தமிழில்: #AskWatchdog - 05

தமிழில்: #AskWatchdog - 05

@July 7, 2022

Read this article in English | සිංහල| தமிழ்

image
ஆய்வு : உமேஷ் மொரமுதலி செம்மையாக்கம் : ஆயிஷா நாஸிம் மொழிபெயர்ப்பு : செல்வராஜா கேசவன்

நீங்கள் கேட்டவை:

1. நேரலையிட்டமைக்காக உங்களை சிறைப்படுத்த முடியுமா?

கடந்த ஜூன் இருபதாந்திகதி, கோட்டாகோகமவுக்கு அருகில், செயற்பாட்டாளர்கள் சிலரை பொலிசார் கைது செய்து கொண்டிருந்த காட்சியைக் காணொளிப்பதிவு செய்த இளைஞர் செயற்பாட்டாளர் அனுருத்த பண்டார பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். சட்டவிரோதமாக ஒன்றுகூடியமைக்காகவும், கடமையை செய்ய விடாது தடுத்தமைக்காகவும் தன்னை சிறைப்படுத்துவதாக பொலிசார் கூறியதாக பண்டார கூறுகின்றார். நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

பொலிசாருக்கு தமது கடமையை செய்ய விடாது தடுக்கும் தனிநபர்களை கைது செய்யும் அதிகாரத்தை சட்டம் வழங்கியுள்ளது. திறன்பேசிகளின் காலத்திற்கு முன்பே அறிமுகம் செய்யப்பட்டபடியால், சட்டத்தில் காணொளி பதிவுசெய்தலை பற்றியோ நேரலையிடலைப்பற்றியோ எதுவிதமான சிறப்பான குறிப்புகளும் இல்லை. கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் குற்றஞ்சாட்டப்பட்டவர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவேண்டும் (சில விதிவிலக்குகள் உள்ளன). குறித்த நபர் பொலிசாரை கடமையைச் செய்யவிடாது தடுத்ததை அல்லது சட்டவிரோதமாக ஒன்றுகூடியதை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லாதுவிடின், அவர் விடுதலை செய்யப்படுவதுடன், அவருக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி செய்யப்படும்.

ஏதாவது ஆதாரங்களிருப்பின், நீதவான் மேலதிக விசாரணைக்கு அனுமதி வழங்கவோ, அல்லது நேரடியாக நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவோ முடியும். முன்வைக்கப்பட்ட ஆதாரத்தை பொறுத்து, பிணை வழங்குவதா இல்லையா என்பதையும் நீதவான் முடிவு செய்வார்.

ஒருவரது கைதுக்கான காரணத்தை அவரை கைது செய்யும் போது பொலிசார் தெரிவிப்பது கட்டாயமாகும்: இது தனிநபர் உரிமையினுள் உள்ளடங்கும். (அரசியலமைப்பின் பிரிவு 13). பொலிஸ் நிலையத்தில் இருக்கும் போது கூட வழக்கறிஞர் ஒருவரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் உரிமையை எந்தவொரு தனிநபருக்கும் சட்டம் வழங்கியுள்ளது. இதை கோருவதற்கான உரிமை அனைவருக்கும் உண்டு.

இங்கு குறிப்பிடப்படும் சட்ட ரீதியான சிக்கல்களிற்கான விளக்கங்களை தந்தவர் வழக்கறிஞர் எர்மிசா தேகல்

2. நாம் சீனாவிடம் எவ்வளவு கடன்பட்டுள்ளோம்?

இலங்கை சீனாவுக்குச் செலுத்த வேண்டிய கடன் தொடர்பில் அடிக்கடி தவறுதலாக அறிக்கையிடப்படுகிறது. இலங்கையின் மொத்த வெளிநாட்டுக்கடனில் 10% சீனாவுக்குச் செலுத்த வேண்டியது என சில அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இன்னொரு அறிக்கை சீனாவுக்கான கடன் 15% எனக்கூறுகிறது. ஆனால், எமது பகுப்பாய்வின்படி 2021 இன் இறுதியில் இலங்கையின் சீனாவுக்கான கடன் அரசின் ஒட்டுமொத்த வெளிநாட்டுக்கடனில் 20% ஆகக்காணப்படுகிறது.

