இலங்கையின் பொருளாதாரத்துக்கு என்ன நடக்கின்றது: ஒரு அடிப்படை மேல்நோக்கு

நமது பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. ஆனால் ஏன்? எப்படி? இந்த நெருக்கடியில் நாங்கள் எப்படி கீழ்நிலைக்குச் சென்றோம் என்பதை எங்கள் பொருளாதார நிபுணர் விளக்குகிறார்.

@February 1, 2022

Read this article in English | සිංහල

image
கதை மற்றும் ஆய்வு : உமேஷ் மொரமுதலி தரவு மற்றும் காட்சிப்படுத்தல்கள் : யுதஞ்சய விஜேரத்ன செம்மையாக்கம் : ஆயிஷா நாஸிம் மொழிபெயர்ப்பு : மொஹமட் பைரூஸ் &  நாதிம் மஜீத்

இன்னொரு மின் துண்டிப்பு மக்களின் ஏமாற்றங்களை அதிகரித்துள்ளது. நாடளாவிய ரீதியில் மக்கள் சமூக ஊடகங்களிலும் குழுக் கலந்துரையாடல்களிலும் வெள்ளமெனப் பாய்ந்து வந்த முறைப்பாடுகள் (மற்றும் சாபங்களின்) ஊடாக இந்த ஏமாற்றம் வெளிப்படுத்தப்பட்டது.

#PowercutLK என்ற ஹாஷ்டெக் பிரபலமடைந்ததுடன் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்தமை மற்றும் ஏனைய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றமை என்பவற்றைத் தொடர்ந்து இலங்கையின் பொருளாதாரம் பற்றிய கவலை பலராலும் வெளிப்படையாகப் பேசப்பட்டது. உணவு, எரிவாயு, மற்றும் எரிபொருட்கள் இன்மை பொருளாதாரம் ‘நல்ல நிலையில் இல்லை’ என அனைவரையும் உணர வைத்தது.

இந்த நாளாந்த வாழ்வின் போராட்டங்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் என்பன பல பொருளாதார கொள்கைகளின் பின்விளைவுகளாகும். இவற்றை ஏற்படுத்திய அடிப்படைக் காரணிகளை புரிந்து கொள்வதற்கு கடந்த தசாப்தத்தில் இலங்கையின் பொருளாதாரத்துக்கு என்ன நடந்தது என சிறிது தேடிப்பார்ப்பது அவசியமாகும். இக்கட்டுரை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்ற பின்னணியில் உருவாக்கப்பட்ட ஒன்று எனக் கருதிக்கொள்ளுங்கள்.

நாம் தற்போதைய நிலையை எவ்வாறு அடைந்தோம் அத்துடன் விடயங்கள் எவ்வாறு எமது கையை மீறிச் சென்றன?

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி பற்றிய சுருக்கமான பார்வை

மூன்று தசாப்தங்கள் நிலவிய யுத்தம் 2009 ஆம் ஆண்டில் நிறைவுற்றவுடன், இலங்கை அதியுயர் பொருளாதார வளர்ச்சி வீதங்களை பதிவு செய்தது. இதன் பொருள், நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் உயர் வீதத்தில் விரிவடைந்தது என்பதாகும்.

2010 இல் இலங்கையின் பொருளாதாரம் 8% வளர்ச்சியை எட்டியது. 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் இந்த வளர்ச்சி வீதங்கள் முறையே 8.4% மற்றும் 9.1% எனக் காணப்பட்டன.

