ஏன் நாம் இவ்வளவு மின்துண்டிப்புகளுக்கு முகங்கொடுக்கிறோம்? இது தொடர்பில் எவராலும் எதுவுமே செய்ய முடியாதிருப்பதாக தோன்றுவது ஏன்? மின் உற்பத்தி நிலையங்கள் முதல், அவற்றின் உற்பத்திகள் மற்றும் மின்சாரத்தை வழங்குவதற்கான எரிபொருள் தீர்ந்து போனது வரை இந்த நாட்டின் மின் உற்பத்தியின் ஒவ்வொரு கோணத்தையும் இங்கு நாம் அலசி ஆராய்ந்துள்ளோம்.
கதை மற்றும் பகுப்பாய்வு : யுதன்ஜெய விஜேரத்ன செம்மையாக்கம் : ஆயிஷா நாஸிம் மொழிபெயர்ப்பு : மொஹமட் பைரூஸ் & நாதிம் மஜீத்
அண்மைக்கால நிகழ்வுகள் பற்றிய ஒரு குறிப்பு
துரதிர்ஸ்டவசமாக, அண்மைக்காலத்தில் இருந்து மின்சாரம் தொடர்பான சில பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றோம்
கடந்த ஜனவரி 10 ஆம் திகதி, இலங்கை மின்சார சபை சிக்கல் மிக்க சுமை குறைப்பு கால அட்டவணைக்கு ஏற்ப ஒரு கால அட்டவணைப் பிரகாரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதை உறுதி செய்தது.
- அண்மைக்கால நிகழ்வுகள் பற்றிய ஒரு குறிப்பு
- நாம் எமது மின்சாரத்தை எவ்வாறு பெற்றுக்கொள்கின்றோம்?
- அவ்வாறாயின், நாம் ஏன் இந்தப் பிரச்சினையில் சிக்கியுள்ளோம்?
- முதலாவதாக, எரிபொருள் - அத்துடன் அரசாங்கத்தின் தூரநோக்கற்ற தன்மை
- இரண்டாவதாக, பணம்
- மூன்றாவதாக, உண்மையான மின்னுற்பத்தி இயந்திர நிலையங்கள் இன்மை
- தற்போதைய சூழ்நிலையினை நாம் இதற்கு முன்பும் அனுபவித்துள்ளோம்; நாங்கள் இதற்கு முன்பு இங்கு இருந்துள்ளோம்
- எதிர்காலத்தில் என்ன நிகழும்?
- இந்தக் கட்டுரைக்கான தரவு
இதற்கு முன்வைக்கப்பட்ட காரணங்கள் அவை வெளியிடப்பட்ட மூலங்களுக்கு ஏற்ப வேறுபட்டதாக அமைகின்றது – களணிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு அங்கமாக அமைந்துள்ள 163 மெகாவாட்ஸ் மின்சாரத்தை அனல் மின் வலு வடிவில் உற்பத்தி செய்யும் தனியார் மின் பிறப்பாக்கும் நிலையமான சோஜிட்ஸ் மின்னிலையம் பழுதடைந்துள்ளமை இதற்குரிய காரணமாக பத்திரிகைகளால் முன்வைக்கப்பட்டது. எனினும் எமது சொந்த உண்மை சரிபார்க்கும் செயற்பாடு மூலமாக சில பரந்த பிரச்சினைகளை அறிய முடிந்தது. இலங்கை மின்சார சபை 800 மெகாவாட்ஸ் அளவான பாரிய மின்னுற்பத்தியை இழந்த நிலையில் உள்ளது. களணிதிஸ்ஸ, குகுளு கங்கை மற்றும் கெரவலபிட்டிய (சர்ச்சைக்குரிய யுகதனவி மின் உற்பத்தி வசதி உள்ளடங்கலாக) ஆகிய மூன்று மின்னுற்பத்தி நிலையங்களும் வேறுபட்ட காலப்பகுதிகளில் செயலிழந்த நிலையை அடைந்தன. அதே நேரம், சபுகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள பார்ஜ் மின்னுற்பத்தி நிலையங்கள் எரிபொருட் தட்டுப்பாட்டினால் செயற்பட முடியாத நிலையில் உள்ளன.
அத்துடன் இதைவிட தீவிரமான பிரச்சினை எம்முன்னே உள்ளது: தற்பொழுது காணப்படும் மின்னுற்பத்தி கட்டமைப்புகளை இயக்குவதற்கு கூட எரிபொருள் கிடைக்குமா என்பதை அறியாத நிலையில் இலங்கை மின்சார சபை உள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு இலங்கை மின்சார சபை செலுத்த வேண்டியுள்ள கடன் தொகையான 91 பில்லியன் ரூபாய்களில் 18 பில்லியன் ரூபாய்களை செலுத்துமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கோரியுள்ளதை உறுதி செய்யும் இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் மின் அத்தியட்சகர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் A.G.U நிஷாந்த இலங்கை மின்சார சபை தற்போது எரிபொருளை கொள்வனவு செய்ய முடியாத நிலையில் காணப்படுவது எதிர்காலத்தில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் மின்தடைக்கு வழிவகுக்கும் என எதிர்வு கூறுகின்றார்.
எனினும், அதற்கு அடுத்த நாள் அரசாங்கத்தின் அவசர கூட்டம் ஒன்றைக் கூட்டிய ஜனாதிபதி தடைப்படாத மின்சாரம் வழங்கப்படவுள்ளதாக உறுதியளித்துள்ளார். இலங்கை மின்சார சபை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு செலுத்த வேண்டிய கடனில் 18 பில்லியன் ரூபாய்களை மீளச் செலுத்தவுள்ளது, இலங்கை மத்திய வங்கி நிலக்கரி இறக்குமதிக்காக அந்நியச் செலாவணியை மின்சார சபைக்கு வழங்கவுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அனைத்தும் வழமைக்கு திரும்பும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சிறிது எரிபொருளை மின்சார சபைக்கு வழங்கவுள்ளது எனத் தெரிவிக்கப்படுவதுடன் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது, மேலும் சுமைக்குறைப்புக்காக மின்சாரம் தடைப்பட மாட்டாது எனவும் பதட்டமடைய வேண்டாம் எனவும் பொதுமக்கள் தமது இயல்பு வாழ்க்கையை முன்னெடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை மற்றும் அரசியல் கட்டமைப்பு ஆகிய இரு தரப்பினரும் வாக்குறுதிகளை அளித்த போதும் நிச்சயமாக மின்சாரத் துண்டிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜனவரி 14 ஆம் திகதி கடந்த ஏழு நாட்களுக்குள் மின்தடையை எதிர்கொண்டமை தொடர்பான தகவல் சேகரிப்பு ஒன்றை நாம் மேற்கொண்டோம்.