👉🏽
வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் தரவின்படி, 2021 இன் இறுதியில், அரசின் மொத்த வெளிநாட்டுக்கடன் 35.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும்போது, சீனாவிற்கான மொத்தக்கடன் 7.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

இலங்கையின் கடன் நிலுவை பங்கு - 2021 இன் இறுதியில்

இலங்கையின் சீனக்கடன் பெறுமதி குறைத்து மதிப்பிடப்படுவதற்குரிய முதன்மைக்காரணம், சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடம் (EXIM Bank) பெறப்பட்ட சில கடன்கள் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் (SOEs) கடன்கள் என பதிவு செய்யப்பட்டமைதான். வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையில் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் கடன்கள் சேர்க்கப்படவில்லை. 2021 இன் இறுதியில், அண்ணளவாக 1.55 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் கடன்கள் அரசின் கடனில் உள்ளடக்கப்படாமல் காணப்படுகின்றன. இலங்கை துறைமுக அதிகார சபை (SLPA), இலங்கை மின்சார சபை (CEB), மற்றும் இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை (CAA) ஆகியன இவ்வரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் பட்டியலில் உள்ளடங்குகின்றன. அம்பாந்தோட்டை துறைமுகம், நுரைச்சோலை அனல்மின் நிலையம், மற்றும மத்தள சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் கட்டுமானத்துக்காக பெறப்பட்ட கடன்கள் அரசின் வெளிநாட்டுக்கடனில் உள்ளடக்கப்படாமல் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் கடன்கள் என பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலதிகமாக 2018 இலிருந்து இலங்கை, சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து (CDB) வெளிநாட்டு நாணயத்தவணை நிதியிடல் (FCTF) கடன்களை பெற்றுவந்துள்ளது. 2021 இன் இறுதியில், சீன அபிவிருத்தி வங்கிக்கு செலுத்த வேண்டிய வெளிநாட்டு நாணயத் தவணை நிதியிடல் கடன் பெறுமதி மட்டும் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். வெளிவளத்துறையின் வகைப்பாட்டில் இக்கடன்கள் சந்தைக் கடன்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் கடன் மற்றும் சீன அபிவிருத்தி வங்கிக்கடன் ஆகியனவும் உள்ளடக்கப்பட்டால் இலங்கையின் மொத்த சீனக்கடன் பெறுமதி 7.1 பில்லியன் அமெரிக்க டொலரை தொடும்.

நாடொன்றின் மீது அதன் முறி உரிமையாளர்களால் வழக்கு தொடரப்பட்டால் என்ன நடக்கும்?

எளிய பதில்: நீதிமன்றிற்கு செல்லவேண்டியிருக்கும் என்பதைத்தவிர எங்களுக்கும் வேறொன்றும் தெரியாது.

இது ஒருபுறமிருக்க நம்மீது வழக்கு தொடரப்பட்டதன் பின்னணியை பார்ப்போம்.

வரும் ஜூலை 25 இல் காலக்கெடுவைக் கொண்ட 257 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பன்னாட்டு இறைமுறிகளிற்குரிய மீள்கொடுப்பனவை முழுமையாக வழங்க வலியுறுத்தி இலங்கை அரசின் மீது அமெரிக்காவைச் சேர்ந்த ஹமில்ரன் ரிசர்வ் வங்கி வழக்குத்தொடுத்துள்ளது. இவ்வருடம் ஜூன் மாதம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இந்த பன்னாட்டு இறைமுறி (US85227SAK24) இலங்கை மத்திய வங்கியினால் (CBSL) வழங்கப்பட்டுள்ளது. முதலீட்டிற்கான முழுமையான கொடுப்பனவை வேண்டி நிவ்யோர்க் பெடரல் நீதிமன்றில் இவ்வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் கடன்களை மீளொழுங்குபடுத்தும் நோக்கில் கடந்த ஏப்ரல் 12 அன்று பன்னாட்டு இறைமுறிகள் உட்பட்ட அனைத்து வெளிநாட்டு கடன்களையும் மீளச்செலுத்த இயலாத கையறுநிலையை தான் அடைந்துவிட்டதாக இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. கடந்த ஜூன் மாதம் கடன் வழங்குனர்களிடம் (நாடுகள் மற்றும் பன்னாட்டு இறைமுறி உரிமையாளர்கள்) பேரத்தில் ஈடுபட, கிளிப்போஃர்ட் சான்ஸ் வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை, லசார்ட், பிரான்ஸ் ஆகிய நிறுவனங்கள் அரசினால் சட்ட மற்றும் பொருளாதார ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டன.

