கட்டாய நாணய மாற்றல் ? உண்மையில் எவ்வாறு இலங்கை மத்திய வங்கி உங்களது டொலர்களைப் பெறுகின்றது

பயப்பட வேண்டாம்! இந்தக் கட்டுரையில் கட்டாய நாணயமாற்று சர்ச்சைகள் தொடர்பில் நாட்டில் அமுலிலுள்ள சட்டங்களை அலசி ஆராய்கிறோம்.

@February 1, 2022

Read this article in English | සිංහල | தமிழ்

image
ஆக்கம் மற்றும் பகுப்பாய்வு நாதிம் மஜீத் ஆய்வு உமேஷ் மொரமுதலி செம்மையாக்கம் ஆயிஷா நாஸிம் மொழிபெயர்ப்பு மொஹமட் பைரூஸ் &  நாதிம் மஜீத்

ஒரு புதிய ஆண்டு, ஒரு புதிய நபராக நீங்கள், செல்ல வேண்டிய இடங்கள், பார்க்க வேண்டிய மக்கள் என திட்டமிட்டிருப்பீர்கள். ஆனால் இதே நேரத்தில் உங்கள் வங்கி உங்கள் வெளிநாட்டு நாணய வருமானம் அனைத்தையும் இலங்கை ரூபாயாக மாற்றியிருப்பதைக் கண்டு நீங்கள் அதிர்ச்சியடைந்திருப்பீர்கள். வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடன் தொடர்புள்ள பல தொழில்முனையும் சுதந்திர தொழில்முனைவோர், செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் ஆலோசகர்கள் வு-டாங் கிளான் போல ட்விட்டரில் இறங்கி டொலர்களைத் தேடுகிறார்கள்.

வாடிக்கையாளர்களின் உள்நோக்கிய பண வரவினை மாற்றுமாறு கட்டாயப்படுத்துவதாக வங்கிகள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் அந்நிய செலாவணி கணக்குகளில் உள்ள நிலுவைகளை வலுக்கட்டாயமாக மாற்ற வேண்டுமென இலங்கை மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளதாக வெளிவரும் அறிக்கைகள்  தவறான வதந்திகளை பரப்பும் சக்திகளின் செயற்பாடு என இலங்கை மத்திய வங்கியின் ஒப்பற்ற ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆளுநர் கப்ராலின் கூற்று எந்தளவுக்கு உண்மைத்தன்மையானது ?

ஆளுநர் இதில் வல்லவர், மேலும் தனது வார்த்தைகளை மிகவும் கவனமாக தேர்வு செய்வார். மேலோட்டமாகப் பார்த்தால், அவரது கூற்று உண்மையானது. இலங்கை மத்திய வங்கி புத்தாண்டு தினத்தன்றும் விழித்துக் கொள்ளவில்லை, அனைவரின் வங்கி இருப்பையும் ரூபாயாக மாற்ற வேண்டும் என்று வங்கிகளுக்கு அழைப்பு விடுக்கவுமில்லை.

அதற்குப் பதிலாக, எங்களிடம் இருப்பது ஒக்டோபர் 28, 2021 அன்று வெளியிடப்பட்ட 2251/42 இலக்கம் அதிவிசேட வர்த்தமானி - 'சேவை ஏற்றுமதியாளர்கள்” தங்கள் வருவாயை ரூபாவாக மாற்ற வேண்டும் எனக் கூறுகின்றது. இந்த வகையைச் சேர்ந்தவர்களுள் பெரும்பாலானவர்கள்  சுதந்திர தொழில்முனைவோர், செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் ஆலோசகர்களாவர்.

