ஆகியனவற்றில் தொடர்ந்து நடந்து வருகின்ற,  சீர்திருத்தங்களின் பலனே இன்றைய சீனப்பொருளாதாரக்கட்டமைப்பு. ஏழ்மை நிலையிலிருந்து பலரை தூக்கி விட்ட அதே வேளையில் அதன் வழித்தடமோ மிகவும் கொடூரமானதும் சமநிலையற்றதும் (நகர மற்றும் கிராமங்ளுக்கிடையே) ஆகும்.

எனவே இவ்வழிமுறை நமக்கு சாத்தியமென்றாலும், அதற்கு சில தசாப்தங்களாவது எடுக்கும். ஆனால் நாமோ இரவில் வெளிச்சத்திலிருப்பதற்கே அல்லாட வேண்டிய நிலையில் தற்போது உள்ளோம். இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட வேறுபாட்டை மாத்திரம் வைத்தே எம்மை சீனாவுடன் ஒப்பிட்டு பார்ப்பது சாத்தியமில்லை என எம்மால் கூறிவிட முடியும்.

2. பல நாடுகள் வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதன் மூலம் வெளிநாட்டு பணத்தினை பெற்றுக்கொள்வதை போல நாமும் செய்யலாமே? (இதன் மூலம் வேலையில்லா பட்டதாரிகளுக்கும் வேலைகள் உருவாகும்)

நிச்சயமாக கல்வியை நம்மால் ஏற்றுமதி செய்ய முடியும். ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதரத்தில் 2014-2015 ஆண்டு காலப்பகுதியில் மட்டும் அண்ணளவாக 25.8 பில்லியன் பவுண்டுகள் வெளிநாட்டு மாணவர்களால் பங்களிக்கப்பட்டது. இலங்கையிலிருந்து ஒரு மாணவர் வெளிநாடொன்றுக்கு கல்வி கற்கச் செல்கையில் பணம் நிச்சயம் வெளியே செல்லும்.

எம்மிடமுள்ள கேள்வி என்னவென்றால் வெளிநாட்டிலிருந்து கல்வி கற்க மக்கள் ஏன் இங்கு வரவேண்டும் என்பதே.

உயர் தரக்கல்விக்காகவா? உலக பல்கலைக்கழகங்களின் மூன்று வெவ்வேறு தரப்படுத்தல்கள் இதோ: Times Higher Education, CWUR, TopUniversities. எமது பல்கலைக்கழகங்களின் இடத்தை பாருங்கள். நம்மில் பலர் இத்தரப்படுத்தல்களை ஏற்றுக்கொள்ளாவிடினும், பட்டமொன்றின் மதிப்பு தொடர்பாக நிலவுகின்ற பார்வை மிகவும் முக்கியமானது.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை நாட்டுக்குள் அனுமதிப்பது ஒரு சிறந்த தீர்வாக அமையலாம். இருந்தாலும் அதிலும் ஒரு சிறு சிக்கல் உள்ளது.

தனியார் பல்கலைக்கழகங்களை அனுமதிக்கும் திட்டமொன்றை 2010 இல் அரசு கொண்டிருந்தது. மொனாஷ் மற்றும் பீஜிங் அரச பல்கலைக்கழகம் உட்பட்ட 15 வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் பேச்சுவார்த்தைகளும் நடந்தன. இதன் விளைவாக, நாட்டின் 25 தேசிய பல்கலைக்கழகங்களிலும் போராட்டங்களும் அமைதியின்மையும் ஏற்பட்டன. கல்விக்காக அவர்கள் கடுமையாக உழைக்கின்ற நிலையில், இது இரண்டு அடுக்கு கட்டமைப்பொன்றை உருவாக்கி அனைத்து வளங்களும் தனியார் கல்விக்கே சென்று பொதுக்கல்விக்கு வளங்களே இல்லாது போகின்ற நிலையை ஏற்படுத்திவிடும் என்பதே அவர்களது கருத்தாக இருக்கிறது.

இது ஒரு சாத்தியமான ஒரு வழியாக இருந்தாலும் (இது மட்டுமே அனைத்து சிக்கல்களையும் தீர்த்து விடாது), நாம் போராட்டக்காரர்களின் குறைகளையும் உண்மையாக நிவர்த்தி செய்ய ஆவன செய்ய வேண்டும்.

3. இலங்கையின் டிஜிட்டல் கல்வியறிவு விகிதம் 46% ஆக உள்ளது. அதை பயன்படுத்தக்கூடிய தொழிற்துறைகளான வணிக செயன்முறை அயலாக்கங்கள் (வாடிக்கையாளர் சேவை மையங்கள், அலுவலக புற நிர்வாகம்) மற்றும் தகவல் தொழிநுட்ப சேவைகளை ஏன் நாம் ஊக்குவிக்கக்கூடாது?