அத்துடன் இது ஒரு வெறும் அரசியல் பிரசாரம்தானா என்பதும் இதன் மூலம் சரிபார்க்கப்பட்டது. இன்று வரை மின் துண்டிப்புகளின் அளவு ஒரு நாளைக்கு 10 முதல் 13 மணித்தியாலங்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலைமை மோசமடைந்துள்ளதால் நாம், மின்சார வசதியுடன் பணியாற்றக்கூடிய இடங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறோம். ஏ.ஜி.யு. நிஷாந்தவின் வார்த்தைகள் இப்போது தீர்க்கதரிசனமாகியுள்ளன.
ஆக, நாம் ஏன் இந்த நெருக்கடியைச் சந்தித்துள்ளோம்?
நாம் எமது மின்சாரத்தை எவ்வாறு பெற்றுக்கொள்கின்றோம்?
நமக்கு என்ன தெரியும் என்பதில் இருந்து ஆரம்பிப்போம். இலங்கையில் மின்சார உற்பத்தியின் நிலை பற்றி அறிந்து கொள்வதற்காக நாம் மூன்று மூலங்களை ஆராய்ந்தோம், அவையாவன: இலங்கை மின்சார சபையின் 2019 ஆம் ஆண்டின் வருடாந்த அறிக்கை, அது கடந்த காலத்தின் விபரங்களை வழங்குகின்றது; இலங்கை மின்சார சபையின் உற்பத்தி திட்டமிடல் அலகின் 2022 – 2024 வருடங்களுக்கான நீண்ட கால மின்னுற்பத்தி விரிவாக்கல் திட்டம், அது எதிர்கால திட்ட விபரங்களை வழங்குவதுடன் கடந்த கால போக்குகளையும் மீட்டிப் பார்க்கின்றது; அத்துடன் உலகளாவிய சக்திக் கண்காணிப்பு (Global Energy Monitor)> அது மின்னுற்பத்தி நிலையங்கள் பற்றிய தரவுத்தளம் ஒன்றாகும்.
நம் நாட்டில் மேற்கொள்ளப்படும் உற்பத்தி பற்றிய விபரங்களை வழங்கும் வரைபடம் பின்வருமாறு.
இதனை புரிந்து கொள்வதற்கு இலகுவானதாக ஆக்கிக்கொள்வோம். எமது தேசிய மின் வழங்கல் வலையமைப்புக்கு மின்சாரம் வழங்குவதற்காக மூன்று பிரதான வகைகளில் அமைந்த மின்னுற்பத்தி நிலையங்கள் காணப்படுகின்றன, அவைகளாவன: அனல் சக்தி மூலம் இயங்குவன (அதாவது நிலக்கரி அல்லது எரிபொருளினால் சக்தி வழங்கப்படும் மின்னுற்பத்தி), நீரியல் சக்தி மூலம் இயங்குவன மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் மூலம் இயங்குவன. இந்த மூன்று வகையான மூலங்களினாலும் உருவாக்கப்படும் மின் சக்தி தேசிய மின் வழங்கல் வலையமைப்புக்கு சக்தியினை இலங்கை மின்சார சபையினால் அல்லது சுயாதீனமான தனியார் மின்சக்தி பிறப்பாக்கல் நிலையங்களினால் வழங்கப்படுகின்றது.
மேற்குறிப்பிடப்பட்ட உற்பத்தி திட்டம் சுயாதீனமான அனல் மின்னுற்பத்தி மூலம் 614 மெகாவாட்ஸ் மின்சாரம் மற்றும் சுயாதீனமான புதுப்பிக்கத்தக்க உற்பத்தி மூலம் 683 மெகாவாட்ஸ் மின்சாரம் என்பன தேசிய மின் வழங்கல் வலையமைப்புக்கு பெறப்படுவதாகக் குறிப்பிடுகின்றது, எனினும் அவர்களின் விபரமான அட்டவணைகளை நோக்கிய பின்னும் அந்த குறித்த சரியான அளவுகளை அல்லது புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தி ஆலைகளை எம்மால் அடையாளம் காண முடியவில்லை.
எனவே கிடைக்கக் கூடிய பிரித்து வழங்கப்பட்ட தகவல்களையே நாம் இங்கு பயன்படுத்துகின்றோம்.
இந்த விபரமான படத்தை நோக்குவோம். இந்த இயந்திர நிலையங்கள் (Plants) ஐதான சேகரிப்புகளாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதுடன் அவை நிலையங்கள் அல்லது தொகுதிகள் என அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு நிலையம்ஃதொகுதியினுள்ளும் மின்னுற்பத்தியை மேற்கொள்ளும் பல அலகுகள் காணப்படுகின்றன. உதாரணமாக புதிய லக்ஸபான என்பது லக்ஸபான தொகுதியினுள் அடங்கும் உப அலகாகும்.
இலங்கை மின்சார சபையின் அனல் மின்னுற்பத்தி இயந்திர நிலையங்கள் (அதாவது செயற்படுவதற்கு எரிபொருள் அவசியமானவை) பின்வரும் அட்டவணையில் வழங்கப்பட்டுள்ளது. மின்சக்தி மெகாவாட்ஸ்களில் (MW) குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்சார சபையின் நீர் மின் நிலையங்கள் வருமாறு :
இதனுடன் சுயாதீனமான மின்னுற்பத்தியாளர்கள் (IPP) அதாவாது தனியார் மின்னுற்பத்தி இயந்திர நிலையங்களும் உள்ளன. உதாரணமாக, அண்மைக்காலமாக நாம் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்துடன் தொடர்புடைய, அதனுள் அமைந்துள்ள சோஜிட்ஸ் (Sojitz) நிலையம் பற்றி அடிக்கடி கேள்விப்படுகின்றோம், எனினும் நிருவாக ரீதியாக அது ஒரு வேறான அமைப்பாகும்.