image

எவ்வாறாயினும், கட்டுமானம் மற்றும் சில்லறை வர்த்தகம் போன்ற உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகளின் விரிவாக்கமே இந்த பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய அளவில் பங்களித்திருந்தது, கட்டுமானத் துறையின் வளர்ச்சி அரசாங்கம் மற்றும் தனியார் துறை மேற்கொண்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தியின் காரணமாக ஏற்பட்டதாகும். அதி வேக வீதிகள், விமான நிலையங்கள் அத்துடன் கொழும்பில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் கட்டடங்கள் போன்றவற்றை உதாரணமாக இங்கு குறிப்பிடலாம். இது பற்றிய சிறியதொரு சூழமைவை வழங்க வேண்டுமானால், தெற்கு அதி வேக வீதியின் முதலாம் கட்டம் கிட்டத்தட்ட 740 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டு 2011 இல் திறந்து வைக்கப்பட்டது. எமது இரண்டாவது அதிவேக வீதியான கொழும்பு கட்டுநாயக்க வீதி 2013 இல் திறந்து வைக்கப்பட்டது. இதன் நிர்மாணிப்புக்கு 292 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியதுடன் சீனாவின் EXIM வங்கி வழங்கிய கடனின் மூலமே இந்த அதி வேகப் பாதையின் நிர்மாணம் சாத்தியமாகியது. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களும் இந்த நடவடிக்கைகளை முன்கொண்டு சென்றன. தெற்கு அதி வேகப் பாதை நீடிக்கப்பட்டது, வெளிச் சுற்று அதி வேகப் பாதை (OCH) நிர்மாணிக்கப்பட்டதுடன் 2015 இல் மத்திய அதி வேகப் பாதையின் நிர்மாணம் ஆரம்பிக்கப்பட்டது.

பொருளாதாரத்தின் இவ்வாறான துறைகளை பொருளியலாளர்கள் வர்த்தகம் செய்யப்பட முடியாத துறைகள் என அடையாளம் காண்கின்றனர். ஏனெனில் இத்துறையுடன் தொடர்புடைய பொருட்கள் மற்றும் சேவைகள் என்பன சர்வதேச ரீதியாக வர்த்தகம் செய்யப்பட முடியாதனவாகும். எனவே, இந்த துறைகளில் இருந்து பெறப்படும் வளர்ச்சி நாட்டின் சனத்தொகையின் அளவு மற்றும் கொள்வனவுத் திறன் (சராசரி நபரின் பொருட்களை வாங்கும் திறன்) என்பவற்றால் கட்டுப்படுத்தப்படுகின்றது. எனவே, அவ்வாறான வர்த்தகம் செய்யப்பட முடியாத துறைகளால் ஏற்படுத்தப்படும் எந்தவொரு நாட்டினதும் பொருளாதார வளர்ச்சி சிறிது காலமே நிலைத்திருக்கும் தன்மை மிக்கது. 22 மில்லியன் என்ற சிறிய சனத்தொகையைக் கொண்ட இலங்கைக்கும் இது அதிகம் பொருந்தும் விடயமாகும்.

2013 ஆண்டு முதல்: உறுதியான  வீழ்ச்சி

2013 இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.4% இல் இருந்து வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. இந்த வீழ்ச்சி தொடர்ச்சியாக இடம்பெற்று இறுதியாக 2019 இல் 2.3% என்ற மிகக் குறைந்த அளவை எட்டியது. 2001 ஆம் ஆண்டின் பின்னர் பதிவு செய்யப்பட்ட அதி குறைந்த பொருளாதார வளர்ச்சி வீதமாக இது அமைந்திருந்தது. இதற்கு இரண்டு பிரதான காரணங்களை முன்வைக்க முடியும்: இலங்கையின் குறைந்த சனத்தொகை காரணமாக சில்லறை வர்த்தகம் மற்றும் கட்டுமானம் போன்ற துறைகளை விரிவாக்க முடியாமல் போனமை; மற்றும் ஏற்றுமதிகளை அதிகரிக்கத் தவறியமை என்பனவே அவையாகும்.

image

நாம் எவற்றை விற்பனை செய்கின்றோம்?

முதலில் நாம் இலங்கையின் ஏற்றுமதி செயற்பாடுகள் பற்றி நோக்குவோம். ஏற்றுமதி 2000 ஆம் ஆண்டில் இருந்து மோசமடைய ஆரம்பித்தது. இதை தெளிவாக விளக்குவோம்: காலப் போக்கில் ஏற்றுமதி செயற்பாடு மேம்பட்டுள்ளது என மக்களை நம்ப வைப்பதற்காகக கூறப்பட்டது.

