தமிழில்: #AskWatchdog - 09

தமிழில்: #AskWatchdog - 09

image
ஆய்வு : உமேஷ் மொரமுதலி, ஜோசுவா பெரேரா செம்மையாக்கம் : ரினீகா டி சில்வா மொழிபெயர்ப்பு : செல்வராஜா கேசவன்

@October 22, 2022

Read this article in English | සිංහල | தமிழ்

நீங்கள் கேட்டவை:

புனர்வாழ்வு பணியகத்திற்கான சட்டமூலம் பற்றி நாம் என்ன தெரிந்திருக்க வேண்டும்?

எங்கள் பதில்:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசினால் முன்மொழியப்பட்டிருந்த இச்சட்ட மூலம் தனது அடக்குமுறை தன்மை மற்றும் மனித உரிமை மீறல்கள் காரணமாக பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ளது.

புனர்வாழ்வு பணியகத்திற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்டது. இச்சட்டமூலம் அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் என அனைவராலும் விமர்சிக்கப்பட்டது.

ஒக்டோபர் 9 நிலவரப்படி, உயர் நீதிமன்றம் இச்சட்டமூலத்திற்கு எதிராக அது அரசியலமைப்பிற்கு முரணானது என தாக்கல் செய்யப்பட்ட எட்டு மனுக்கள் மீதான விசாரணையை தொடங்கியுள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், முன்னாள் போராளிகள், ‘தவறாக வழிநடத்தப்பட்டோர்’, மற்றும் அடிப்படைவாத குழுக்களின் உறுப்பினர்கள் ஆகியோரின் புனர்வாழ்வே இச்சட்டமூலத்தின் இலக்கெனப்படுகிறது. மேற்படி வகைப்பாடுகளுக்கு தெளிவான சட்ட வரையறை இலங்கையில் இல்லையென்பதால், மத அடிப்படைவாதிகள் தொடங்கி செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக மற்றும் ஜனநாயக நீதிக்காக போராடும் குழுக்கள் என எவரையும் இது குறிவைக்கப் பயன்படுத்தப்படலாம். ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படைகளிலிருந்து விலகிச்செல்லும் எவரது கொள்கைகளும் மேற்படி சட்டமூலத்தின் கீழ் கொண்டுவரப்படலாம்.

இச்சட்டமூலமானது சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலியினருக்கு புனர்வாழ்வளிக்க தொடக்கத்தில் உருவாக்கப்பட்டது எனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின், ‘போதைப்பொருளுக்கு அடிமையானோர்’ மற்றும் ‘தவறாக வழிநடத்தப்பட்ட இளைஞர்கள்’ ஆகியோருக்கும் புனர்வாழ்வளிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது எனவும் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். இச்சட்டமூலம் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களது குடும்பத்தினரின் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சட்டமூலம் புனர்வாழ்வளிப்பதில் இராணுவத்தின் பங்கை சட்டபூர்வமாக்கும். ‘சட்டபூர்வமான ஆணைகளுக்கு கட்டாயமாக கீழ்படிய தேவையான குறைந்தளவு பலத்தினை பிரயோகிப்பதை’ சட்டபூர்வமானதாக்கும். இது சித்திரவதையினை சட்டபூர்வமானதாக ஒப்புக்கொள்ள வைக்கும் தந்திரமாகும்.  புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் அவர்களது பராமரிப்பாளர்கள் தயவில் இருக்க நேரிடும். மேலும் இரகசிய விடயங்கள் தொடர்பான உறுப்புரை 25, தவறுகளை வெளிக்கொணரும் செயற்பாட்டளர்களுக்கு தடங்கல்களை ஏற்படுத்தலாம். இச்சட்டமூலம் பணியகத்தின் பணியாளர்களை எத்தனை மனித உரிமை மீறல்களை செய்தாலும் சட்ட நடவடிக்கையின்றி தப்பித்துவிடலாம் என அவர்கள் பயத்தை போக்கும் வேலையை செய்கிறது.

புனர்வாழ்வளிக்கப்படும் தனிநபர்கள் ‘பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படலாம்.’ வேறு மொழியில் சொல்வதானால், தனிநபர்கள் ஊழியர்களாக மாற்றப்படலாம்.

