தமிழில் #AskWatchdog 08

தமிழில் #AskWatchdog 08

image
ஆய்வு : உமேஷ் மொரமுதலி செம்மையாக்கம் : ஆயிஷா நாஸிம் மொழிபெயர்ப்பு : செல்வராஜா கேசவன்

@September 28, 2022

Read this article in English | සිංහල | தமிழ்

நீங்கள் கேட்டவை:

சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது நாம் ஊழியர் மட்ட உடன்பாட்டுக்கு வந்துவிட்டபடியால், எமக்கு உடனடியாக பணம் கிடைக்க வாய்ப்புள்ளதா?

எங்கள் பதில்:

இல்லை. சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக குழு இலங்கையின் நிதிக் கோரிக்கைக்கு ஒப்புதல் வழங்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.

செப்டம்பர் 01 ஆம் திகதி, விரிவான நிதி உதவித்திட்டம் (EFF) ஒன்றுக்கான ஊழியர் மட்ட உடன்படிக்கையை தாம் எட்டிவிட்டதாக இலங்கை அரசும் சர்வதேச நாணய நிதியமும் அறிவித்தன. விரிவான நிதி உதவித்திட்டத்தின் கீழ், 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க சர்வதேச நாணய நிதியம் முனைகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக குழு இவ் உடன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கிய பின்னரே இந்தப்பணம் வழங்கப்படும். இந்நிதி உதவியானது தவணை தவணையாக வழங்கப்படும். அதில் முதல் தவணை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக குழுவின் ஒப்புதல் கிடைத்தவுடன் வழங்கப்படும். சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக குழு உடன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கி பணத்தை வழங்க எவ்வளவு காலம் எடுக்கும் என தற்போதைக்கு தெளிவாக கூற முடியாதுள்ளது. இது, இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள் ‘‘நிதி உறுதிமொழி’’ எனப்படும் கடன் நிவாரணம் வழங்க முன்வருதல் போன்ற பல்வேறு காரணங்களில் தங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக குழு, இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் குறிப்பாக ஊழியர் மட்ட உடன்படிக்கையின் கீழான சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு கலந்துரையாடல்களின் முன்னேற்றம் தொடர்பில் உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளிக்க முன் கவனமாக ஆராயும். சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சித்திட்டம் நிர்வாக குழு உடன்படிக்கைக்கு ஒப்புதல் வழங்கியவுடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட உடன்படிக்கைக்கு இலங்கை வருவதென்பது, இலங்கை அரசு பொருளாதார சீர்திருத்தங்களை செய்ய தேவையான முனைப்பை கொண்டுள்ளது மற்றும் அதற்குரிய விரிவான திட்டத்தை முன்வைத்துள்ளது என சர்வதேச நாணய நிதிய ஊழியர்கள் நம்புகிறார்கள் என்பதை காட்டுகிறது. சர்வதேச நாணய நிதிய ஊழியர்களின் பார்வையில், அரசின் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட சீர்திருத்தங்கள் பருப்பொருளியல் நிலைத்தன்மை, உறுதித்தன்மை மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடையவும் கடன் வழங்குனர்கள் போதுமான அளவுக்கு கடன் நிவாரணம் அளிக்க முன்வருவதால் நாட்டின் கடன் மட்டத்தை நிலைபேறானதாக பேணவும் போதுமானதாக உள்ளது. ஊழியர் மட்ட உடன்படிக்கை பெருமளவில் இலங்கை அரசின், பொருளாதார சீர்திருத்தங்கள், பணவீக்கம், இருப்பு குவிப்பு, பாதீட்டு பற்றாக்குறை மற்றும் கடன் மட்டங்கள் தொடர்பான உறுதிமொழிகள் மற்றும் இலக்குகள் தொடர்பிலேயே பெருமளவு கவனம் செலுத்துகிறது.