இலங்கையின் தற்போதைய வெளிநாட்டு நாணயக்கையிருப்பு கிட்டத்தட்ட பூச்சியம் ஆகும். எனவே வெளிநாட்டு கடன்களை மீளச்செலுத்தும் நிலையில் இலங்கை இல்லை. பன்னாட்டு இறைமுறி உரிமையாளர்கள் உட்பட்ட கடன் வழங்குனர்கள் இவ்வாறான கையறு நிலையையடைந்த நாடுகளுடன் கடனை மீளக்கட்டமைப்பதற்காக ஒரு உடன்பாட்டுக்கு வருவார்கள். இதன் பொருள் கடனை மீளச்செலுத்துவதற்கான கால அவகாசம் ஒன்று இவ்வாறான நாடுகளுக்கு வழங்கப்படும் என்பதே. ஜப்பான் உள்ளிட்ட பரிஸ் கழக நாடுகளிடம் இருந்து பெறப்பட்ட இருதரப்பு கடன்கள் பரிஸ் கழக உறுப்புநாடுகளின் இசைவுடன் மீளொழுங்கமைக்கப்படலாம். சீனா அல்லது இந்தியா போன்ற பரிஸ் கழக உறுப்புரிமையற்ற நாடுகளிடம் பெறப்பட்ட கடன்கள் குறித்த நாட்டின் இசைவுடன் மீளொழுங்கமைக்கப்படலாம்(எ+கா: மத்தள விமானநிலைய கட்டுமானத்திற்காக பெறப்பட்ட கடன் உட்பட சீன ஏற்றுமதி இறக்குமதி வங்கியிடமிருந்து பெறப்பட்ட கடன்கள் அனைத்தையும் மீளொழுங்குபடுத்த குறித்த வங்கியின் இசைவு முக்கியம்). எவ்வாறெனினும், பன்னாட்டு இறைமுறி உரிமையாளர்களிற்கு இது பொருந்தாது.

image

இலங்கை பன்னாட்டு இறைமுறிகளை வெளியிட்ட போது அவை பன்னாட்டு வங்கிகளாலும் பொருளாதார நிறுவனங்களாலும் கொள்வனவு செய்யப்பட்டன. பொதுவாக ஒரு வங்கியோ நிறுவனமோ ஒட்டுமொத்த பன்னாட்டு இறை முறிகளையும் கொள்வனவு செய்வதில்லை. எடுத்துக்காட்டுக்கு இலங்கை மத்திய வங்கி 1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பன்னாட்டு இறைமுறியை வெளியிட்டிருப்பின் ஒரு வங்கி 250 மில்லியனை கொள்வனவு செய்திருக்கலாம், இன்னொரு வங்கி 200 மில்லியனை கொள்வனவு செய்திருக்கலாம், இவ்வாறாக அந்த பட்டியல் நீண்டு செல்லும். பிறகு அவ்வங்கிகளோ பொருளாதார நிறுவனங்களோ அவற்றை பிற முதலீட்டாளர்களிற்கோ வங்கிகளுக்கோ மீள் விற்பனை செய்யும். எனவே ஒரு பன்னாட்டு இறைமுறி பல்வேறுபட்ட நபர்களாலோ நிறுவனங்களாலோ உரிமைகொள்ளப்பட்டிருக்கும், அதை மீளொழுங்குபடுத்த பெரும்பான்மை முறி உரிமையாளர்களின் இசைவு தேவைப்படும்.

இங்குதான் கூட்டு நடவடிக்கை உட்பிரிவுகள் (CACs) முக்கியத்துவம் பெறுகின்றன. இவை இறைமுறிகள் கொடுப்பனவை மீளொழுங்குபடுத்த மீப்பெரும்பான்மை கடன் வழங்குனர்களிற்கு வழிவகைசெய்கிறது. இங்கு குறிப்பிடப்படும் மீப் பெரும்பான்மை என்ற பதம் இறைமுறிகளின் தன்மைக்கேற்ப மாறுபடக்கூடியது. முறி ஒப்பந்தம் ஒட்டுமொத்த முறிப்பெறுமதியில் 75% இனை மீப்பெரும்பான்மை என வகுத்திருந்தால், முறியின் 75% பெறுமதியின் உரிமையாளர்களின் இசைவே முறி மீள்கொடுப்பனவை மீளொழுங்குபடுத்த போதுமானது. 25% முறி உரிமையாளர்கள் மீள்கொடுப்பனவை வலியுறுத்தினாலும் கூட கூட்டு நடவடிக்கை உட்பிரிவுகள் அக்கோரிக்கையை மேவிவிடும். கூட்டு நடவடிக்கை உட்பிரிவுகள் சில சமயங்களில் தனியொரு முறிக்கும் வேறு சில சமயங்களில் நிலுவையிலுள்ள அனைத்து இறைமுறிகளிற்கும் பொருந்தும்.