அதிவிசேட வர்த்தமானி 2251/42 எந்த ஒரு பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதியாளரும் “இலங்கையில் ஏற்றுமதிப் பெறுகைகளைப் பெறுகின்ற பொருட்கள் மற்றும் பணிகளின் ஒவ்வொரு ஏற்றுமதியாளரும், கீழே குறிப்பிடப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட கொடுப்பனவுகள் தொடர்பில் மாத்திரம் அத்தகைய பெறுகைகளைப் பயன்படுத்தி இலங்கையில் கிடைக்கப்பெற்ற அத்தகைய ஏற்றுமதிப் பெறுகைகளின் எஞ்சியதை தொடர்ந்துவருகின்ற மாதத்தின் ஏழாவது (07 ஆவது) நாளன்று அல்லது அதற்கு முன்னர் இலங்கை ரூபாவாக கட்டாயமாக மாற்றுதல் வேண்டும்” எனக் கூறுகின்றது.

சுருக்கமாகக் கூறுவதானால், சேவை ஏற்றுமதியாளர்களுக்கு மனக்குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக 'தீய சக்திகள்” என அவர் கண்டித்ததைத் தவிர, ஆளுநரின் ட்விட் உண்மையானது போலவே இருந்தது. உண்மையில் ரூபாவாக மாற்றப்படுவது ஒக்டோபர் 28, 2021க்குப் பின்னராக வெளிநாட்டு நாணயத்தின் உள்நோக்கி அனுப்பப்படும் பணம் ஆகும் - அடிப்படையில், அங்கீகரிக்கப்பட்ட ஐந்து வகை கொடுப்பனவுகள் தவிர்த்து, உங்கள் கணக்கில் வரும் அனைத்தும்:

1. பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்பவரின் தற்போதைய கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான வெளிச் செல்லும் பணம்.

2. பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்பவரின் பயண நோக்கங்களுக்காக வெளிநாட்டு நாணயத் தாள்களில் மீளப் பெறுதல் அல்லது நிதி பரிமாற்றம்.

3. இலங்கை மத்திய வங்கி மற்றும் தொடர்புடைய சட்டத்தின் கீழ் (வெளிநாட்டுச் செலாவணி சட்டம், வங்கித் தொழில் சட்டம்) அனுமதிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியாளரால் பெறப்பட்ட கடன் சேவை செலவுகள் மற்றும் வெளிநாட்டு நாணய கடன்கள் மற்றும் நிதி வசதியினை திருப்பிச் செலுத்துதல்.

4. பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்பவரால் பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் சேவைகளைப் பெறுவதற்கும் இது போன்ற பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி தொடர்பான வெளிநாட்டு நாணயத்தில் ஒரு மாத பொறுப்புக்கள் உட்பட பணம் செலுத்துதல்,

5. ஏற்றுமதி வருமானத்தில் 10% வரை வெளிநாட்டு நாணயத்தில் இலங்கை அபிவிருத்தி முறிகளில் முதலீடு செய்வது தொடர்பான கொடுப்பனவுகள்.

பல தனிப்பட்ட தொழில்முனைவோர், செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் ஆலோசகர்கள் மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள அனுமதிக்கப்பட்ட கொடுப்பனவுகளுக்கான ஐந்து விதிவிலக்குகளில் எதையும் எதிர்கொள்ள வாய்ப்பில்லை, இது ஒக்டோபர் 28 ஆம் திகதிக்குப் பின்னர் அவர்களின் மொத்த வருமானம் ஏன் ரூபாயாக மாற்றப்பட்டது என்பதை விளக்குகின்றது.

எவ்வாறாயினும், ஒக்டோபர் 28 ஆம் திகதிக்கு முன்னர் ஒருவரின் முழுக் கையிருப்பும் வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டிருந்தால், அது கணக்கு மீதி மற்றும் வரவுகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை அறிய முடியாத ஒருவரின் அல்லது அதிக ஆர்வமுள்ள வங்கியின் தவறான புரிதலாகும். இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் ஏதேனும் சந்தேகங்களைத் தீர்க்க வேண்டும், இருப்பினும் வழங்கப்பட்ட பதில்கள் உங்கள் காணாமல் போன டொலர்கள் தொடர்பான உங்கள் கோபத்தைத் தணிக்க எதையும் செய்யவில்லை. இலங்கை மத்திய வங்கியின் நடவடிக்கைகள் திருட்டு அல்லது மிரட்டி பணம் பறிப்பது போன்று இருப்பதாக நீங்கள் நினைத்தால் உங்களை மன்னிக்கலாம். 2021 ஆம் ஆண்டு டிசம்பரில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இதனைத் தடுத்து நிறுத்தக் கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.