image

எவ்வாறாயினும், 2000 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 39% ஆகக் காணப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி 2015 ஆம் ஆண்டில் 20% ஆகக் குறைவடைந்தது. உலகளாவிய வர்த்தகம் பாகங்கள் மற்றும் பகுதிகளை உற்பத்தி செய்யும் போக்கை நோக்கி சென்று கொண்டிருந்த வேளை, இலங்கை துணிகள், தைத்த ஆடைகள், தேயிலை மற்றும் இறப்பர் போன்ற பாரம்பரிய ஏற்றுமதிகளில் தொடர்ச்சியாக தங்கியிருந்தது. பங்களாதேஸ் மற்றும் கென்யா போன்ற குறைந்த வருமானம் பெறும் நாடுகள் ஆடைகள் மற்றும் தேயிலை போன்றவற்றை குறைந்த செலவுகளில் உற்பத்தி செய்யத் தொடங்கியதும் எமது ஏற்றுமதி பிரச்சினைக்குரிய விடயமாக மாறியது. இந்நிலை ஆடைகள் மற்றும் தேயிலை என்பவற்றுக்கான சந்தைப் பங்கை அதிகரித்துக் கொள்வதை கடினமான விடயமாக மாற்றியது. இவ்விரு ஏற்றுமதிகளுமே இலங்கையின் ஏற்றுமதிகளில் அரைவாசிக்கும் அதிகமாக பங்களிப்பதுடன் அந்நியச் செலாவணியை கொண்டு வரும் பாரிய மூலங்களாக அமைந்திருந்தன.

image

இது ஏன் முக்கியமானது? ஏற்றுமதிகளை மொத்த தேசிய உற்பத்தி அளவீடுகளில் நோக்குவதன் மூலம் உலகளாவிய சந்தைகளில் பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பனை செய்வதன் மூலம் எமது தேசிய வருமானத்தின் என்ன சதவீதம் அந்நியச் செலாவணி உழைப்பின் மூலம் ஈட்டப்படுகின்றது என நாம் அறிந்து கொள்ளலாம். நீங்கள் கீழுள்ள அட்டவணையில் அவதானிப்பதை போன்று, அந்த சதவீதம் உறுதியாகக் குறைவடைந்து வருகின்றது.

இதில் மோசமான விடயமாக அமைவது, 2019 இல் ஈட்டப்பட்ட மொத்த அந்நியச் செலாவணியில் 46% பொருட்களின் ஏற்றுமதி மூலம் பெறப்பட்டது (அதே ஆண்டில் அந்நியச் செலாவணியின் 14% சுற்றுலாத் துறை மூலமும் 26% வெளிநாட்டில் பணிபுரிவோராலும் ஈட்டப்பட்டது). இதன் பொருள் இலங்கையின் பொருளாதாரம் திடமாகவும் ரூபாய்களிலும் முன்னேறிக்கொண்டிருந்த வேளை, உள் வரும் அந்நியச் செலாவணியின் அளவை அதிகரிக்க இலங்கை தவறி விட்டது. உணவு மற்றும் எரிபொருள் போன்றவற்றுக்கு இறக்குமதியில் தங்கியிருக்கும் இலங்கை போன்ற சிறிய நாடொன்றுக்கு டொலர்களை கையிருப்பில் வைத்திருப்பதன் முக்கியத்துவம் தற்போதைய மின்சார நெருக்கடி மூலம் நாம் கற்றுக்கொண்ட பாடங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

அதன் பின்னர் அரசாங்கம் மிகவும் இலகுவான விருப்பத் தெரிவான வெளிநாட்டு மூலங்களிடம் இருந்து கடன் பெறும் வழிமுறையை பின்பற்றியது. இக்கடன்களில் சர்வதேச இறையாண்மை முறிகளின் (ISBs) ஊடாக சர்வதேச முதலீட்டுச் சந்தைகளில் பெறப்பட்ட கடன்களும் உள்ளடங்குகின்றன. இது இலங்கையின் பொருளாதாரம் செழிப்படைந்து வருகின்றது என்ற போலியான பிரதி விம்பத்தை ஏற்படுத்தியது. அதே வேளை அதிவேகப் பாதைகளின் உருவாக்கம் இந்த மாய விம்பத்தின் தோற்றத்துக்கு வலுச் சேர்த்தது. வீதி வலையமைப்பு தரமுயர்த்தப்பட்டது. நாட்டுக்கு புதியதொரு சர்வதேச விமானநிலையம் கிடைத்தது. கொழும்பு மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் அடுக்குமாடிக் கட்டடங்கள் உருவாகத் தொடங்குவது ஒரு வழமையாக மாறியது. இந்த அபிவிருத்திகளைக் காண்பித்து வீழ்ச்சியடையும் ஏற்றுமதி மற்றும் அதிகரிக்கும் வெளிநாட்டுக் கடன்கள் ஆகிய விடயங்கள் வசதியாக புறக்கணிக்கப்பட்டன.