* இந்த மின் உற்பத்தி நிலையங்களின் ஒப்பந்தங்களை ஏப்ரல் 2021 இல் நிறுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
அனைத்துக்கும் மேலாக, எம்மிடம் பயன்படுத்துவதற்கு 3,580.75 மெகாவட்ஸ் மின்சாரம் உள்ளது, இதனுடன் சேர்ப்பதற்கு சாத்தியமான 600 மெகாவட்ஸ் அளவுக்கும் அதிகமான மின்சாரமும் உள்ளது. அறிக்கையிடப்பட்ட தரவுகள் காரணமாக இந்த மேலதிக மின்சாரத்தை நாம் கணிப்பீடுகளில் கருத்திற்கொள்ளவில்லை.
இலங்கை மின்சார சபையின் புள்ளிவிபரவியல் தரவுகள் மற்றும் முறைமையின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட வருடாந்த அறிக்கைகள் என்பவற்றில் இருந்து பெறப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் இந்த அளவு மின்சாரம் உச்ச பட்ச தேவையைக் கூட பூர்த்தி செய்வதற்கு போதுமானது. கடந்த வருடங்களில் இந்த மின் தொகுதியில் இருந்து கோரப்பட்ட மின்சாரத்தின் அளவுகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன:
இலங்கை மின்சார சபை குறிப்பிடுவதைப் போன்று கோரல்கள் மொத்த தேசிய உற்பத்திக்கு ஏற்ப குறித்துக்காட்டப்பட்டுள்ளன. பொருளாதாரம் சிறப்பாக செயற்படும் வேளை மின்சாரத்துக்கான கோரல் அதிகரிக்கின்றது.
புதுப்பிக்கத்தக்க மின்சக்தி மூலங்களைக் கருத்திற் கொள்ளும் வேளை – நீர் மின்சாரம் இவ்வகைக்குள் உள்ளடங்குகின்ற போதும் சூரிய சக்தி, காற்று, சிறிய நீர்மின் உற்பத்தி மற்றும் உயிர்த்திணிவு என்பன எதிர்காலத்தில் சாத்தியமான விடயங்களாகவே காணப்படுகின்றன. தற்போது, நாம் இதிலியே நம்மில் பலர் தங்கியுள்ளோம். ஒரு நாடாக நாம் எதிர்பார்க்கும் மின்சக்தியை விநியோகிக்கும் மின்சாரக் கட்டமைப்பு பலம் மிக்கதாக இலங்கை மின்சார சபை காணப்படுகின்றது.
அவ்வாறாயின், நாம் ஏன் இந்தப் பிரச்சினையில் சிக்கியுள்ளோம்?
முதலாவதாக, எரிபொருள் - அத்துடன் அரசாங்கத்தின் தூரநோக்கற்ற தன்மை
- மேலுள்ள மின்சக்தி அட்டவணைகளை நோக்கும் வேளை, எமது மின்சாரத்தின் பெரும்பகுதி அனல் சக்தி மூலம் பெறப்படுகின்றது. நீர்மின் சக்தி இரண்டாவது இடத்தில் உள்ளது.
- இலங்கை மின்சார சபையிடம் அதிக இயலுமை உள்ளது, எனினும் எம்மிடம் எரிபொருள் இருந்தால் மாத்திரமே இவ்வியலுமையை பயன்படுத்தும் நிலை காணப்படுகின்றது. 2021 இல் அந்நியச் செலாவனி குறைவடைந்ததைத் தொடர்ந்து நிதியமைச்சு எரிபொருள் இறக்குமதியைக் குறைத்தது. இது ஏற்கனவே குறைவடைந்த நிலையில் காணப்பட்ட எரிபொருள் இறக்குமதியை மேலும் குறைப்பதாக அமைந்தது: கடந்த 2019 இல் எரிபொருள் இறக்குமதிக்காக 3,677 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்ட நிலையில் 2020 இல் அச்செலவினம் 2,325 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டது. மசகு எண்ணையின் விலை கணிசமாக அதிகரித்திருந்த வேளையில் மேற்கொள்ளப்பட்ட இந்த செலவு குறைப்பு நடவடிக்கை பெறப்படும் எரிபொருளின் அளவையும் கணிசமான அளவில் குறைத்திருந்தது.
- இது எரிபொருட் கையிருப்பு குறைவடைதலுக்கு வழிவகுத்தது. ஜனவரியின் முதல் இரண்டு வாரங்களிலும் இலங்கை மின்சார சபை எரிபொருட் பற்றாக்குறை தொடர்பில் பல தடவைகள் எச்சரிக்கை வெளியிட்டிருந்தது: களனிதிஸ்ஸவில் எரிபொருட் கையிருப்பு 3.5 மில்லியன் லீட்டர்களாக மாத்திரமே இருப்பதையும் அது இரண்டு நாட்களுக்கு மாத்திரமே போதுமானது என்பதையும் அது குறிப்பிட்டிருந்தது. மேலும், தமது எரிபொருட் கையிருப்பை பயன்படுத்தி ஜனவரி 18 வரை மாத்திரமே தாக்குப்பிடிக்க முடியும் என்பதையும் அச்சபை தெரிவித்திருந்தது. மின்சாரத் துண்டிப்பு பற்றிய தகவல்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு பின்னர் மீளப் பெறப்பட்டன, அத்துடன் அவை குளறுபடி மிக்கதாகக் காணப்பட்டன எனக் கூற முடியும்.