அவர்களது சொற்களிலே டிஜிட்டல் கல்வியறிவு: ”கணினிக்கல்வியறிவின் வரைவிலக்கணம்: 5 தொடக்கம் 69 க்கு உட்பட்ட வயதுடைய ஒருவர் தனித்து கணினியை பயன்படுத்தும் வல்லமை கொண்டிருப்பின், அவர் கணினிக்கல்வி அறிவு பெற்றவர் எனக் கருதப்படுவார். உதாரணமாக 5 வயது சிறுவன் ஒருவனால் கணினி விளையாட்டொன்றினை விளையாடக்கூடியதாக இருந்தால் அவன் கணினிக்கல்வியறிவு பெற்றவன் ஆவான்.”

கணினியொன்றினை இவ்வாறு பயன்படுத்துவது எண்மக்கல்வியறிவென கருதப்படுதல் சரியான அளவீடாக இருக்காது, அதுவும் இன்றைய நிகழ்நிலை உலகில் இதுவொன்றும் பெரிய விடயமில்லை. LIRNEasia வின் ஆய்வொன்று இலங்கை பற்றிய மிகத்தெளிவான விளக்கத்தை அளிக்கிறது:

image

பலர் தம்மால் தகவல்களை தேடவும், கணக்குகளில் உள்நுழையவும், செயலி ஒன்றை நிறுவவும் முடியும் என்றிருக்கின்றார்கள். எனவே இந்த யோசனை ஆரம்பத்தில் நினைத்ததை விடவும் மிகச்சிறந்ததொன்றாகவே தென்படுகிறது.

இவ்வாறான சிறந்த யோசனைகள் பொதுவாக கவனத்தில் கொள்ளப்படுவதுண்டு. இலங்கையில் கணிசமான அளவு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன, சொல்லப்போனால் வணிக செயன்முறை அயலாக்கங்கள் (BPO) காரணமாக புதிதாக 300 நிறுவனங்கள் உருவாகியுள்ளன. இலங்கையானது அமெரிக்காவின் மிகச்சிறந்த முதல் 500 நிறுவனங்களான போச்சுன் 500 நிறுவனங்களின் அக்கரை நிரலாக்க மையமாக (Offshore development hub) திகழ்கிறது. குறிப்பாக கொழும்பானது வணிக செயன்முறை அயலாக்கங்களுக்கு சிறந்ததொரு இடமாக குறிப்பிடப்படுகிறது. அதனால் தனித்து நமது பொருளாதாரத்தை காவிச்செல்ல முடியாத போதிலும் அதனால் பலன்கள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

சிக்கலென்னவென்றால் மின்சாரமின்றி உங்களால் வணிக செயன்முறை அயலாக்கங்களை செயற்படுத்த முடியாது.

இந்த யோசனையை ஒட்டுமொத்தமாக தூக்கி எறிவதற்காக இதைச் சொல்லவில்லை. இதை நாம் நீண்ட காலமாக செய்து வருகின்றோம், இருந்த போதிலும் ஆற்றல், தொலைத்தொடர்புகள் மற்றும் பிற நவீன தொழிநுட்பங்களில் இது அதிகம் தங்கியுள்ளது என்பதை சுட்டிக்காட்டவே அவ்வாறு குறிப்பிட்டோம். அது மட்டுமின்றி இந்தியா, வங்காளதேசம் போன்ற பிற வணிக செயன்முறை அயலாக்கங்களை செய்துவரும் நாடுகளுடன் நாம் போட்டியில் உள்ளோம். இந்தியாவிடம் இத்துறையில் மில்லியன் கணக்கில் வேலை செய்பவர்கள் உள்ளனர். அவர்களில் சிலரால் வேலை செய்ய இயலாவிட்டால் அந்த இடைவெளியை நிரப்ப எத்தனையோ பேர் உள்ளனர்.

