தமிழில்: #AskWatchDog - 03

தமிழில்: #AskWatchDog - 03

@June 9, 2022

Read this article in English | සිංහල| தமிழ்

image
ஆய்வு : உமேஷ் மொரமுதலி செம்மையாக்கம் : ஆயிஷா நாஸிம் மொழிபெயர்ப்பு : மொகமட் பைரூஸ்

நீங்கள் கேட்டது:

புதிய வரிகள் எவ்வாறு அமுலாகின்றன?

எங்கள் பதில் :

நிதி அமைச்சு கடந்த வாரம், வரி வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு வரி திருத்தங்களை அறிமுகப்படுத்தியது. வரி திருத்தங்களில் பெறுமதி சேர் வரி (VAT) வீதம் 8 வீதத்திலிருந்து 12 வீதமாகவும், பெருநிறுவன வருமான வரி (CIT) வீதம் 30 வீதமாகவும் சலுகை CIT வீதம் 15 வீதமாகவும் அதிகரிக்கப்பட்டது. அத்துடன் உழைக்கும்போது செலுத்தும் வரி (PAYE) யை மீள அறிமுகம்இ தனிநபர் வருமான வரி (PIT) அதிகரிப்பு, பிடித்துவைத்தல் வரி (WHT) மீள அறிமுகம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களின் மீதான இறக்குமதி வரிகளை அதிகரித்தல் ஆகிய திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.

இவற்றை ஒவ்வொன்றாக நோக்குவோம்.