- இந்த முக்கியமான எரிபொருள் சேமிப்பை பெற்றுக்கொள்வதில் இலங்கை மின்சார சபையும் தூரநோக்கை கொண்டிருக்கவில்லை எனத் தெரிகின்றது. உதாரணமாக, இலங்கை மின்சார சபை தனது எரிபொருட் தேவைகள் பற்றி முன்னரே தொடர்பாட வேண்டும் என மின்சக்தி அமைச்சரான உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்… இவ்விடயத்தை இலங்கை மின்சார சபை தூர நோக்குடன் கையாளவில்லை என்பது போல் தோன்றுகின்றது. இந்த பொதுவான கவனயீனம் நம்ப முடியாத அளவுக்கு மோசமாகவுள்ளது, இலங்கை மின்சார சபையின் குறைந்த எரிபொருள் வழங்கல் பற்றி நாம் பல வாரங்களுக்கு முன்னரேயே அறிந்திருந்தோம்; EconomyNext செய்தி நிறுவனம் ஜனவரி 24 அன்று எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என எதிர்வுகூறியிருந்தது.
- இலங்கை மின்சார சபையின் கேள்விக்கு எரிபொருள் கிடைக்காத முதல் சந்தர்ப்பமாக இது அமைந்திருக்கவில்லை – கடந்த 2021 இல் நுரைச்சோலை நிலக்கரி மூலமான மின்னுற்பத்தி நிலையம் செயலிழந்தது. இச்செயலிழப்பு காரணமாக தேசிய மின் வழங்கல் வலையமைப்புக்கு கிடைக்கும் 300 மெகாவாட்ஸ் மின்சாரம் கிடைக்காமல் போனது. இதனை நிவர்த்திப்பதற்கு இலங்கை மின்சார சபை களனிதிஸ்ஸ மின்னுற்பத்தியை செயற்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது: இது எரிபொருளுக்கான கேள்வியை அதிகரித்ததுடன் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட எரிபொருட் பற்றாக்குறை சில இடங்களில் மின்தடை ஏற்படுத்தப்படுவதற்கு வழிவகுத்தது.
- எரியும் நெருப்புக்கு மேலும் எண்ணை சேர்ப்பது என்ற பழமொழிக்கு ஏற்ப, இலங்கை மின்சார சபை நடத்திச் செல்லப்படும் விதம் பற்றி அதிருப்தி அடைந்துள்ள அதன் ஊழியர்கள் மின்சார துண்டிப்பை ஏற்படுத்துவோம் என அச்சுறுத்துகின்றனர். மின்வலு மற்றும் சக்தி அமைச்சர் காமினி லொகுகே பொது முகாமையாளரின் பதவிக் காலத்தை நீடித்து கடிதம் வழங்கியதைத் தொடர்ந்து தற்பொழுது அவர்கள் தமது பொது முகாமையாளர் M.R. ரணதுங்கவுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வோம் என எச்சரித்துள்ளனர் . இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் மத்தியில், ரணதுங்க கடந்த ஜனவரி 13 ஆம் திகதி தனது பதவியில் இருந்து ஓய்வடையும் காலத்தை அடைந்திருந்தார். அமெரிக்காவின் போர்ட்ரஸ் சக்தி நிறுவனம் யுகதனாவி மின்னுற்பத்தி வசதியின் பங்குகளை கொள்வனவு செய்தல் மற்றும் அதற்கு திரவ இயற்கை வாயு வழங்கும் 10 வருட கால ஒப்பந்தம் என்பனவற்றுக்கு ரணதுங்க ஆதரவாக இருக்கின்றமை ஊழியர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவதாக, பணம்
- இலங்கை மின்சார சபை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் (CPC) இருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்கின்றது. இலங்கை மின்சார சபை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு பெருந்தொகைப் பணத்தை செலுத்த வேண்டியுள்ளது. மொத்தமாக செலுத்த வேண்டிய நிலுவை 91 பில்லியன் ரூபாய்களாகக் காணப்படுகின்றது. இலங்கை மின்சார சபை டொலர்களில் பணத்தை திருப்பிச் செலுத்தாவிட்டால் எரிபொருளை வழங்க முடியாது என பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் சக்தி வள அமைச்சரும் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் நடந்து கொண்டிருக்கும் அதே வேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் கடனில் மூழ்கியுள்ளது. ஏழு மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இலங்கை வங்கிக்கு 652 பில்லியன் ரூபாய்கள் கடன் செலுத்த வேண்டியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது. இவ்வாறான கடன் சுழற்சி மிகவும் முட்டாள்தனமானது.
- இலங்கை மின்சார சபை காயமடைந்த நிலையில் காணப்படுகின்றது. இந்நிலை நீண்ட காலமாக நிலவுகின்றது. இலங்கை மின்சார சபைகயின் நிதியியல் பிரச்சினைகளை ஆராயும் வேளை, நாம் 2019 ஆம் ஆண்டுக்கான தவிசாளரின் செய்தியை நோக்கினோம்:
- நுகர்வோரும் இலங்கை மின்சார சபைக்கு கட்டணங்களை செலுத்தாத நிலை உள்ளது; தொற்று நோயின் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை 43 பில்லியன் ரூபாய்கள் வரையான கட்டணங்கள் நுகர்வோரால் செலுத்தப்படாமல் உள்ளதை பொது வசதிகள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஜானக்க ரத்நாயக்க சுட்டிக்காட்டுகின்றார். இது கடன்களின் தீய சுழற்சி ஒன்றை தீவிரமாக்குகின்றது.
- நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இலங்கை தற்பொழுது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றது. இலங்கை மின்சார சபை கடந்த ஜனவரி 12 இல் 10 மில்லியன் லீட்டர் எரிபொருளுக்கான கொள்வனவுக் கட்டளையை பிறப்பித்திருந்ததுடன் அடுத்தநாள் 15 மில்லியன் லீட்டருக்கான கட்டளையை பிறப்பித்தது. எரிபொருள் தாங்கிய ஐந்து கப்பல்கள் கொழும்பை வந்தடைந்துள்ளது. எனினும், அந்நியச் செலாவணி இன்மையினால் அக்கப்பல்களில் இருந்து எரிபொருட்களை விடுவிக்க முடியாமல் உள்ளது. இவ்விடயங்கள் ஐலன்ட் பத்திரிகையில் அறிக்கையிடப்பட்டுள்ளன.