ஒக்டோபர் 29 ஆந்திகதி, பாராளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இச்சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை அறிவித்தார். புனர்வாழ்வு பணியகத்திற்கான சட்டமூலம் அரசியலமைப்பின் உறுப்புரை 12(1) உடன் பொருந்திப்போகவில்லை என தீர்மானிக்கப்பட்டது. அரசியலமைப்பின் உறுப்புரை 84(2) இன் படி சிறப்பு பெரும்பான்மையுடன் மாத்திரமே மேற்படி சட்டமூலம் இயற்றப்பட முடியும், அதற்கு மேற்குறிப்பிட்ட வகுப்புகளில் ‘முன்னாள் போராளிகள்’, ‘வன்முறை குழுக்கள்’, ‘ஏனைய மக்கள் குழுக்கள்’ ஆகியன இச்சட்டமூலத்திலிருந்து நீக்கப்பட வேண்டும். அதற்கு பதில் ‘போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள்’ மீது மட்டும் பயன்படுத்தப்படுமாறு இச்சட்டமூலம் குறுக்கப்படும்.

இத்தகைய மாற்றங்களுக்கு மத்தியிலும் இச்சட்டமூலத்தின் தாக்கம் நாட்டின் மக்கள் மீது எவ்வாறிருக்கும் என்பதை நீண்ட கால நோக்கில் கூறமுடியாதுள்ளது.

இலங்கை தன்னை குறைந்த வருமானம் பெறும் நாடாக தரம் தாழ்த்துகிறது என எழுந்துள்ள சலனம் என்ன மாதிரியானது?

எங்கள் பதில்:

இலங்கையினை கீழ் மட்ட நடுத்தர வருமானம் பெறும் நாட்டிலிருந்து குறைந்த வருமானம் பெறும் நாடாக தரம் தாழ்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன அறிவித்தார். சிறிது நேரம் கழித்து ஜனாதிபதி ஊடக பிரிவு இலங்கை நடுத்தர வருமானம் பெறும் நாடாக தொடரவுள்ளதாக தெளிவுபடுத்தியது, ஆனால் அரசு இடைநிலை சலுகை கடன் திட்டத்தை மிக குறுகிய காலத்திற்கு மட்டும் பின்பற்றவுள்ளது.

இலங்கையோ ஏனைய எந்த நாடுகளோ தாம் எந்த வருமான வகுப்பை சேர்ந்தோர் என தீர்மானிக்க முடியாது. அது அந்தந்த நாடுகளின் தனிநபர் வருமானத்திற்கு அமைய தீர்மானிக்கப்படும். இது உலகவங்கி வகுத்துள்ள நான்கு தனிநபர் வருமான வகுப்புகளின் அடிப்படையில் இருக்கும். குறைந்த வருமானம் கொண்டவை, கீழ்மட்ட நடுத்தர வருமானம் கொண்டவை, மேல்மட்ட நடுத்தர வருமானம் கொண்டவை, உயர்ந்த வருமானம் கொண்டவை என்பனவே இந்நான்கு வகுப்புகள்.

வகுப்பு
மொத்த தனிநபர் தேசிய வருமானம் (அமெரிக்க டொலர்களில்)
குறைந்த வருமானம்
< 1.046
கீழ்மட்ட நடுத்தர வருமானம்
1,046 – 4,095
மேல்மட்ட நடுத்தர வருமானம்
4,096 -12,695
உயர் வருமானம்
> 12,695

மூலம்: உலக வங்கி

உலக வங்கியின் வகைப்படுத்தலின் அடிப்படையில், தனிநபர் வருமானம் 1045 அமெரிக்க டொலர்களுக்கும் குறைவாக உள்ள நாடுகள் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளாகும். 2021 ஆம் ஆண்டில், இலங்கையின் தனிநபர் வருமானம் 3820 அமெரிக்க டொலர்களாகும். எனவே இலங்கையானது கீழ் மட்ட நடுத்தர வருமானம் பெறும் நாடாகும். இலங்கை குறைந்த வருமானம் பெறும் நாடாக மாற அதன் தனிநபர் வருமானம் 1045 அமெரிக்க டொலரில் குறைவாக இருக்க வேண்டும். இப்போதைக்கு அதற்கு வாய்ப்பில்லை.

அப்படியானால் இடைநிலை சலுகை கடன் திட்டம் ஏன் அவசியம்?