இலங்கைக்கு வெளியே வழங்கப்படும் சேவைகளுக்கான சட்டத்தரணிகளின் வருமானத்தை மையமாகக் கொண்ட அவர்களது மனுவில், உரிமையாளரின் விருப்பத்திற்கு மாறாகவும் உரிமையாளரின் அனுமதியின்றியும் தனியாருக்குச் சொந்தமான சொத்தை மாற்றுவது வெளிநாட்டுச் செலாவணிச் சட்டம் மற்றும் நாணயச் சட்டத்தின் அதிகாரங்களின்படி சட்டத்திற்கு அப்பாற்பட்டது என சட்டத்தரணிகள் சங்கம் வாதிடுகிறது.

மனுதாரர்கள், எதிர்மனுதாரர்களான 1வது (நிதி அமைச்சர்) அத்துடன்/அல்லது 2வது (இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர்) வர்த்தமானி 2251/42 இனை வெளியிடுவதற்கான முடிவை செல்லுபடியற்றதாக்குவதற்கான எழுத்தாணையைக் கோருகின்றனர். வர்த்தமானி 2251/42 செல்லுபடியற்றது என்றும் சட்டவலிதற்றது என்றும் நீதிமன்றம் பிரகடனப்படுத்த வேண்டும் எனவும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

நீதிமன்றம் வேறுவிதமாக தீர்ப்பளிக்கும் வரை அந்த விதிகள் நடைமுறையில் இருக்கும்.

ஒக்டோபர் 28 இற்கு முன்பு உங்கள் கணக்கில் நீங்கள் வைத்திருந்த டொலர்களுக்கு என்ன நடக்கும் ?

அதிவிஷேட வர்த்தமானி 2251/42 நடைமுறைக்கு வந்தபோது, 2021 ஒக்டோபர் 28 இற்கு முன்னர், பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியாளருக்கு உள்நோக்கி அனுப்பப்படும் எந்தவொரு கொடுப்பனவும் 2021 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆந் திகதியன்று வெளியிடப்பட்ட 2229/9 அதிவிஷேட வர்த்தமானி ஏற்பாடுகளுக்கு அமைவாக நிர்வகிக்கப்படும். இந்த குறிப்பிட்ட வர்த்தமானி அனைத்து ஏற்றுமதியாளர்களும் தமது வெளிநாட்டுச் செலாவணி வருவாயில் 25% இனை 30 நாட்களுக்குள் இலங்கை மத்திய வங்கியினால் நிர்ணயிக்கப்பட்ட சில விதிவிலக்குகளுக்கு அமைவாக  ரூபாயாக மாற்ற வேண்டும் என நிர்ப்பந்திக்கின்றது.

உங்களால் என்ன செய்ய முடியும் ?

நாங்கள் முதலீட்டு ஆலோசகர்கள் அல்லர், எனவே இந்த ஆலோசனைகள் எதையும் அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்களால் செய்ய முடியுமாக இருக்கும் என நீங்கள் கருதும் விடயங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

1. ட்விட்டரில் அது தொடர்பில் குரலெழுப்புங்கள்.