“…1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் இரண்டாவது ஆகக் குறைந்த முதல் அரையாண்டுக்கான மழைவீழ்ச்சி 2019 இல் பதிவாகியுள்ளது. அது பிரதான நீரேந்துப் பகுதிகளில் அசாதாரண அளவுகளில் குறைவான உள்வருகை நீரோட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக பிரதான மற்றும் சிறிய நீர்மின்சார உற்பத்தி நிலையங்களின் மின்னுற்பத்தியை 4,794.5 மெகாவட்ஸ் ஆக குறைத்துள்ளது, இது முந்தைய வருடத்துடன் ஒப்பிடும் வேளை 24.9% குறைவானதாகும். நீர் மின்சார உற்பத்திக் குறைவு இலங்கை மின்சார சபையினை மின்னுற்பத்திக்கு அனல் மின் நிலையங்களில் தங்கியிருக்க வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது. இவ்வருட இறுதி வரை மேற்கொள்ளப்பட்ட மொத்த அனல் மின்சார உற்பத்தி 65% ஆகும், இது 2018 ஆம் ஆண்டை விட 10.6% அதிகமாகும். இந்த புதிய உற்பத்திக் கலவை மிகவும் செலவு மிக்க அனல் மின் உற்பத்தியை எம்மை நகர்த்தியுள்ளது, இது இலங்கை மின்சார சபையின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட நிலையாகும் அத்துடன் இந்நிலை உற்பத்தி செலவு மற்றும் விற்பனை விலை என்பவற்றுக்கு இடையான இடைவெளியை மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மின்சார சபை விற்பனை செய்யும் ஒவ்வொரு அலகுக்கும் ரூபாய் 5.85 இனால் நட்டமடைகின்றது. அதிகரிக்கும் இந்த நட்டங்கள் இலங்கை மின்சார சபையின் நிதி நிலையை எதிர்மறையாக பாதிக்கின்றது. இலங்கை பொது வசதிகள் ஆணைக்குழு செலவினை பிரதிபலிக்கும் மின்கட்டண முறைமையை இலங்கை மின்சார சபைக்கு சட்டரீதியாக அனுமதிக்கும் காணப்படும் நிலையிலும் அவ்வாறான அனுமதிகள் 2014 ஆண்டு தொடக்கம் வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் அரசாங்கம் பல வகுப்பு நுகர்வோருக்கு மானிய விலையில் மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்குவதை தேவைப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக இலங்கை மின்சார சபை சராசரி உற்பத்தி செலவிலும் பார்க்க குறைந்த விலைக்கு மின்சாரத்தை நுகர்வோருக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. மேலும், இந்த வருடத்தில் அரசாங்கத்தால் வழங்கப்பட வேண்டிய மானியங்கள் எவையும் இல்லாத நிலையில் இலங்கை மின்சார சபை மேலும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது, இது 2019 இல் நிறுவனத்துக்கு நிதியியல் செலவுகளாக 22.5 பில்லியன் ரூபாய்களை 2019 இல் ஏற்படுத்தியுள்ளது.
மூன்றாவதாக, உண்மையான மின்னுற்பத்தி இயந்திர நிலையங்கள் இன்மை
- 2007 ஆம் ஆண்டு நுரைச்சோலை மற்றும் கெரவலபிட்டிய மின்னுற்பத்தி நிலையங்கள் தேசிய மின் வழங்கல் வசதிகளுக்கு இணைக்கப்பட்ட பின்னர் இது வரை எந்த வித புதிய மின்னுற்பத்தி வசதிகளும் உருவாக்கப்படாத நிலை காரணமாக, கடந்த 2016 ஆம் ஆண்டு பொது வசதிகள் தொடர்பான கட்டுப்படுத்தும் அமைப்பான பொது வசதிகள் ஆணைக்குழு (PUCSL) எதிர்கால மின்னுற்பத்தி நெருக்கடி நிலைகள் தொடர்பில் இலங்கை மின்சார சபையை எச்சரித்துள்ளமை தெரிய வருகின்றது. இப்பிரச்சினை பற்றி அறிக்கையிட்ட Daily FT மின் பிறப்பாக்கிகளில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்தல் தொடர்பாக பரிந்துரை வழங்கிய 2019 ஆம் ஆண்டின் அமைச்சரவை பத்திரம் அமுல்படுத்தப்படாததை சுட்டிக்காட்டியது. அத்துடன் பின்வருமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது: “கெரவலபிட்டிய மின்னுற்பத்தி நிலையத்துக்கு 300 மெகாவாட் மின்னுற்பத்தியை மேற்கொள்ளும் LNG மின்னுற்பத்தி வசதிக்கான கேள்வி மனு கோரப்பட்டு 2019 ஆம் ஆண்டு இயங்க எதிர்பார்க்கப்பட்ட திட்டத்தை தவிர 2011 ஆம் ஆண்டு தொடக்கம் திட்டமிடப்பட்ட நீண்ட கால மின்னுற்பத்தி திட்டங்கள் எவையும் அமுல்படுத்தப்படவில்லை”. 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மின் வழங்கல் இயலுமையில் பிரச்சினைகள் ஏற்படும் என்பதை பொது வசதிகள் ஆணைக்குழு எதிர்வு கூறியிருந்ததுடன் 2015 தொடக்கம் 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மின் தேவைக்கான கேள்வியில் வருடாந்தம் 5.5% அதிகரிப்பு ஏற்படும் என்பதையும் எதிர் கூறியிருந்தது. இவ்வெதிர்வு கூறல்கள் புறக்கணிக்கப்பட்டன
- சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் அமைச்சர் இலங்கை மின்சார சபைக்கு இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவு விடுத்தமையை குறித்த FT அறிக்கை வெளியிட்டிருந்தது. இத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டிருப்பின் மூன்று சூரிய சக்தி மின் உற்பத்தி ஆலைகள் உள்ளடங்கலாக 13 மின் உற்பத்தி ஆலைகள், 100 மெகாவாட்ஸ் மின் சேமிப்பு வசதி கொண்ட கடலில் மிதக்கும் களஞ்சிய வசதி மற்றும் புத்தளம் அல்லது திருகோணமலையில் இன்னொரு இதையொத்த களஞ்சிய வசதி என்பன உருவாக்கப்பட்டிருக்கும்.