பொருளாதார வளர்ச்சி மற்றும் வருமான சமத்துவமின்மை

முன்னர் குறிப்பிடப்பட்டதைப் போன்று, யுத்தத்துக்கு பின்னரான உயர் பொருளாதார வளர்ச்சி அரச உட்கட்டமைப்பு உருவாக்கம் மற்றும் சுற்றுலா விடுதிகள் மற்றும் அடுக்குமாடி தொடர் குடியிருப்பு கட்டுமானம் போன்ற தனியார் துறையின் செயற்பாடுகளால் ஏற்பட்டதாகும். இது மிகவும் குறைவான பரவலாக்கும் விளைவை ஏற்படுத்துவதாகும் - இதன் பொருள், யுத்தத்துக்கு பின்னரான காலப் பகுதியில் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி வறியோருக்கு நன்மை பயப்பதாக அமைந்திருக்கவில்லை. நாட்டின் பொருளாதார அபிவிருத்தியின் பெரும்பாலான பயன்களை செல்வந்தர்களே அனுபவித்தனர். இதன் காரணமாகவே மொத்த தேசிய உற்பத்தி போன்ற குறிகாட்டிகள் தவறாக வழிநடத்தும் தன்மை மிக்கதாக அமைகின்றன பாணின் அளவு பெரிதடைகின்றது என்பதன் பொருள் அனைவருக்கும் பெரிய துண்டுகள் கிடைக்கின்றன என்பதல்ல. இங்கு செல்வந்தர் மேலும் செல்வந்த நிலையை அடைவதும் வறியோர் மேலும் வறுமைக்குள் தள்ளப்படுவதுமே இடம்பெறுகின்றது.

இவ்விடயம் கினி குணகத்தினால் (Gini coefficient) தெளிவாக காண்பிக்கப்படுகின்றது. இது செல்வம் பரம்பலடைவதை அளவிடுகின்றது; அதாவது, பொருளாதாரம் ஒன்றில் வருமான விநியோகம் எவ்வாறு காணப்படுகின்றது என்பதை இது காண்பிக்கின்றது. இதன் அளவீடு எந்த அளவுக்கு குறைவாக உள்ளதோ அந்த அளவுக்கு செல்வத்தின் பரம்பல் சிறப்பானதாக இருக்கும்.

இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் கணிப்பீடுகள் இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி அதிகரித்து வரும் வேளை அதன் கினி குணகம் கிட்டத்தட்ட மாறாமல் இருப்பதை காண்பிக்கின்றது. 2016 முதல் 2019 வரையான காலப்பகுதியில் இந்த கினி குணகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை அட்டவணையில் நோக்குங்கள்:

Gini coefficient change: 2016-2019

Region/sector2019Change2016
Matara
0.39
0
0.39
Puttalam
0.43
0.04
0.47
Moneragala
0.43
0
0.43
Anuradhapura
0.44
0.02
0.46
Mullaitivu
0.47
-0.05
0.42
Kegalle
0.39
0.02
0.41
Ratnapura
0.38
0.03
0.41
Vavunia
0.37
0.04
0.41
Badulla
0.53
-0.07
0.46
Kandy
0.45
-0.03
0.42
Sri Lanka
0.46
-0.01
0.45
Nuwara Eliya
0.38
0.03
0.41
Urban
0.49
-0.01
0.48
Kurunegala
0.45
0
0.45
Batticaloa
0.39
0.06
0.45
Kalutara
0.41
0.03
0.44
Estate
0.36
0
0.36
Ampara
0.45
-0.06
0.39
Hambantota
0.44
-0.01
0.43
Polonnaruwa
0.41
0.05
0.46
Sector
0
0
0
Galle
0.44
-0.01
0.43
Mannar
0.34
0.08
0.42
Matale
0.42
0
0.42
Trincomalee
0.4
0.02
0.42
Kilinochchi
0.38
-0.01
0.37
Colombo
0.47
-0.01
0.46
Rural
0.44
0
0.44
Gampaha
0.44
-0.02
0.42
Jaffna
0.44
0
0.44
District
0
0
0