2. உங்கள் கட்டணத்தை உயர்த்துங்கள் (இதனால் உங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையலாம்) அல்லது இளமைத்துடிப்புள்ள எமது விளையாட்டு அமைச்சர் ஆதரவளிக்கும் கிரிப்டோகரன்சியில் பணம் பெறுங்கள். (இலங்கையில் முற்றிலும் கட்டுப்பாடற்றது, எனவே பாதுகாப்புகள் எதுவும் இல்லை ருளுனுவு போன்ற கிரிப்டோகரன்சியை நீங்கள் தேர்வுசெய்யும் வரை அதன் உறுதியற்ற தன்மையைக் குறிப்பிட வேண்டியதில்லை).

3. தங்கத்தில் கொடுப்பனவைச் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை வையுங்கள்

4. உங்கள் வருமானத்தில் 10% வரை இலங்கை அபிவிருத்தி முறிகளில் முதலீடு செய்யுங்கள், ஆனால் அந்த தொந்தரவு தரும் “மதிப்பற்ற" தர முதலீட்டு மதிப்பீடுகளையும் கவனியுங்கள். தற்செயலாக, இலங்கையின் தற்போதைய மதிப்பீடு பிரபலமற்ற கிரீஸ் அரசாங்க முறிகளை விடவும் குறைவாக உள்ளது, ஏப்ரல் 2011 இல், உலகளாவிய நிதி நெருக்கடிக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டது ஒரு விவேகமான முதலீடு என்று நமது இலங்கை மத்திய வங்கி கருதுகின்றது. (2014 இல் உச்ச நீதிமன்றம் இலங்கை மத்திய வங்கியினால் எந்தவொரு தவறும் செய்யப்படவில்லை என விடுவித்ததோடு ஆளுநர் கப்ரால் அவர்களும் தங்களது செயற்பாடுகள் இடர்கால தந்திரோபாயத்தின் ஒரு பகுதி என நியாயப்படுத்தினார்).

இலங்கையின் ஸ்திரமற்ற பொருளாதார சூழ்நிலையில், பொதுப் பயன்பாடுகளின் விநியோகம் தற்போது வாராந்த அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது, ஒரு தொழில்முனைவோர் சுதந்திர செயற்பாட்டாளர் என்ற வகையில் நீங்கள் சம்பாதிக்கும் டொலர்களை நிர்வகிக்கும் விதிகளும் எதிர்காலத்தில் விரைவாக மாறக்கூடும் என்று கருதுவது பாதுகாப்பானது.

இலங்கை மத்திய வங்கி துரதிஷ்டகரமாக தொழில்முனைவோரிடமிருந்து டொலர்களை சட்டபூர்வமாகத் திருடுவதற்குப் பின்னால் உள்ள காரணங்களைப் பற்றிய ஆழமான புரிதலுக்கு, Watchdog இன் உமேஷ் மொரமுதலியின் “பொருளாதாரத்தின் மீதான 30,000 அடி பார்வை” என்ற  பகுதியைப் பார்க்குமாறு பரிந்துரைக்கிறோம் - இது உண்மையில் எவ்வாறான மோசமான நிலைமை காணப்படுகின்றது என்ற எமது நீண்ட அவதானிப்புகளின் ஒரு பகுதியாகும்.

அதுவரை, உங்கள் அரசாங்கத்தின் செழிப்புக்கான உங்களது அன்பளிப்புப் பங்களிப்பாக கருதி உங்களால் இழக்கப்பட்ட டொலர்களை பதிவழித்து விடுவதோடு மண்டியிடவும் சிரமங்களை எதிர்கொள்ளவும் தயாராகுங்கள் என்பதே எமது பரிந்துரையாகும்.

இந்தக் கட்டுரைக்கான தரவு

Gazette 2251-42.pdf207.9KB
Gazette 2229-9.pdf33.3KB
👥
Watchdog is an open-source research collective. Learn more about us here. Watchdog යනු විවෘත මූලාශ්‍ර පර්යේෂණ සාමූහිකයකි. අපි ගැන තව දැනගන්න. Watchdog ஒரு திறந்த மூல ஆய்வு நிறுவனம். எம்மைப் பற்றிய அறிய