- இவை எவையுமே நடக்கவில்லை. கடந்த 2019 ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்படாத மின் தடைகளை ஏற்படுத்தியமைக்காக பொது வசதிகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகியது. அப்போதைய சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சரான ரவி கருணாநாயக்க அவ்வாறான மின் தடைகளுக்கு முன்னர் எந்த வித மின் தடைகளும் ஏற்படாது என உறுதியளித்திருந்ததுடன் அதன் பின்னர் வரட்சி மற்றும் மஹாவெலி போன்ற விவசாய நீரேந்துப் பகுதிகளை இலங்கை மின்சார சபையினால் சட்ட ரீதியாக அணுக முடியாத நிலை காணப்பட்டதை மின்தடைகளுக்கான காரணங்களாக முன்வைத்திருந்தார்.
- 300 மெகாவாட்ஸ் மின்சாரத்தை வழங்கும் வல்லமை கொண்டதும் தற்போது காணப்பட வேண்டிய 13 மின்னுற்பத்தி நிலையங்களில் ஒன்றாக அமைந்த, 2019 ஆம் ஆண்டு செயல்பட ஆரம்பிக்க வேண்டிய கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலைய நிர்மாணத்துக்கான அனுமதி 2021 ஆம் ஆண்டே வழங்கப்பட்டது.
- மின் வலையமைப்பு தரவுகள் உச்ச பட்ச மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய மின்னுற்பத்தி முறைமைகளைக் கொண்டுள்ள நிலையில் ஏன் இந்த இயந்திர நிலையங்கள் காரணமாக அமைகின்றன? செலவுகளின் காரணமாகவே இந்நிலை ஏற்படுகின்றது. அனல் மின் நிலையங்கள் மூலம் உச்ச பட்ச தேவையை பூர்த்தி செய்யும் நிலை காணப்படினும் அவை செலவு கூடியவை, இந்நிலை மின்சார உற்பத்திக்கான செலவை அதிகரிக்கின்றது. எனினும் இச்செலவு அதிகரிப்பை இலங்கை மின்சார சபை நுகர்வோருக்கு சுமத்த முடியாத நிலையில் உள்ளது, எனவே அது கடனில் மூழ்கி தத்தளிக்கின்றது. இந்த மேலதிக மின்னுற்பத்தி இயந்திர நிலையங்கள் செலவுக் குறைப்பை (பகுதியளவிலாவது) மேற்கொண்டு தனது நிலையை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டனவாகும்.
- இந்த செயலிழப்பு பற்றி இலங்கை மின்சார சபை என்ன கூறுகின்றது? 2019 ஆண்டின் தவிசாளரின் செய்திக்கு மீண்டும் செல்வோம்:
“இந்த மனவலியை ஏற்படுத்தும் உற்பத்திச் செலவு மற்றும் விற்பனை விலை என்பவற்றின் இடையான இடைவெளி 2019 இல் சமர்ப்பிக்கப்பட்டிருந்த முன்னர் அனுமதி பெறப்பட்ட மின்சாரத்தை குறைந்த செலவில் உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் தடைகள் மற்றும் தாமதங்கள் இன்றி அமுல்படுத்தப்பட்டிருந்தால் ஓரளவு தீர்க்கப்பட்டிருக்க முடியும் - குறிப்பாக திட்டமிடப்பட்டிருந்த பல 300 மெகாவட்ஸ் திரவு இயற்கை வாயு இயந்திர நிலையங்களில் முதல் தொகுதியாவது இவ்வாறு அமுல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அந்த 300 மெகாவட்ஸ் இயந்திரத் தொகுதி இலங்கை மின்சார சபையின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட காரணங்களால் செயற்பாட்டுக்கு கொண்டுவர முடியாமல் போனமை இங்கு கவலையுடன் குறிப்பிடப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட நிலை காணப்பட்ட போதும், 2019 இல் மிகவும் தாமதப்படுத்தப்பட்ட மற்றும் நிறுத்தப்பட்டிருந்த மின்னுற்பத்தி இயந்திர வசதிகளை அமுல்படுத்துவதற்கான திட்டங்களை தீவிரமாக முன்னெடுத்தது. கெரவலப்பிட்டியவில் இரண்டு திரவ இயற்கை வாயு மூலமான மின்னுற்பத்தி இயந்திர நிலையங்களுக்கான அடித்தளம் இடப்பட்டதுடன் நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலைய விரிவாக்கத்துக்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன. மேலும், களனிதிஸ்ஸவிலுள்ள எமது தளத்தில் எரிவாயு விசையாழி (gas turbine) மின்னுற்பத்தி நிலையங்களை நவீன மற்றும் வினைத்திறன்மிக்க இயந்திரங்களுடன் மேம்படுத்துவதற்கும் சூரிய மற்றும் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை துரிதமாக விரிவுபடுத்துவதற்கும். எவ்வளவு விரைவில் வினைத்திறன் மிக்க மின் உற்பத்தி நிலையங்கள் செயற்படத் தொடங்குகிறதோ, அவ்வளவு விரைவில் அரசுக்கு குறைக்கப்பட்ட மானியத்துடன் வெகுமதி வழங்கப்படும், இலங்கை மின்சார சபையினை மிகவும் இலாபகரமான அரசாங்க அமைப்பாக மாற்றுவதற்கான பாதை உருவாக்கப்படும். குறைந்த இயக்கச் செலவுகள் மற்றும் இலாபம் ஈட்டுவதற்கான ஒரு பொருள் வழி என்பதால், திட்டமிட்ட உருவாக்கல் திட்டங்களை மேலும் தாமதமின்றி செயற்படுத்துவதில் அதிக முக்கியத்துவம் மற்றும் அவசர கவனம் செலுத்த சம்பந்தப்பட்ட அனைவரையும் நான் மனதார கேட்டுக்கொள்கிறேன்.”
