தமிழில்: #AskWatchdog - 02

தமிழில்: #AskWatchdog - 02

@June 1, 2022

Read this article in English | සිංහල | தமிழ்

image

ஆய்வு : உமேஷ் மொரமுதலி

செம்மையாக்கம் : ஆயிஷா நாஸிம்

நீங்கள் கேட்டது:

இலங்கை கடனை திருப்பிச் செலுத்த தவறுவது முதன் முறையா?

எங்கள் பதில் :

ஆம். உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) போன்ற பலதரப்பு நிறுவனங்களுக்கு திருப்பிச் செலுத்துவதைத் தவிர, வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை இலங்கை அரசாங்கம் 12 ஏப்ரல் 2022 அன்று நிறுத்தியது. சுதந்திரத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முதலாவது கடன் இடைநிறுத்தம் இதுவாகும். இது பொதுவாக நாட்டின் முதலாவது ‘படுகடனை செலுத்தத் தவறுதல்’ (sovereign default) எனக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கையின் கடனை செலுத்தத் தவறுதல் (Default) , கடந்த ஓரிரு வாரங்களில் மீண்டும் உலகளாவிய மற்றும் உள்ளூர் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாகியது. ஏனெனில் இலங்கை அதன் காலக்கெடுவுக்குள் பன்னாட்டு முறிகளுக்கு (ISB) (கூப்பன் கொடுப்பனவு என்றும் குறிப்பிடப்படும்) வட்டியைச் செலுத்தத் தவறியதனாலாகும். கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசம் மே 18 ஆம் திகதியுடன் முடிவடைந்தது. ஒரு நிலையான நடைமுறையாக, கூப்பன் கொடுப்பனவைச் செலுத்துவதில் இலங்கையின் தோல்வியை பிரதிபலிக்கும் வகையில், பிட்ச் தரப்படுத்தல் இலங்கையை ‘கட்டுப்படுத்தப்பட்ட தவணை தவறும் நிலை’க்கு {Restrictive Default (RD)} தரமிறக்கியது.

இந்த நிகழ்வுகளுக்கு சமாந்தரமாக, சில ஊடகங்கள் மே மாதத்தில் இலங்கை அதன் வரலாற்றில் முதல் தடவையாக தவணை தவறியதாக அறிக்கையிட்டன. இருப்பினும், ஏப்ரல் மாதத்தில் இலங்கை தனது ‘கடனை செலுத்தத் தவறும் நிலை’யை அறிவித்தது. எனினும், படுகடனை செலுத்தத் தவறும் நிலையை இலங்கை ஏற்கனவே அறிவித்திருந்ததால் ISB கூப்பன் கொடுப்பனவைச் செலுத்த முடியாதுபோனமை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை

சில ஊடகங்கள் இதை மே 18 அன்று ‘இலங்கை கடனை செலுத்தத் தவறும் கடினமான நிலைக்கு(hard default) தள்ளப்பட்டதாக விளக்கமளித்தன. ‘கடனை செலுத்தத் தவறும் கடினமான நிலை’ என்ற வார்த்தைக்கு கடனாளி கடன் வழங்குனர்களுடன் நன்னம்பிக்கையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட மறுக்கும் நிலை என பொருளியல் விளக்கமளிக்கிறது.

இலங்கை, கடன் வழங்குனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் கடனை மறுசீரமைப்பதற்குமான தனது நோக்கத்தை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் ஆரம்ப கட்டங்களில் ஒன்றான கடன் மறுசீரமைப்பிற்கான நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களையும் இலங்கை தேர்ந்தெடுத்துள்ளது.

எனவே, இலங்கையின் கடனை செலுத்தத் தவறும் நிலையை ‘கடனை செலுத்தத் தவறும் கடினமான நிலை’ என வகைப்படுத்த முடியாது.

ஆர்ப்பாட்டக்காரர்களின் உரிமைகள் எவை?

எங்கள் பதில் :

எதிர்ப்பை வெளிப்படுத்தும் உரிமை இலங்கை அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசியலமைப்பு ஒரு தெளிவான குறிப்பை முன்வைக்கவில்லை என்றாலும், அரசியலமைப்பின் 14 ஆவது உறுப்புரை எதிர்ப்பை வெளிப்படுத்தும் உரிமைக்கான அடிப்படையை உருவாக்குகிறது. அரசியலமைப்பின் உறுப்புரை 14 (அ), (ஆ), மற்றும் (இ) இன் படி, ஒவ்வொரு பிரஜையும் (அ) வெளியிடுதல் உட்பட பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை அனுபவிக்க உரிமை உள்ளது (ஆ) அமைதியான முறையில் ஒன்றுகூடும் சுதந்திரம்; மற்றும் (இ) ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறது.