இந்நிகழ்ச்சித்திட்டத்தின்படி, இலங்கை தனது வருவாய்களை சரியாக பயன்படுத்தல் மற்றும் கடன் நிவாரணம் ஆகியவற்றின் மூலம் சில கடன் நிலைபேண்தகு இலக்குகளை அடையவேண்டும். இவ்விலக்குகளை அடைய கடன் மறுசீரமைப்புகள் மூலம் கடன் சுமையை குறைப்பது அவசியம் என்பதோடு, இதன் மூலம் இலங்கையினால் கடன் நிலைபேண்தகைமையை அடைய முடியும் என காட்டவும் முடியும். கடன் மீள்கொடுப்பனவு சுமையினை குறைக்க, இலங்கைக்கு கடன் கொடுத்தோர் கடன் கொடுத்த தொகையிலிருந்து ஒரு பகுதியை தள்ளுபடி செய்யவும் வட்டி கொடுப்பனவுகளை குறைக்கவோ கடன் மீள்கொடுப்பனவு காலத்தை கூட்டவோ ஒப்புதல் அளிக்க வேண்டும். கடன் நிவாரணம் வழங்கப்படக்கூடிய பொதுவான வழிமுறைகளாக இவையே காணப்படுகின்றன. கடன் வழங்கியோர் மேற்படி வழிமுறைகளில் ஒன்றோ அல்லது பலவற்றின் மூலமோ போதுமான அளவுக்கு கடன் நிவாரணம் வழங்காமல், நம்மால் கடன் நிலைபேண்தகு நிலையை அடைய முடியாது. எனவே, இலங்கைக்கு கடனளித்தோர் கடன் நிவாரணம் தர ஒப்புதல் அளிக்காத வரை (கடன் மறுசீரமைப்பு) சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக்குழு பணத்தை வழங்கப்போவதில்லை.

நமக்கு கடன் அளித்தோர் கடன் மறுசீரமைப்புக்கு ஒப்புதலளிக்க இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும்? எம்மிடம் இதற்கு பதில் இல்லை. இதற்கு 03 மாதம் தொடங்கி ஒரு வருடம் வரை எடுக்கலாம், அல்லது அதை விட அதிகமாயும் இருக்கலாம். உதாரணமாக, சாம்பியா நாட்டிற்கு இச்செயன்முறைக்கு ஒரு வருடம் தேவைப்பட்டது. இதன் பலனாக, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக குழு, 2021 டிசம்பரில் சாம்பியாவுடன் எட்டப்பட்ட ஊழியர் மட்ட உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளிக்க 09 மாதங்கள் எடுத்துக்கொண்டது. நிர்வாக குழுவின் ஒப்புதல் ஆகஸ்ட் 31 இல் கிடைக்கப்பெற்றது. ஜூலை 30 வரை சாம்பியா நாட்டுக்கு கடன் கொடுத்தோர் இது தொடர்பில் ஒரு உடன்பாட்டுக்கு வரமுடியாமல் இருந்ததே இதற்கு முக்கிய காரணம்.

அண்மையில் விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகள் என்னென்ன, அவற்றால் எவ்வாறான பாதிப்புகள் ஏற்படும்?

எங்கள் பதில்:

கடந்த மாதம் நாட்டிலிருந்து வெளிநாட்டு நாணயம் வெளிச் செல்வதை தடுக்க அரசாங்கம் பல்வேறுபட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

ஆகஸ்ட் 23 இலிருந்து 300 பொருட்களின் இறக்குமதிகள் தடை செய்யப்படுவதாக நிதி அமைச்சு வர்த்தமானியொன்றை ஆகஸ்ட் 22 இல் வெளியிட்டிருந்தது. இப்பொருட்களில் பல்வேறு வகையான உணவுப்பொருட்கள், அழகுசாதன பொருட்கள், இலத்திரனியல் கருவிகள் மற்றும் சில மூலப்பொருட்களும் உள்ளடக்கம். தமது செயற்பாடுகளில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என,  இம்முடிவுக்கு வணிகங்களிடமிருந்து பலத்த எதிர்ப்புகள் கிளம்பின.

