ஆய்வு : ஜோசுவா பெரேரா செம்மையாக்கம் : ரினீகா டி சில்வா மொழிபெயர்ப்பு : செல்வராஜா கேசவன்
நீங்கள் கேட்டவை:
22வது திருத்தம் என்றால் என்ன, அது நமது தற்போதைய மற்றும் எதிர்கால அரசியல் போக்கை எவ்வாறு மாற்றப்போகிறது?
எங்கள் பதில்:
தற்போதைய இலங்கையின் சமூக-பொருளாதார மற்றும் அரசியல் நிலவரம் பல்வேறு கவலைகளை ஏற்படுத்துவதாய் உள்ளது. நமது அடுத்தடுத்த நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்குகின்ற பல பிரச்சினைகளில் புதிய அரசியலமைப்பு திருத்தச் சட்டம் பாரிய பங்கு வகிக்கின்றது.
இந்த கட்டுரையில் வரவிருக்கும் 22வது திருத்தம் பற்றியும், தற்போதைய அரசியல் நீரோட்டத்தில் அது ஏற்படுத்துகின்ற சலனங்கள் பற்றியும் பார்க்கவுள்ளோம். அரசியலமைப்புச் சட்டத்தின் சுருக்கமான வரலாற்றினை அறிந்து கொள்ள ஆர்வம் இருப்பின், Roar ஊடகத்தின் கட்டுரை உங்களுக்கு பொருத்தமாயிருக்கும்.
21வது திருத்தம் நடைமுறையில் இல்லாததால் 22வது திருத்தம் பாரிய சலனங்களை ஏற்படுத்துகிறது.
எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 21வது திருத்தம் ஒன்றை முன்வைத்த போதிலும் அதனை செயற்படுத்துவது தொடர்பில் எதுவித அக்கறையினையும் காட்டவில்லை. உச்சநீதிமன்றம் அதன் உட்பிரிவுகள் தொடர்பில் முரண்பட்டது. அதன் விளைவாக விஜேதாச ராஜபக்ச தனிநபர் சட்டமூலமாக முன்மொழிந்த வரைவு, 22வது திருத்தமாக குறியிடப்பட்டது. 2022 மே மாதம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து மேற்படி திருத்தம் அமைச்சரவையிடம் முன்வைக்கப்பட்டது. அவையிலுள்ள 225 உறுப்பினர்களில் 179 பேர் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மாத்திரம் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்திருந்தார்.
இது விரைவில் 21வது சீர்திருத்தமாக அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்படும்.
இத்திருத்தம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை எவ்வாறு மறுசீரமைக்க போகிறது? எதிர்கால கொள்கைகளை எவ்வாறு வடிவமைக்க போகிறது? மற்றும் வருங்காலங்களில் நாட்டினை எவ்வாறு பாதிக்கவுள்ளது? போன்ற ஐயங்கள் 22வது திருத்தம் தொடர்பில் எழும் சர்ச்சைகளின் மையப்புள்ளியாக இருக்கின்றன.
இத்திருத்தம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்துவது, அரசியலமைப்புச் சபைக்கு மீண்டும் புத்துயிரூட்டுவது, மற்றும் சுயாதீனக் குழுக்களின் நிர்வாகத்தை எளிதாக்குவது போன்ற இலக்குகளை கொண்டுள்ளது.
அரசியலமைப்புச் சபையில் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கும் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஜனாதிபதி நியமிக்கும் மற்றொரு அமைச்சர் ஆகியோர் அடங்குவர். இதற்கு மேலதிகமாக பின்வருவோரும் இச்சபையில் உள்ளடங்குவர்:
- இலங்கை தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர்,
- இலங்கை வர்த்தக சபையின் உறுப்பினர் ஒருவர்,
- a state university professor nominated by the University Grants Commission. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட ஓர் அரச பல்கலைக்கழக பேராசிரியர்.
இப்புதிய திருத்தத்தின்படி, நாடாளுமன்றமொன்று பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் கழித்து அதனை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படும்.
மேலும், அரசியலமைப்புச் சபை பல்வேறுபட்ட சுயாதீனக் குழுக்களை நியமனம் செய்வதில் செல்வாக்கு செலுத்தும்.