இவையெல்லாம் இலங்கையின் பன்னாட்டு இறைமுறிகளிற்கும் பொருந்தும். கடந்த ஜூன் 21 இல், இலங்கையின் பன்னாட்டு இறைமுறிகளை வைத்திருக்கும் 30 சொத்து முகாமையாளர்கள் பன்னாட்டு இறைமுறி மீள்கொடுப்பனவை மீளொழுங்குபடுத்துவது தொடர்பில் கலந்துரையாட கடன்வழங்குனர் குழு ஒன்றை தொடங்கியுள்ளதாக அறிவித்தனர். பன்னாட்டு இறைமுறியின் எத்தனை வீத பங்கினை அவர்கள் வைத்துள்ளனர் என்பதைப்பற்றி இப்போதுவரை அக்குழுவினர் வெளிப்படுத்தவில்லை. கூட்டு நடவடிக்கை உட்பிரிவுகளில் வரையறுத்துள்ள மீப்பெரும்பான்மை அளவு முறிப்பங்கை இக்குழு வைத்திருந்து, இப்பன்னாட்டு இறைமுறியின் (இலங்கையின் பன்னாட்டு இறைமுறிப்பெறுமதி 12.5 அமெரிக்க டொலர்கள்) மீப்பெரும்பான்மை உரிமையாளர்கள் முறியின் மீள்கொடுப்பனவை மீளொழுங்குபடுத்த இசைந்தால், அது மற்றைய கடன் வழங்குனர்கள் முழுமையான மீள்கொடுப்பனவை வலியுறுத்தி எடுத்திருக்கும் சட்டநடவடிக்கையை மேவிவிடும்.

எவ்வாறாயினும் கூட்டு நடவடிக்கை உட்பிரிவுகள் தனியொரு முறிக்கும் பொருந்துமாயின் இலங்கையின் நிலை கவலைக்கிடமானதாகும். ஏனெனில் தனியொரு முறி உரிமையாளரோ ஒரு சில உரிமையாளர்களோ நினைத்தால் கூட குறித்த முறியின் மீளொழுங்குபடுத்தலை இடைநிறுத்தி விட முடியும். 2022 ஜூலையில் முதிர்வடையும் பன்னாட்டு இறைமுறியின் கூட்டு நடவடிக்கை உட்பிரிவுகளிற்கான அணுகல் எமக்கில்லை. எனவே ஜூன் 21 இல் தொடுக்கப்பட்ட வழக்கு தொடர்பில் எம்மால் கருத்து தெரிவிக்க முடியாதுள்ளது. எவ்வாறாயினும் 2015 இற்கு முன் வெளியிடப்பட்ட கூட்டு நடவடிக்கை உட்பிரிவுகள் முறி மீளொழுங்குபடுத்தலுக்கு 75% முறி உரிமையாளர்களின் இசைவை வலியுறுத்துவதாக புளூம்பேர்க் சஞ்சிகை குறிப்பிடுகிறது. எனவே ஒரு முதலீட்டாளர் முறியின் 25% இற்கு மேற்பட்ட பெறுமதியை வைத்திருப்பாராயின் குறித்த முறியின் மீளொழுங்குபடுத்தலை இடைநிறுத்தி முழுமையான கொடுப்பனவை வலியுறுத்தும் வல்லமை அவருக்குண்டு. இலங்கை மீது ஹமில்ரன் தொடுத்த வழக்கில், அவர்களிடம் ஜூலை மாதம் முதிர்வடைகின்ற 257 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பன்னாட்டு இறைமுறி உள்ளது. அது முறியின் ஒட்டுமொத்த பெறுமதியின் 25% இலும் அதிகம், குறித்த பன்னாட்டு இறைமுறி அதற்கு மட்டும் பொருந்தும் கூட்டு நடவடிக்கை உட்பிரிவுகளை கொண்டிருப்பின் வழக்கானது மேலும் தொடரும்.

மேலதிக வாசிப்பிற்கு

எங்களிடம் கேளுங்கள்!

ட்விட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்ராகிராமில் #AskWatchdog இனைப் பயன்படுத்தியோ அல்லது எம்மை ரக் செய்வதன் மூலமே உங்கள் கேள்விகளை கேளுங்கள்.

👥
Watchdog is an open-source research collective. Learn more about us here. Watchdog යනු විවෘත මූලාශ්‍ර පර්යේෂණ සාමූහිකයකි. අපි ගැන තව දැනගන්න. Watchdog ஒரு திறந்த மூல ஆய்வு நிறுவனம். எம்மைப் பற்றிய அறிய