  1. VAT திருத்தங்களில் அதிகரித்த வீதங்கள் மற்றும் விற்பனைக்காக செலுத்த வேண்டிய VAT ஆரம்ப வரம்பை ஒரு காலாண்டிற்கு ரூபா 75 மில்லியனிலிருந்து ரூ. 30 மில்லியனாக குறைப்பது ஆகியன உள்ளடங்குகின்றன. ஆரம்ப வரம்பைக் குறைப்பது என்பது அதிகமான வணிகங்கள் VAT செலுத்த வேண்டும் என்பதையே குறிக்கிறது. அதன் மூலம் வணிகங்கள் வெளிப்படுத்தும் வருமானம் அதிகரிக்கும். முன்னர் VAT செலுத்தாத வணிகங்கள், தற்போது வாடிக்கையாளரிடம் VAT அறவிடுவதால், பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். உங்கள் பிரதேசத்திலுள்ள பேக்கரியை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். ஓர் அனுமானமாக குறித்த பேக்கரி ஒரு காலாண்டுக்கு 35 மில்லியன் ரூபா பெறுமதியான விற்பனையில் ஈடுபட்டால், முன்னர் VAT செலுத்த வேண்டியிராவிடின், தற்போது அவர்கள் தமது விற்பனை VAT ஆரம்ப வரம்பினை விஞ்சுவதால் VAT இனை விதிக்க வேண்டிவரும். இதன் அர்த்தம் என்னவெனில், குறித்த பேக்கரியில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை அண்ணளவாக 12 வீதத்தினால் அதிகரிக்கப்படும் என்பதாகும். எனினும் VAT திருத்தமானது அரிசி, பருப்பு, வெங்காயம், சீனி மற்றும் பல அத்தியாவசிய உணவுகளின் விலைகளை கணிசமாக பாதிக்காது. ஏனெனில் அத்தகைய பொருட்களுக்கு விசேட வியாபாரப் பண்ட வரி  (SCL) அறவிடப்படுகிறது.
  2. உழைக்கும்போது செலுத்தும் வரி (PAYE) யை மீள அறிமுகப்படுத்தினால், நீங்கள் மாதம் ரூபா 150,000 க்கு மேல் சம்பாதித்தால் உங்கள் சம்பளத்தில் இருந்து வருமான வரி கழிக்கப்படும். இதற்கு மேல் படிப்படியாக வரி விதிக்கப்படும். முதல் 100,000 ரூபாவுக்கு 4 வீதம் அறவிடப்படும். அதற்கு மேல் சம்பாதித்தால், இது ஒவ்வொரு 100,000 ரூபாவுக்குமாக 32 வீதம் வரை அதிகரிக்கப்படும். PAYE வரி மீள விதிக்கப்படும் முறை தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட விளக்கங்கள் வழங்கப்படவில்லை. எனினும் முன்னைய PAYE முறைக்கமைய நபர் ஒருவர் 250,000 ரூபாவை வருமானமாகப் பெற்றால், அதில் 100,000 ரூபா மாத்திரமே PAYE இற்கு பொறுப்புடையதாகும். இதன் அர்த்தம் 4000 ரூபா மாத்திரம் PAYE வரியாக கழிக்கப்படும். மேலும், அதிகபட்ச வரி வீதம் உயர்த்தப்பட்டதால், மாதச் சம்பளம் சுமார் 850,000 ரூபாவுக்கு மேல் பெறுபவர்கள் 32 வீத வரி செலுத்த வேண்டும். இது முன்னர் 18 வீதமாகவே இருந்தது. இந்த மாற்றங்கள் ஒக்டோபர் 01 முதல் அமுலுக்கு வரும்.
  3. பிடித்து வைத்தல் வரியானது (WHT) வட்டி வருமானத்தில் 05 வீதம் கழிக்கப்படும். உதாரணமாக, நிலையான வைப்புகளுக்கு நீங்கள் 25,000 ரூபா வட்டி வருமானம் பெற்றால் அதில் 2,500 ரூபா கழிக்கப்பட்டு, உங்களுக்கு வருமானமாக 22,500 ரூபா மாத்திரமே கிடைக்கும். இந்த வரி வைப்புத்தொகையிலிருந்து கழிக்கப்படவில்லை, மாறாக வட்டியில் இருந்து மட்டுமே கழிக்கப்படுகிறது என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். மேலும், WHT ஆலோசனை சேவைகளிலும் விதிக்கப்படுகிறது. இங்கு கொடுப்பனவு செலுத்தப்படும் போது ஆலோசகரின் கட்டணத்தில் 05% கழிக்கப்படும். மாதம் ரூ.100,000க்கு மேல் கிடைக்கும் வாடகை வருமானம் மீதும் WHT விதிக்கப்படுகிறது. இந்த எல்லா சந்தர்ப்பங்களிலும், பணம் செலுத்துபவர்கள் தாம் செலுத்தும் தொகையிலிருந்து 05% வரியைக் கழித்து அதனை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு (IRD) செலுத்துவார்கள்.
  4. இந்த வருமான வரி திருத்தங்களுடன், சில இறக்குமதிகளுக்கு மேலதிக கட்டணம் விதிக்கப்படுகிறது. தற்போதுள்ள சுங்க இறக்குமதி வரிகள் விதிக்கப்படும் மேலதிக கட்டணத்திற்கு ஏற்ப அதிகரிக்கப்படும். உதாரணமாக, மேலதிக கட்டணம் 100% எனில், தற்போதுள்ள சுங்க வரி 100% இனால் அதிகரிக்கும். மேலதிக கட்டணம் தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியின்படி, சலவை இயந்திரங்களுக்கு 100% மேலதிக கட்டணம் விதிக்கப்படுகிறது. சலவை இயந்திரங்களுக்கு தற்போதுள்ள சுங்க வரி 15% ஆக இருப்பதால், மேலதிக கட்டணம் அதிகரிப்பதன் மூலம் சலவை இயந்திரம் தரையிறக்கம் செய்யப்பட்டதும் அதற்கான செலவு 30% ஆகிவிடும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இது விலையை இரட்டிப்பாக்குவதில்லை. உதாரணமாக, மீண்டும் சலவை இயந்திரங்களை எடுத்துக் கொள்வோம். தரையிறக்க செலவு ரூ. 100,000 மற்றும் முந்தைய சுங்க வரி ரூ. 15,000 எனில் அதன் மீதான வரி இப்போது ரூ. 30,000 ஆக இருக்கும். குளிரூட்டிகள், ஷேவர்கள், வெற்றிட கிளீனர்கள், பாலாடைக்கட்டி மற்றும் பல இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் உட்பட பல பொருட்களுக்கு இத்தகைய மேலதிக கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான வர்த்தமானியை இங்கு பார்க்கலாம். இறக்குமதி செய்யப்படும் சில உணவுகளின் விசேட வியாபாரப் பண்ட வரி (SCL) மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், இந்த பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும். இந்தப் பட்டியலில் அப்பிள்கள், திராட்சைகள், ஆரஞ்சுகள், பேரீத்தம் பழங்கள் உட்பட மேலும் பல உள்ளன.