இந்த மாற்றங்கள் மிகவும் சிறியதாக அமைந்திருப்பதை உங்களால் அவதானிக்க முடியும். மொத்த தேசிய உற்பத்தியின் அளவு அதிகரித்த போதும் பெரும்பாலான மக்களால் அந்த வளர்ச்சியின் நன்மையை அனுபவிக்க முடியவில்லை. 2016 – 2019 காலப்பகுதிகளில் அமைந்த இந்த இலக்கங்களை தற்போது நாம் ரூபாய் பெறுமதியில் நோக்குவோம்: 2019 முதலாவது காற்பகுதி இரண்டாவது காற்பகுதி மூன்றாவது காற்பகுதி நான்காவது காற்பகுதி ஐந்தாவது காற்பகுதி

Household income, 2016

Segment of societySecond quartileThird QuartileFifth Quartile (Top 20%)First Quartile (Bottom 20%)Fourth Quartile
Share of income (%)
9.6
14
50.8
4.8
20.7
Mean household income per month (Rs.)
30,008
43,713
158,072
14,843
64,570
Cumulative share of income (%)
14.4
28.5
100
4.8
49.2

Household income, 2019

Segment of societyFirst Quartile (Bottom 20%)Second quartileFourth quartileThird quartileFifth Quartile (Top 20%)
Cumulative share of income (%)
4.6
14.1
48.6
28.1
100
Mean household income per month (Rs.)
17,572
36,290
78,431
53,522
196,289
Share of income (%)
4.6
9.5
20.5
14
51.4

2016 இல் அடிமட்டத்தில் உள்ள 40% ஆன மக்கள் நாட்டின் மொத்த வருமானத்தில் 14.1% இனை மாத்திரம் பெற்றுக் கொண்டதுடன் உயர்மட்டத்தில் உள்ள 20% ஆன மக்கள் அதன் 50.8% இனை பெற்றுக்கொண்டனர். 2019 இனை நோக்கும் போது உயர் மட்டத்தில் உள்ள 20% ஆன மக்கள் 51.4% ஆன நாட்டின் மொத்த வருமானத்தை பெற்றுக் கொண்டதுடன் ஏனைய அனைத்து தரப்பினதும் வருமானங்கள் சிறிதளவு குறைவடைந்துள்ளன. உச்சத்தில் உள்ளவர்களின் சராசரி வருமானம் 196,289 ரூபாய்களாகவும் அடிமட்டத்தில் உள்ளோரின் வருமானம் 17,572 ரூபாய்களாகவும் காணப்படுகின்றது.

இன்னும் பின்னோக்கி பார்க்கும் வேளை இந்நிலை மேலும் மோசமான நிலையைக் காண்பிக்கின்றது. 2009 - 2010 இல் இலங்கையின் கினி குணகம் 0.49 ஆக இருந்தது. 2019 இலும் அதன் அளவீடு 0.46 என்ற உயர் மட்டத்திலேயே உள்ளது. இதை எளிமையாகக் கூறுவதாயின், 2009 மற்றும் 2010 நாட்டில் மிகவும் வறுமையில் உள்ள 40% ஆன மக்கள் நாட்டின் ஒட்டுமொத்த குடும்ப வருமானத்தில் 13.3% இனையே பெற்றுக்கொண்டனர். 2019 ஆண்டில் அவர்களின் இந்த தசத்தில் அமைந்த சதவீதத்தை ஒற்றை பெறுமதியாகக் கூட அவர்களால் அதிகரிக்க முடியவில்லை.

பொருளாதார வளர்ச்சி இடம்பெற்றுள்ளது, எனினும் இந்த குறிப்பிட்ட பொருளாதார வளர்ச்சியால் எவ்வாறு மிகவும் வறுமையானவர்கள் மற்றும் நடுத்தர வகுப்பினை சேர்ந்தவர்களால் கூட நன்மையை பெற முடியவில்லை என்பதை இந்த இலக்கங்கள் பிரதிபலிக்கின்றன.