தற்போதைய சூழ்நிலையினை நாம் இதற்கு முன்பும் அனுபவித்துள்ளோம்; நாங்கள் இதற்கு முன்பு இங்கு இருந்துள்ளோம்
அரசாங்கமானது போதிய பணமின்மை காரணமாக குறைவான நிதிப் பங்களிப்பினையே இலங்கை மின்சார சபைக்கு வழங்கியுள்ளதை எம்மால் காணக்கூடியதாக உள்ளது, வினைத்திறன் மிக்க மின்னுற்பத்தி நிலையங்களை நிறுவுவதன் மூலம் இலாபத்தை அடைவதற்கான அவர்களின் திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன,மேலும் விடயத்தினை மோசமாக்கும் வகையில்,அரசாங்கத்தினது எரிபொருள் இறக்குமதிக்கான செலவினமானது ஒரு புள்ளிக்கு குறைவடைந்த காரணத்தினால் இலங்கை மின்சார சபையினால் தனது கட்டமைப்பின் கேள்வியினை கையாள முடியாத நிலையில் உள்ளது.
ஆண்டான்டு காலமாக அரசாங்கத்தினது உறுதியான வழிமுறையாக இது உள்ளது. 1980 களில், மந்தமான பொருளாதார வளர்ச்சி மற்றும் வன்முறை அரசியல் எழுச்சிகளின் பின்பகுதிகளின் முடிவில் கூட, நாங்கள் தேசிய கட்டமைப்பிற்கு குறிப்பிடத்தக்க திறனை சேர்த்துக் கொண்டிருந்தோம். 1984 மற்றும் 1988 க்கு இடையில் ஒன்பது நீர் மின் உற்பத்தி அலகுகள் ஆரம்பிக்கப்பட்டன, இது லக்சபான மற்றும் மகாவலி வளாகங்களின் பெரிய அளவுகளை சேர்த்தது; இலங்கை மின்சார சபை பொறியியலாளராக இது ஒரு நல்ல நேரமாக இருந்திருக்க வேண்டும்
1996 வரை வேகமாக முன்னேறி, மீண்டும் 2001 இல்; நாடானது மின் துண்டிப்புக்களை எதிர்நோக்கியது. அதற்குள் அப்போதைய நேரத்தில் மின்சார நெருக்கடி உண்டானது தெரிய வந்தது;இலங்கை கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் 2001 அறிக்கையில், 'இரட்டை நெருக்கடிகள் - திறன் நெருக்கடி மற்றும் நிதி நெருக்கடி' என்று அழைப்பதை விபரிக்கிறது, மேலும் ஒவ்வொரு ஆண்டும் 160 மெகாவாட் மின்சாரத்தை கட்டமைப்பிற்குள் சேர்க்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியது.
அவர்களின் அறிக்கையானது தற்போது நடப்பதைப் போன்றதொரு சூழ்நிலையினைக் குறிப்பிடுகிறது:
“ இலங்கை மின்சார சபையின் சொந்த செலவிலான அனல்மின் உற்பத்தி நிலையங்களின் அதிகப்படியான செயற்பாடு, வாடிக்கையாளர் வளாகத்தில் அதிக செலவிலான காத்திருப்பு (standby) உற்பத்தியின் பரவலான செயற்பாடு மற்றும் குறுகிய கால ஒப்பந்தங்களில் தனியார் உற்பத்தியாளர்களிடமிருந்து சக்தியினை அதிக செலவில் கொள்முதல் செய்தவை என்பன, 2000 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளின் முடிவில் ஏற்பட்ட அதிகப்படியான செயற்பாடுகள் ஆகும்.”
சுருக்கமாக கூறுவதாயின், நாங்கள் இந்த பாதையில் இருந்தோம், புதிதாக. அது எங்கு கொண்டு சேர்க்கும் என்பது பற்றி எங்களுக்குத் தெரியும். முன்கூட்டியே அறிவிக்கப்பட்டும் கூட இதனை சரிசெய்ய யாரும் முன்வராமை, பல அரசாங்கங்களில் தொலைநோக்கு பார்வை இல்லாததால், இதை ஏன் நம்மால் தவிர்க்க முடியவில்லை என்று தோன்றுகிறது. சக்தியானது வீணடிக்கப்படுகிறது, ஆனால் நாம் இயங்க வேண்டுமாயின் 230வாட்ஸ் தேவைப்படுகிறது. ஒரு பழைய பழமொழியொன்று நினைவுக்கு வருகிறது:
ஆணிக்கு ஆசைப்பட்டு பாதணியை இழந்தேன்
பாதணிக்கு ஆசைப்பட்டு குதிரையினை இழந்தேன்.
குதிரைக்கு ஆசைப்பட்டு ஓட்டுனரை இழந்தேன்.
ஓட்டுனருக்கு ஆசைப்பட்டு யுத்தத்தினை இழந்தேன்.
யுத்தத்திற்கு ஆசைப்பட்டு இராச்சியத்தை இழந்தேன்.
இவை எல்லாம் ஒரு குதிரை லாடத்தின் ஆணிக்கு ஆசைப்பட்டதற்காக.