4. எரிபொருள் மூலமான மின் உற்பத்தி நிலைபேண்தகைமை அற்றது. நமது நாடு அளவுக்கதிகமாக சூரிய ஒளிபெறும் வெப்ப வலய நாடு. நாம் சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை தயாரிக்கலாமே? தேசிய மின் வலையமைப்பில் சூரிய ஒளி தகடுகளை இணைப்பதற்கு நிதி திரட்டலாமே (அல்லது மானியங்கள் தொடர்பில் சிந்திக்கலாமே)?

image

எரிபொருள் மூலமான மின் உற்பத்தி நிலைபேண்தகைமை அற்றது என்பதை நாங்களும் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம். நமக்கு மட்டுமல்ல இலங்கை மின்சார சபைக்கும் கூட அது தெரியும். நாட்டின் மின் உற்பத்தி, இலங்கை மின்சார சபையின் தொழிற்பாடு, மின்வெட்டுகள் ஏற்படக்காரணம் என்ன? என்பது தொடர்பில் அண்மையில் நாம் ஒரு ஆய்வுக்கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தோம். 2019 தொடக்கம் இலங்கை மி்ன்சார சபையின் உயர் மட்டம், ‘நாம் இதை நிலைபேண்தகைமை உடையதாக மாற்ற வேண்டும், இதை இலாபகரமானதாக மாற்ற வேண்டும்.’ என்பதைக் கூறிவருகிறது.

இலங்கை மின்சார சபைக்குள் சூரிய ஒளி மின்னுற்பத்திக்கு எதிர்ப்பு இருப்பதாகவும் கதைகள் உலாவருகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நமது சூரிய ஒளி மின்னுற்பத்தியை நோக்கிய பாதையில் சில தடங்கல்கள் உள்ளன.

முதலாவதாக சூரிய ஒளி மின்னுற்பத்தி தொடர்ச்சியானது அல்ல. எனவே மின்னை சேமித்து வைத்து, தேவையான போது பயன்படுத்த மின்கலங்கள் தேவை அல்லது பகல் வேளையில் சூரிய ஒளியை பயன்படுத்தியும் இரவில் மின் பிறப்பாக்கிகளை பயன்படுத்தியும் மின்னுற்பத்தியை மேற்கொள்ள வேண்டும்.

இரண்டாவது தடங்கல், நாம் சூரிய ஒளித்தகடுகள், மின்திசைமாற்றிகள் மற்றும் மின்கலங்களை உற்பத்தி செய்வதில்லை, எனவே அவற்றை இறக்குமதி செய்தாக வேண்டும். அதற்கு டொலர்கள் தேவை.

இவ்வாதங்களில் அடிக்கடி எடுத்தாளப்படும் டெஸ்லா ஆற்றல் சுவர் (Tesla Powerwall) பற்றி சிறிது பார்ப்போம்.

2020 இல், இலங்கையின் அதிகபட்ச மின் தேவையானது, 2,717 மெகாவாற்றாக (MW) இருந்தது. ஒரு மெகாவாற் 1000 கிலோவாற்றுக்கு சமமாகும். எனவே 2,717 மெகாவாற் 2,717,000 கிலோவாற்றுக்கு சமம். அவ்வாறெனில், நமக்கு மின்னை சேமித்து வழங்க 271,700 டெஸ்லா மின் சுவர்கள் தேவை. அவற்றின் பெறுமதி 2717,000,000 டொலர்கள் அதாவது 2.717 பில்லியன் டொலர்கள்.

அது கூட நமக்கு போதுமானதில்லை. இக்கணக்கை மின்சுவரின் அதிகபட்ச மின் வெளியீட்டை வைத்தே கணக்கிட்டுள்ளோம். உள்ளபடியே தொடர்ச்சியான மின் வெளியீடு அதன் பாதியளவே இருக்கும். எனவே அப்பெறுமதியினை இருமடங்காக்க வேண்டும். குறைந்தது 43 பில்லியன் டொலர்கள் தேவை. அத்துடன் கட்டுமானம், மின்வடங்கள் இடல், கட்டமைப்புகளை உண்டாக்கல்,... இன்னும் எத்தனையோ செலவுகளுள்ளன.

இன்னும் சூரிய ஒளித்தகடுகளின் செலவுகளை நாம் கணக்கிலேயே கொள்ளவில்லை.

சூரிய ஒளி மின்னுற்பத்தி உயர்ந்ததொரு நோக்கம் ஆயினும், அதற்குரிய பணம் நம்மிடம் தற்போது இல்லை. எமது டொலர் கையிருப்பு தங்கக்கையிருப்பையும் சேர்த்து 2 பில்லியன் டொலர்களை விடக்குறைவாகவே உள்ளது. யாராவது 43 பில்லியன் டொலர்களை தானமாக தந்தால் ஒழிய இதை செயற்படுத்துவதற்கு நீண்ட காலம் எடுக்கும்.

ஏற்கனவே உள்ள மேற்கூரையில் சூரிய மின்னுற்பத்தி போன்ற திட்டங்களையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அவை எதுவுமே ஒட்டுமொத்த மின்கட்டமைப்புக்கும் பதிலீடாக முன்னெடுக்கப்படவில்லை. இவற்றுக்கு பணமும், நேரமும் அதிகளவில் செலவிட வேண்டி வரும் என்பதே வெளிப்படை.