பிரதமரின் நியமனம் மற்றும் நீக்கத்தில் ஜனாதிபதியின் ஒப்புதல் என்பது இங்கு விவாதத்திற்குரியது ஆகும். 22வது திருத்தம் ஜனாதிபதி அதிகாரத்தின் செயற்பாட்டை மாற்றியமைக்கும். இத்திருத்தம், பிரதமர் ஒருவர் அப்பதவிக்கு தகுதியற்றவர் என ஜனாதிபதி எண்ணினால் அப்பிரதமரை பதவி நீக்கம் செய்வதற்கான ஜனாதிபதியின் அதிகாரத்தினை மறுபரிசீலனை செய்யும். இது 20வது திருத்தத்தின் கீழான ஒரு தீர்மானத்தின் மறுபரிசீலனையாகும்.
20வது திருத்தத்தில் இருந்தே சில ஆணைக்குழுக்கள் தொடர்ந்து செயற்பட்டு வருகின்ற போதிலும், அவற்றின் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்தது. 22வது திருத்தத்தின்படி, அரசியலமைப்புச் சபையின் பரிந்துரையின் பேரில் இந்த ஆணைக்குழுக்களில் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை பெயரிடும் உரிமை மாத்திரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படும்.
அமைச்சரவையினை பொறுத்தவரையில் மொத்தம் 30 அமைச்சர்கள் மற்றும் 40 அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்கள் உள்ளடக்கப்படுவர்.
புதிய சட்டமூலத்தின்படி, அமைச்சரவை நியமனத்தின் போது பாராளுமன்றின் கருத்தினை ஜனாதிபதி கேட்பது அவசியமாகும். எவ்வாறாயினும் பிரதமரின் ஆலோசனையுடனேயே இவ்வாறான நியமனங்கள் மேற்கொள்ளப்படும். தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது போன்ற முடிவுகளில் பாராளுமன்றின் செல்வாக்கு அதிகமாயிருக்கும். புதிய சட்டமூலத்திற்கமைவாக, அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்கள் ஆகியோரின் எண்ணிக்கையினை பாராளுமன்றமே தீர்மானிக்கும்.
ஜனாதிபதியின் அதிகாரங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அப்பால் செல்லாது.
ஒன்பது ஆணைக்குழுக்களின் நிர்வாகம் மற்றும் அவற்றின் நியமனங்களில் அரசியலமைப்புச் சபை முக்கிய பங்கை வகிக்கும். இவ் ஆணைக்குழுக்களில் அரசாங்க சேவை ஆணைக்குழு (PSC), தேசிய தேர்தல் ஆணைக்குழு (NEC), இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL), கணக்காய்வு சேவை ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு (CIABOC) மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு (NPC) ஆகியன உள்ளடங்கும். மீதமுள்ள மூன்று ஆணைக்குழுக்கள் அலுவலகங்கள் நிதி, எல்லை நிர்ணயம் மற்றும் தேசிய கொள்முதல் விவகாரங்களை மேற்பார்வையிடும்.
இத்திருத்தத்தின்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டை குடியுரிமையை கொண்டிருக்க அனுமதியில்லை. இரட்டை குடியுரிமை கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியினை இழப்பர். எதிர்கால தேர்தல்களில் இரட்டை குடியுரிமை உடையவர்கள் போட்டியிட அனுமதிக்கப்படமாட்டாது.
பல தசாப்த காலமாக காணாததொரு மிக மோசமான சமூக-பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் பின்னணியில், 22வது திருத்தம் அடுத்த கட்ட அரசியல் போக்குக்கான சூழலை உண்டாக்கும். கோத்தபாய ராஜபக்ச 20வது சீர்திருத்தத்தினை பயன்படுத்தி மேற்கொண்ட முறைகேடுகள், எதிர்பாராததொரு நல்விளைவொன்றை ஏற்படுத்தியுள்ளமையை நாம் இங்கு மறுப்பதற்கில்லை.
மேலதிக வாசிப்பிற்கு
எங்களிடம் கேளுங்கள்!
முகநூல், ட்விட்டர், மற்றும் இன்ஸ்ராகிராமில் #AskWatchdog இனைப் பயன்படுத்தியோ, நேரடியாக எமக்கு செய்தி அனுப்பியோ, அல்லது எம்மை ரக் செய்வதன் மூலமே உங்கள் கேள்விகளை கேளுங்கள்.