அதுதான் இங்கே நடந்தது போல் தெரிகிறது.பிரச்சனை யாதெனில், அதிக சக்தியானது கட்டமைப்பிற்கு தேவைப்படுகிறது, எரிபொருள் மற்றும் சக்தி என்பன ரூபாயில் உழைத்து டொலரில் செலவிட்டு நஸ்ட நிலையில் ஓடிக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் கைகளில் உள்ளன, தொடர்ந்து பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்படுகின்றோம்- நாம் புறக்கணிக்கப்பட்டதாக தோன்றுகிறது. மேலும் பொருளாதார நெருக்கடியானது இப்போது பழிவாங்கலுடன் தாக்குகிறது. நமது பொருளாதாரச் சிக்கல்கள் குறித்து விரைவில் ஒரு ஆக்கத்தை வெளியிடுவோம். செய்வோம், ஆனால் இப்போதைக்கு, எரிபொருளை வாங்குவதற்கு எங்களுக்கு பணம் தேவை என்பதையும் அந்தளவுக்கு எங்களிடம் அதிக பணம் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
இந்த விவகாரத்தில் மின்சார சபை ஒன்றும் அப்பாவி அல்ல. இலங்கை மின்சார சபை மாற்றங்களுக்குத் தயாரின்றிக் காணப்படுவது இங்கு தெளிவாகத் தெரிகின்றது. இந்நிறுவனம் கிட்டத்தட்ட நாட்டின் அனைத்து சக்தி வழங்கலையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. நாட்டின் சக்தித் தேவை மற்றும் அதற்குரிய எரிபொருட் தேவை என்பவற்றுக்கு செலுத்தப்பட வேண்டிய உரிய கவனம் இங்கு வழங்கப்படாதுள்ளதுடன் உரிய எதிர்வு கூறல்களும் சரியாக மேற்கொள்ளப்படவில்லை – முழுமையாக திட்டமிடப்பட்ட மின்னுற்பத்தி நிலையங்களுக்கான கேள்விமனுப் பத்திரங்கள் கோரப்படாமை இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றது. 2021 ஆம் ஆண்டு நுரைச்சோலை மின் நிலைய செயலிழப்பு எரிபொருள் நெருக்கடிக்கான இன்னொரு சிறிய உதாரணமாக அமைகின்றது. செயலிழப்புகள் மற்றும் அவசர எரிபொருட் தேவைகளுக்கான மாற்று ஏற்பாடுகள் அங்கு காணப்படவில்லை. இலங்கை மின்சார சபை கட்டுப்படுத்தப்படுவதையும் விரும்புவதில்லை. பொது வசதிகள் ஒழுங்காக செயற்படுவதை உறுதி செய்யும் தேசிய அமைப்பான பொது வசதிகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களுக்குள் தமது அமைப்பு எவ்வாறு செயற்பட வேண்டும் எனக் கூறுவது உள்ளடங்குவதில்லை எனத் தெரிவித்த இலங்கை மின்சார சபையின் பேச்சாளர்கள் பிரசித்தமாக இலங்கை பொது வசதிகள் ஆணைக்குழுவை குறைகூறியிருந்தனர்.
எவ்வாறாயினும், முடிந்தால் பந்தை மீண்டும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்ப அவர்கள் தயங்குவதில்லை.
ஆனால் இந்த எல்லா பிரச்சனைகளுக்கும், நீங்கள் அவர்களின் அறிக்கைகளை போதுமான அளவு தோண்டினால், எண்கள் மட்டுமே கிடைக்கும். ஒரு நாடாக, மின்சாரம் பற்றிய அனைத்து முக்கியமான கேள்வியையும் நாம் வழியிலேயே விட்டுவிட்டோம்.
எதிர்காலத்தில் என்ன நிகழும்?
துரதிர்ஸ்டவசமாக, எதிர்காலமானது நிச்சயமற்றது. எம்மால் இப்போது சிறிய விடயங்களையே செய்ய முடியும். இலங்கை மின்சார சபையானது விரிவான திட்டங்களை 2041 வரை நீட்டிக் கொண்டுள்ளது. அவர்களின் ஆவணங்கள், எழுதும் நேரத்தில் வரைபு வடிவில் இருக்கும் போது, பல்வேறு அனல் மின்னுற்பத்தி நிலையங்களின் ஓய்வு மற்றும் பல தசாப்த கால முயற்சிகள் மேலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மாற்றீடுகளாக கொண்டு வருவதை விபரிக்கிறது.
இதில் ஏதாவது உண்மையில் நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அதேநேரம், எம்மால் தகவல்களை வழங்குவதன் ஊடாக மாத்திரமே உங்களுக்கு உதவ முடியும். அனைவரும் இலங்கை மின்சார சபையின் வலையமைப்புக்குள்ளேயே வருகின்றோம், அத்துடன் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படும் வேளை என்ன செய்ய வேண்டும் மற்றும் எவரை அழைக்க வேண்டும் என உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
இங்குள்ள பிரச்சினை, இலங்கை மின்சார சபையின் பிரிவு வலயங்கள் இலங்கையின் அரசியல் மற்றும் நிருவாக எல்லைகளுடன் பொருந்துவதில்லை. இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் அவர்களின் வரைபடங்கள் போன்றவற்றை உருவாக்கி பயன்படுத்துவர் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை, நிபுணத்துவ அறிவு மற்றும் நாட்டின் புவியியல் பற்றிய புரிதல் என்பவற்றுக்கு இடையான தொடர்பு அற்ற நிலை இங்குள்ளது.
எனவே, இதனை கூடுதலாக புரிந்து கொள்ளும் வகையில் நாம் சில விடயங்களைச் செய்துள்ளோம்.
இது இலங்கையின் வரைபடம், மாவட்ட மட்டங்களைக் காண்பிக்கின்றது. அதற்கு மேலாக இலங்கை மின்சார சபையின் மாவட்ட பிரிவுகள் மற்றும் எல்லைகள் காண்பிக்கப்பட்டுள்ளன, இது அவர்களின் இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டது. அத்துடன் அவர்களின் வருடாந்த அறிக்கையுடன் (அது மிகவும் தெளிவற்றது) இது மீளச் சோதிக்கப்பட்டது. உங்களின் இலங்கை மின்சார சபை பிரிவை தெரிந்து கொள்ள Locate Yourself இணைப்பை சொடுக்கலாம் (துல்லியமானது அல்ல) அல்லது உங்களின் முகவரியை பதிவிட்டு அறியலாம் (ஓரளவு துல்லியமானது). அதன் குறிகாட்டி உங்களின் மின்சார சபை பிரிவை உங்களுக்கு அறிவிக்கும்.
அவர்களின் பிரிவு திட்டத்தில் கவனிக்க வேண்டிய சில முரண்பாடுகள் உள்ளன. உதாரணமாக, தெஹிவளையும் இரத்மலானையும் கொழும்புப் பிரிவின் ஒரு பகுதியல்ல; அவை மேற்கு தெற்கு 1. ஸ்ரீ ஜயவர்தனபுர மேற்கு தெற்கு 2 - அதே பிரிவு அவிசாவளை, ஹொரண மற்றும் பண்டாரகம. CEB ஒரு குறிப்பிட்ட பிரிவில் மின்வெட்டை அறிவிக்கும் போது, உங்கள் மாவட்டம் அல்லது பகுதி அந்த மின்வெட்டு பகுதிக்குள் வருகிறதா இல்லையா என்பதை நீங்கள் கண்டுபிடிக்க முடியும்.
எங்களது ஆசீர்வாதங்கள். மெழுகுவர்த்திகளை வாங்கிக்கொள்ளுங்கள்!