மே 09 தாக்குதல்களுக்குப் பிறகு என்ன நடந்தது, யார் கைது செய்யப்பட்டார்கள்?

எங்கள் பதில் :

மே 09 அன்று கோட்டாகோகம மீதான தாக்குதலைத் தொடர்ந்து, பொலிஸாரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் (சிஐடி) தாக்குதலில் ஈடுபட்ட பலரைக் கைது செய்தனர். எங்கள் முந்தைய பகுப்பாய்வில், தாக்குதல்களில் பங்கேற்ற பிரபலங்களை நாங்கள் அடையாளம் கண்டிருந்தோம்.

மே 16 அன்று, சட்டமா அதிபர், 22 பேர்களைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு இத்தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டதாக கருதுவதற்கான நியாயமான காரணங்கள் இருப்பின் கைது செய்யுமாறு பொலிசாருக்கு அறிவுறுத்தினார். இந்த நபர்களில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் மிலான் ஜயதிலக்க, மொரட்டுவை மேயர் சமன் லால் பெர்னாண்டோ, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகமகே மற்றும் டான் பிரியசாத் ஆகியோர் அடங்குவர்.

மே 17 அன்று, சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு ஜூன் 01 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். மஹிந்த கஹந்தகமகே கடந்த மே மாதம் 25ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நாள் தெளிவாகத் தெரியாத நிலையில், திலீப் பெர்னாண்டோவும் கைது செய்யப்பட்டு ஜூன் 08 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். கஹந்தகமகே மற்றும் பெர்னாண்டோ ஆகிய இருவரையும் ஜூன் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஜூன் 02 ஆம் திகதி, நீதிமன்றம் உத்தரவிட்டது. ஸ்ரீ லங்கா பொதுஜன கல்விச் சேவைகள் சங்கத்தின் தலைவர் வசந்த ஹந்தபங்கொட மே 31ஆம் திகதி கைது செய்யப்பட்டு ஜூன் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். சமன் லால், மஞ்சுள பிரசன்ன மற்றும் டான் பிரியசாத் ஆகியோர் மே 16 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஜூன் 08 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேக நபராக அடையாளப்படுத்தப்பட்ட பின்னரும், ஜூன் 07ஆம் திகதிவரை கைது செய்யப்படவில்லை. சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. எனினும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னகோனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர். மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து அவரை இடமாற்றம் செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த பதில் எழுதப்படும் நேரத்தில், பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஏனைய 12 பேருக்கும் 08 ஜூன் 2022 அன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, மொரட்டுவ மேயர் சமன் லால் பெர்ணான்டோ, டான் பிரியசாத் ஆகியோரை ஜுன் 15 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலதிக வாசிப்புக்கு

எம்மிடம் கேளுங்கள்!

Twitter, FB அல்லது Instagram இல் #AskWatchdog ஐப் பயன்படுத்தவும் அல்லது எங்களை Tag செய்யவும்.

👥
Watchdog is an open-source research collective. Learn more about us here. Watchdog යනු විවෘත මූලාශ්‍ර පර්යේෂණ සාමූහිකයකි. අපි ගැන තව දැනගන්න. Watchdog ஒரு திறந்த மூல ஆய்வு நிறுவனம். எம்மைப் பற்றிய அறிய