எவ்வாறாயினும் இலங்கையினால் நாட்டின் கடன் வழங்கும் வகுப்பினை மாற்றுமாறு உலக வங்கியிடம் கோர முடியும். ஒரு நாட்டின், சலுகை கடன்களை பெறும் தகுதி அதனது கடன் வழங்கும் வகுப்பின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுமே ஒழிய வருமான வகுப்பின் அடிப்படையில் இல்லை.

உலக வங்கியில், சர்வதேச அபிவிருத்தி சங்கம் (IDA), கலவன், மீள்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கி (IBRD) என மூன்று வகையான கடன் வழங்கல் வகுப்புகள் காணப்படுகின்றன. சர்வதே அபிவிருத்தி சங்க வகுப்பின் கீழ் வழங்கப்படும் கடன்களே அதிகம் சலுகை (குறைந்த வட்டி, நீண்ட திருப்பி செலுத்தும் தவணை, நீண்ட கருணை தவணை) கடன்களாகும்.

image

மூலம்: OECD

2017 வரை சர்வதேச அபிவிருத்தி சங்க வகுப்பில் இருந்த இலங்கை அதன் பின்பு மீள்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கி வகுப்பிற்கு முன்னேறியது. இதனால் 2017 இற்கு பிறகு சர்வதேச அபிவிருத்தி சங்க வகுப்பினால் வழங்கப்படும் கடன்களை பெறும் தகுதியினை இலங்கை இழந்து விட்டது. எனவே, சர்வதேச அபிவிருத்தி சங்க கடன்களை (அதிகம் சலுகை மிக்க) பெற இலங்கை மீள்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கி வகுப்பிலிருந்து சர்வதேச அபிவிருத்தி சங்க வகுப்பிற்கு இலங்கை தரம் தாழ்த்தப்பட வேண்டும்.

உலக வங்கி ஒரு நாட்டின் கடன் வழங்கும் வகுப்பினை அதன் கடனை மீளச்செலுத்தும் இயலுமையின் அடிப்படையில் தீர்மானிக்கும். பொதுவாக ஒரு நாட்டின் தனிநபர் வருமானம் அதிகரிக்க அதிகரிக்க அவை குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் மட்டத்திலிருந்து நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் மட்டத்திற்கு உயரும், அது அவற்றின் கடனை மீளச்செலுத்தும் இயலுமையில் ஏற்படுகின்ற முன்னேற்றத்திற்கு ஒரு குறிகாட்டியாக கொள்ளப்படும்.

எவ்வாறாயினும், இலங்கையினால் அதன் வெளிநாட்டு கடன்களை மீளச்செலுத்த முடியாததன் காரணமாக அதன் வருமான மட்டம் தொடர்ந்தும் கீழ்மட்ட நடுத்தர வருமான மட்டமாக தொடர்கின்ற போதிலும் அதன் கடன்களை மீளச்செலுத்தும் இயலுமை சீரழிந்து விட்டது.

இலங்கைக்கு, அதன் வெளிநாட்டு கடன் மீள்செலுத்தல் இயலுமையில் உள்ள தடைகள் காரணமாக அதிக சலுகை கடன்கள் தேவைப்படுகின்றன. அதன் காரணமாக, அமைச்சரவை இலங்கையின் கடன் வழங்கும் மட்டத்தினை தரம் தாழ்த்த ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் சர்வதேச அபிவிருத்தி சங்க கடன்களுக்கான தகுதி கிடைப்பதனால் இலங்கையினால் அதிக சலுகை கடன்களை பெறமுடியும்.

மேலதிக வாசிப்பிற்கு

எங்களிடம் கேளுங்கள்!

முகநூல், ட்விட்டர், மற்றும் இன்ஸ்ராகிராமில் #AskWatchdog இனைப் பயன்படுத்தியோ, நேரடியாக எமக்கு செய்தி அனுப்பியோ, அல்லது எம்மை ரக் செய்வதன் மூலமே உங்கள் கேள்விகளை கேளுங்கள்.

👥
Watchdog is an open-source research collective. Learn more about us here. Watchdog යනු විවෘත මූලාශ්‍ර පර්යේෂණ සාමූහිකයකි. අපි ගැන තව දැනගන්න. Watchdog ஒரு திறந்த மூல ஆய்வு நிறுவனம். எம்மைப் பற்றிய அறிய