இருப்பினும், தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு, பொது சுகாதாரம், தேசிய பொருளாதாரம், இன மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றை பாதுகாத்தல், குற்றத்தைத் தூண்டுதல், அவதூறு, நீதிமன்ற அவமதிப்பு மற்றும் பலவற்றின் நலன்களுக்காக இந்த உரிமைகள் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ளன (அரசியலமைப்பின் உறுப்புரை 15).

ஒரு போராட்டம் வன்முறையை தூண்டினாலோ அல்லது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, நியாயமான பலத்தை பயன்படுத்தி கூட்டத்தை கலைக்கவும், தேவையேற்படின் கைது செய்யவும் பொலிசாருக்கு அதிகாரம் உள்ளது.

மேலும், போராட்டம் /ஆர்ப்பாட்டத்தின் போது, பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டால், அது 1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ் தனியான குற்றமாகும். சட்டத்திற்குப் புறம்பாக ஒன்றுகூடுவோர் மற்றும் / அல்லது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களைக் கைது செய்ய பொலிசாருக்கு அதிகாரம் இருந்தாலும், கைது செய்யப்பட்டவர்களை, கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த வேண்டும் (இருப்பினும் விதிவிலக்குகள் உள்ளன).

ஒவ்வொரு நபருக்கும் கைதுக்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளவும், ஒரு சட்டத்தரணியால் (அரசியலமைப்பின் உறுப்புரை 15) பிரதிநிதித்துவப்படுத்தப்படவும் உரிமை உள்ளது, மேலும் ஒவ்வொரு போராட்டக்காரருக்கும் அவ்வாறு கோருவதற்கும் உரிமை உள்ளது.

ஜனாதிபதி பதவி விலகினால் என்ன நடக்கும்?

எங்கள் பதில் :

பதவிக்காலம் முடிவதற்குள் ஜனாதிபதி பதவி விலகினால், அப் பதவி வெற்றிடமாகிவிடும். அத்தகைய சந்தர்ப்பத்தில், அரசியலமைப்பின் 40 ஆவது உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஒரு சிறப்பு நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். ஜனாதிபதியின் வெற்றிடமான பதவியை நிரப்ப, ஜனாதிபதி இராஜினாமா செய்த ஒரு மாதத்திற்குள் பாராளுமன்றம் அதன் உறுப்பினர்களில் ஒருவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்தால், அவர் இராஜினாமாச் செய்த மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட வேண்டும். அத்தகைய கூட்டத்தில், ஜனாதிபதியின் இராஜினாமா குறித்து பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் பாராளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும். அத்துடன் வெற்றிடமாக உள்ள ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்களை பெறுவதற்கான திகதியை நிர்ணயிக்க வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மட்டுமே ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டால், அவர்/அவள் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக பொதுச் செயலாளரால் அறிவிக்கப்படுவார். ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பரிந்துரைக்கப்பட்டால், இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அறுதிப் பெரும்பான்மை வாக்குகளால் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஜனாதிபதித் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் (1981 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்கம்) பாராளுமன்றத்தினால் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளைக் குறிப்பிடுகிறது.

ஜனாதிபதியின் பதவி வெற்றிடமாகி புதிய ஜனாதிபதி பதவியேற்கும் வரையான இடைப்பட்ட காலப்பகுதியில், தற்போதைய பிரதமர், பதில் ஜனாதிபதியாக செயற்படுவார். இந்த காலகட்டத்தில், அமைச்சரவையின் அமைச்சர்களில் ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவார். புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதியின் எஞ்சியுள்ள பதவிக் காலத்திற்கு பதவியில் இருக்க முடியும்.

அதாவது, கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை இராஜினாமாச் செய்தால், ரணில் விக்கிரமசிங்க, புதிய ஜனாதிபதியை பாராளுமன்றம் தெரிவு செய்யும் வரை ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திற்கு பதில் ஜனாதிபதியாக இருப்பார்.

மேலதிக வாசிப்புக்கு:

எம்மிடம் கேளுங்கள்!

ஏதேனும் கேள்விகள் உள்ளதா? Twitter, FB அல்லது Instagram இல் #AskWatchdog ஐப் பயன்படுத்தவும் அல்லது எங்களை அங்கு tag செய்யவும்

👥
Watchdog is an open-source research collective. Learn more about us here. Watchdog යනු විවෘත මූලාශ්‍ර පර්යේෂණ සාමූහිකයකි. අපි ගැන තව දැනගන්න. Watchdog ஒரு திறந்த மூல ஆய்வு நிறுவனம். எம்மைப் பற்றிய அறிய