தமிழில்: #AskWatchdog - 06

தமிழில்: #AskWatchdog - 06

@July 27, 2022

Read this article in English | සිංහල | தமிழ்

image
ஆய்வு : உமேஷ் மொரமுதலி செம்மையாக்கம் : ஆயிஷா நாஸிம் மொழிபெயர்ப்பு : செல்வராஜா கேசவன்

நீங்கள் கேட்டவை:

நிதியமைச்சர் ஒருவரின்றி மத்திய வங்கி தொழிற்படமுடியுமா?

எமது பதில்:

எளிய பதில்: ஆம் விளக்கம்

இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சின் கீழ் வருகின்ற போதிலும், அதன் தலைமை, நிதி அமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதியினால் நியமனம் செய்யப்படும் ஆளுநரின் கீழ் வருகிறது.

இலங்கை மத்திய வங்கியின் தீர்மானங்கள் யாவும் ஐந்து பேர் கொண்ட நாணயச் சபையினாலேயே எடுக்கப்படுகின்றன. இந்த ஐவரில் இலங்கை மத்திய வங்கி ஆளுநர், திறைசேரிச் செயலாளர், மற்றும் அரசியலமைப்பு சபையினால்  ஏற்றுக்கொள்ளப்பட்டு, நிதியமைச்சரின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதியால் நியமிக்கப்படும் மூவர் ஆகியோர் உள்ளடங்குவர். நாணயச் சபையானது மத்திய வங்கியின் முகாமை, தொழிற்பாடு, மற்றும் நிர்வாகம் ஆகியவற்றுக்கான அதிகாரம், பொறுப்பு மற்றும் செயற்பாடுகளை 1948 ஆண்டின் 58 ஆம் இலக்க நாணயவியல் சட்டத்தின் கீழ் கொண்டுள்ளது. நாணயவியல் சட்டத்தின்படி நாணயச் சபையானது நிரந்தர அதிகார உரித்துடையது. இதன்படி, சட்டத்தின் முன் சபை தனிநபராகக் கருதப்படுவதுடன் இலங்கை மத்திய வங்கியின் தொழிற்பாடுகள் நிதியமைச்சரின் மாற்றத்தால் பாதிக்கப்படவும் போவதில்லை.

இலங்கை மத்திய வங்கி 2018 ஆட்சிமாற்ற நடவடிக்கை காலகட்டத்தில், அரசு மற்றும் நிதியமைச்சரின் மாற்றங்களின் போதும் தனது செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வந்ததுடன் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தனது பணிகளை வழமை போல் முன்னெடுத்திருந்தார்.

பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா?

எமது பதில்:

தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் 2025 ஆகஸ்டுடன் முடிவடைகிறது. பாராளுமன்ற ஆட்சிக்காலம் முடியும் முன் தேர்தல் நடைபெற வேண்டுமாயின், நடப்பு பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். அரசியலமைப்பின்படி பாராளுமன்றம் கலைக்கப்பட இரு வழிகள் உண்டு. முதலாவது, பாராளுமன்ற பதவிக்காலத்தில் இரண்டரை வருடங்கள் கடந்த பின் 70 ஆம் இலக்க சட்டத்தின் பிரிவு (1) (a) யின் படி ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைப்பது. நடப்பு பாராளுமன்ற பதவிக்காலம் தொடங்கி இரண்டரை வருடம் கழியாததால் இவ்வழிமுறை சாத்தியமில்லை. இரண்டாவது, ஜனாதிபதியை பாராளுமன்றத்தை கலைக்குமாறு கோரி பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவது.

பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதில் மேலுமொரு சிக்கலாக இருப்பது, தேர்தல் பொருளாதார நெருக்கடியை தீர்க்க தேவைப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கப்பெறுவதில் தாமதத்தை ஏற்படுத்தும். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற, எவ்வாறான பொருளாதார சீர்திருத்தங்களையெல்லாம் இலங்கை செய்யப்போகின்றது எனும் விபரங்களை உள்ளடக்கி நிதியமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோரின் கையெழுத்துடன் அனுப்பி வைக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை இறுதி செய்ய பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான சில சட்டங்களை இயற்றுதல் அவசியமாகும்.(எ.கா: இடைக்காலப் பாதீடு, வரி விதிகள் மாற்றம்). இந்த இரண்டையும் செயற்படும் நிலையிலுள்ள பாராளுமன்றம் இன்றி செய்வது மிகக்கடினம். அதனால், சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வராமல் பாராளுமன்றைக் கலைப்பது பேச்சுவார்த்தையில் பின்னடைவை ஏற்படுத்தும். சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டுக்கு வந்த பின் ஆட்சியை மாற்றுவது எந்த வகையிலும் உடன்பாட்டை பாதிக்கப்போவதில்லை, ஏனெனில் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்பாடு அரசுடன் தானே ஒழிய தனிநபர்களுடன் இல்லை. பாகிஸ்தானில் ஆட்சி மாற்றத்தின் பின்னும் சர்வதேச நாணய நிதியம் தனது உடன்படிக்கையின் படி செயலாற்றியது. சர்வதேச நாணய நிதியம் ஏழாம் கட்ட, எட்டாம் கட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவில் தற்போதைய பாகிஸ்தான் அரசுடன் கடந்த ஜூலை மாதம் ஊழியர் மட்ட இணக்கப்பாட்டுக்கு வந்தது.

தேர்தலொன்று நடக்கிறது என வைத்துக்கொண்டால் கூட, இலங்கையிடம் தேர்தல் செலவுக்கு பணம் உள்ளதா என்பதே பெரிய கேள்விக்குறி. இலங்கை நிதிப்பற்றாக்குறையில் இருந்தால் கூட அத்தியாவசிய தேவைகளுக்கு பணத்தை செலவழித்து வருகிறது. 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் செலவு 5,724 மில்லியன் ரூபா என தேர்தல்கள் ஆணையத்தின் தரவுகள் சொல்கின்றன. பணவீக்கத்திற்கு ஏற்ப கணக்கிடப்பட்டால் தற்காலத்தில் தேர்தல் ஒன்றுக்குரிய செலவு அண்ணளவாக 10 பில்லியன் வரை ஆகும். அரசின் மற்றைய செலவுகளோடு ஒப்பிடும் போது இரண்டு மூன்று மாதங்களுக்குள் 10 பில்லியன் ரூபா செலவு என்பது அரசுக்கு மிகப்பெரிய சுமையொன்றும் கிடையாது. 2022 ஆம் ஆண்டில் ஜனவரி தொடங்கி ஏப்ரல் வரையான காலகட்டத்தில் அரசின் செலவினமானது 1,155 பில்லியன் ரூபாவாகும். அதில் 316 பில்லியன் ரூபா சம்பளக்கொடுப்பனவுகளுக்கு மட்டும் ஆனது. பொருளாதாரப் பார்வையில் பார்த்தால் இலங்கையால் பாராளுமன்றத் தேர்தலொன்றை நடாத்த முடியும் என்பதே உண்மை.

எரிபொருள் பற்றாக்குறை, தேர்தல் நடத்தத் தேவையான பொருட்களின் இறக்குமதி தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். தேர்தலுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக்கொள்ள அவை தொடர்பான அந்நியச்செலாவணி கொடுப்பனவுகளை முதன்மைப்படுத்த வேண்டும். தேர்தலுக்கு ஆகின்ற மொத்த செலவில் 75% இறக்குமதிக்கு ஆகின்ற செலவுகள் எனக்கொண்டால் கூட அதன் பெறுமதி வெறும் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களே. எனவே, தேர்தலை தவிர்ப்பதற்கான காரணமாக இறக்குமதி சிக்கலைக் கொள்ளமுடியாது.

மேலதிக வாசிப்பிற்கு,

எங்களிடம் கேளுங்கள்!

ட்விட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்ராகிராமில் #AskWatchdog இனைப் பயன்படுத்தியோ அல்லது எம்மை ரக் செய்வதன் மூலமே உங்கள் கேள்விகளை கேளுங்கள்.

👥
Watchdog is an open-source research collective. Learn more about us here. Watchdog යනු විවෘත මූලාශ්‍ර පර්යේෂණ සාමූහිකයකි. අපි ගැන තව දැනගන්න. Watchdog ஒரு திறந்த மூல ஆய்வு நிறுவனம். எம்மைப் பற்றிய அறிய