இவ்வெதிர்ப்புகளின் பலனாக, நிதி அமைச்சு 159 பொருட்களின் மீது விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி தடையினை நீக்கி மற்றுமொரு வர்த்தமானியை வெளியிட்டது. இவற்றுள் மடிக்கணினிகள், கணினி உதிரிப்பாகங்கள், தையற்பொறிகள், குளிரூட்டிகள் மற்றும் தரை ஓடுகள் போன்றனவும் உள்ளடங்கும்.

இவ்வர்த்தமானி, ஏனைய தடை செய்யப்பட்ட பொருட்களையும் குறிப்பிட்ட சில பயன்பாடுகளுக்கு மாத்திரம் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டதிகாரியின் ஒப்புதலுடன் இறக்குமதி செய்து கொள்ள அனுமதி அளித்துள்ளது. பொருட்களின் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி  கட்டுப்பாடுகள் கணிசமான அளவுக்கு செப்டம்பர் 09 இல் வெளியிடப்பட்ட வர்த்தமானி மூலம் தளர்த்தப்பட்டு விட்ட போதும், குளியலறை பீங்கான் பொருட்கள் மீது அரசு இறக்குமதி தடையை விதித்துள்ளது.

தற்போது வரை, அண்ணளவாக 150 பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் யோகட், சொக்கலேற் போன்ற தின்பண்டங்களும், குளியலறை பொருட்கள் போன்ற கட்டுமான பொருட்களும் அழகு சாதன பொருட்களும் வாசனை திரவியங்களும் தகவல் தொடர்பாடல் உபகரணங்களும் இலத்திரனியல் பொருட்களும் உள்ளடங்குகின்றன. இதனால் விளங்குவது என்ன?

குறிப்பிட்ட பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படும் போது, அவற்றின் பற்றாக்குறை சந்தையில் ஏற்படுகிறது. இதன் விளைவாக அவற்றினதும் அவற்றுக்கு மாற்றீடாக விளங்கும் பொருட்களினதும் விலைகள் தாறுமாறாக அதிகரிக்கும். உதாரணமாக வெளிநாட்டு வாசனை திரவியங்கள், அழகு சாதன பொருட்கள், உடைகள், மற்றும் அணிகலன்கள் போன்றவற்றிற்கு வழங்கல்கள் குறைவாகவே இருக்கும், அதன் விளைவாக அவற்றின் விலைகள் மென்மேலும் அதிகரிக்கும்.

உற்பத்தி செயன்முறையில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் நிலையோ இதிலிருந்து முற்றிலும் வேறுபடும். உதாரணமாக கட்டுமான பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் தடை, கட்டுமானத்தின் செலவை மட்டும் அதிகரிப்பதோடு நிற்காது சில கட்டுமானங்களை இடைநிறுத்தவும் செய்யும்.

சில பொறிகளினதும் மூலப்பொருட்களினதும் மீதான இறக்குமதி தடை நீடிக்கின்ற அதே வேளையில், தொழிற்துறை அமைச்சின் செயலாளரின் பரிந்துரையின் மூலம் அவற்றை நாட்டுக்குள் கொண்டு வர முடியும். இது பொறிகள் மற்றும் மூலப்பொருட்களின் இறக்குமதியை கடினமாக்குவதுடன் காலதாமதத்துக்கும் உட்படுத்தி உற்பத்தியிலும் தாமதத்தை ஏற்படுத்தும்.

மேலதிக வாசிப்பிற்கு

எங்களிடம் கேளுங்கள்!

முகநூல், ட்விட்டர், மற்றும் இன்ஸ்ராகிராமில் #AskWatchdog இனைப் பயன்படுத்தியோ, நேரடியாக எமக்கு செய்தி அனுப்பியோ, அல்லது எம்மை ரக் செய்வதன் மூலமே உங்கள் கேள்விகளை கேளுங்கள்.

👥
Watchdog is an open-source research collective. Learn more about us here. Watchdog යනු විවෘත මූලාශ්‍ර පර්යේෂණ සාමූහිකයකි. අපි ගැන තව දැනගන්න. Watchdog ஒரு திறந்த மூல ஆய்வு நிறுவனம். எம்மைப் பற்றிய அறிய