இலங்கையின் வரி அறவீட்டுப் பிரச்சினைகள்

தற்பொழுது நாம் அடுத்த பிரச்சினையை நோக்குவோம். இலங்கையின் பொருளாதாரம் தொடர்ச்சியாக வளர்ந்து வருவதாகக் கூறப்பட்டாலும், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் குறிப்பிடத்தக்க அளவு வரி வருமானங்களை ஈட்ட தவறி விட்டன. இங்கும் மொத்தப் பெறுமதிகள் வளர்ச்சியை காண்பிக்கின்றன.

image

எனினும் வரி வருமானத்தை மொத்த தேசிய உற்பத்தியின் சதவீதமாக நோக்கும் வேளை அது தொடர்ச்சியாக குறைவடைவதை எம்மால் காண முடியும்.

image

இந்த சூழ்நிலை யுத்தத்துக்கு பின்னர் ஏற்பட்டது அல்ல. மொத்த தேசிய வருமானம் மற்றும் இலங்கையின் வரி வருமானம் இடையான விகிதம் 1990 களின் நடுப்பகுதியில் இருந்தே குறைவடைய ஆரம்பித்தது. யுத்தத்துக்கு பின்னரான காலப்பகுதியில் உயர் பொருளாதார வளர்ச்சி பதிவு செய்யப்பட்ட போதும் இப்போக்கு தொடர்ந்தது. 1990 இல் இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியின் மீதான வரி வருமான வீதம் 20.4% ஆக இருந்ததுடன் இப்பெறுமதி 2014 இல் 10.1% ஆகக் குறைவடைந்தது. இலங்கை 1948 இல் சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட ஆகக் குறைந்த பெறுமதியாக இது அமைந்திருந்தது.

2015 இல் முன்னெடுக்கப்பட்ட Super Gain Tax (உயர் அடைதல் வரி) போன்ற குறுகிய கால நடவடிக்கைகளால் வரி வருமானம் சிறிதளவு அதிகரித்தது. 2017 இல் இப்பிரச்சினைக்குரிய நீண்ட கால தீர்வொன்றாக, வருமான வரியில் அதிக கவனம் செலுத்தி வரி சேகரிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் உள்நாட்டு இறைவரிச் சட்டம் 2017 அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சட்டவாக்கத்தில் வரி விதிப்பு முறையை எளிமையாக்குதல் அத்துடன் தனி நபர் மற்றும் குழும வரி வீதங்களை அதிகரித்தல் உள்ளடங்கலாக வரி வருமானத்தை அதிகரிப்பதற்கான பல நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அங்கமாக, அப்போது புதிதாக தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்சவின் தலைமையிலான அரசாங்கம் பாரிய வரிச் சலுகைகளை வழங்கியது. இந்நடவடிக்கையில் உள்நாட்டு இறைவரி சட்டம் 2017 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பல வரி மாற்றங்களை திருத்தியமைத்தலும் உள்ளடங்கியிருந்தது. பெறுமதி சேர்க்கப்பட்ட வரி வீதம் 15% இல் இருந்து 8% ஆகக் குறைக்கப்பட்டமை, வருமான வரி வீதங்கள் குறைக்கப்பட்டமை, சம்பாதிப்பதற்கு ஏற்ப செலுத்த வேண்டிய வரி (PAYE) நீக்கப்பட்டமை அத்துடன் நீங்கள் வட்டியின் மூலம் பெறும் வருமானத்தின் மீதான வரி போன்ற தெரிவு செய்யப்பட்ட வகைகளில் அமைந்த பிடித்து வைத்தல் வரி (WHT) நீக்கம் போன்ற நடவடிக்கைகள் இதன் போது மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைகளாலும் கொவிட்-19 பெருந்தொற்று பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்திய தாக்கத்தினாலும் வரி வருமானத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டது. 2014 இல் 10.1% என்ற மிகக் குறைந்த பெறுமதியை அடைந்த இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி மற்றும் வரி என்பவற்றின் இடையான விகிதம் இன்னும் குறைவடைந்து 8.4% என்ற மிகக் குறைந்த பெறுமதியை அடைந்தது.

கடந்த பல வருடங்களில் இலங்கை மக்களின் சராசரி வருமானம் அதிகரித்து வந்த வேளை (தலா வருமான அதிகரிப்பு சுட்டிக்காட்டுவதன் படி), செல்வந்தர்கள் செல்வந்தர்களாக நிலைத்திருந்ததுடன் அரசாங்கத்தின் வரி வருமானம் குறைவடைந்தது.

இது பாரம்பரியமான அபிவிருத்தி தொடர்பான கதைகளுக்கு ஒரு விதிவிலக்காகக் காணப்படுகின்றது. ஒரு நாடு உயர் அபிவிருத்தியை நோக்கி நகரும் வேளை அந்நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கும் வரி சேகரிப்புக்கும் இடையான விகிதம் அதிகரிப்பதை உலகளாவிய சான்றுகள் கோடிட்டுக் காட்டுகின்றன. இலங்கையின் நிலை இதற்கு நேர்மாறாக உள்ளது. இலங்கையின் தலா வருமானம் அதிகரித்துள்ள வேளை மொத்த தேசிய உற்பத்தி மற்றும் வரி என்பவற்றுக்கு இடையான விகிதம் குறைவடைந்துள்ளது. வரி சேகரிப்பில் காணப்படும் தீவிர செயலிழப்பை இது சுட்டிக்காட்டுகின்றது: பணம் வருகின்றது, எனினும் இது நிச்சயமாக அரசாங்கத்தை சென்றடைவதில்லை. கினி குணகத்தை வைத்து நோக்கும் வேளை, இவ்வருமானம் பெரும்பான்மையான சனத்தொகையினை சென்றடையவும் இல்லை.

வரி சேகரிப்பு மோசமடைந்ததன் விளைவாக, நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை (அரசாங்கத்தின் செலவீனங்கள் மற்றும் வருமானம் என்பவற்றின் இடையான இடைவெளி) அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. அரசாங்கத்தின் வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்ட நிலையிலும், இலங்கையின் செலவுகள் ஆடம்பரமாக அதிகரித்துக்கொண்டு செல்கின்றன. அரசாங்கம் அதிகமதிகம் கடன்களைப் பெற்று தொடர்ந்து அதி வேகப் பாதைகளை அமைத்துக்கொண்டு செல்கின்றது.

இது இரண்டு அர்த்தங்களை எமக்கு தருகின்றது. ஒன்று, எமது வரவு செலவுத்திட்டத்தில் துண்டு விழும் தொகை தொடர்ச்சியாக அதிகரித்து செல்கின்றது. எமக்கு பணம் வரவில்லை, அத்துடன் தொடர்ந்து நாம் செலவழித்துக்கொண்டிருக்கின்றோம். மற்றையது, அடுத்தடுத்து வரும் அரசாங்கங்கள் ஒவ்வொரு வருடமும் தமது செலவுகளை பேணுவதற்காக கடன் பெறுவதால் நாட்டின் கடன் அதிகரித்துச் செல்கின்றது. சீர்திருத்தம் இல்லாத வளர்ச்சி இவ்வாறே தோற்றமளிக்கும்.

image

நாம் தற்போது எந்நிலையில் உள்ளோம்?

பல தசாப்தங்களாக இலங்கை தீவிர பொருளாதார பிரச்சினைகளுடன் போராடி வரும் அதே வேளை அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சீர்திருத்தங்களை மேற்கொள்ள மற்றும் அவ்வாறான சீர்திருத்தங்களை பேணி வர தவறுகின்றது. வரி விகிதங்களின் குறைப்பு, மோசமடையும் ஏற்றுமதி செயற்பாடுகள், அதிகரிக்கும் சமத்துவமின்மை மற்றும் பிஸ்கால் ஒழுக்கங்கள் இன்மை போன்றன எமது பொருளாதாரத்தின் பாதிப்புறும் ஏதுநிலையை கோடிட்டுக் காட்டுகின்றன.

தற்போது இலங்கையின் பொருளாதாரம் திருத்தம் செய்யப்படாத பழைய கட்டடம் போல் உள்ளது. நாம் விலையுயர்ந்த தரையோடுகளை வாங்குவதற்கு செலவிட்டுள்ளோம், ஆனால் எமது கூரை ஒழுகுவதை மற்றும் சுவர்கள் அதிர்வதை நாம் முற்று முழுதாக புறக்கணித்து விட்டோம். இந்த பழுது பார்ப்புகள் மிகவும் அவசரமாக மேற்கொள்ளப்படாவிட்டால் இந்தக் கட்டடம் விரைவிலேயே விழுந்து விடும். தற்போது, விசேடமாக கொவிட் - 19  உலகை உலுக்கியுள்ள நிலையில், இலங்கையின் பொருளாதாரத்தின் பலவீனங்கள் தீவிரமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கட்டடத்தின் பிளவுகளும் இடைவெளிகளும் அதிகரித்து வருகின்றன, இது மிகவும் ஸ்திரமற்ற நிலையை அடைந்துள்ளது – அத்துடன் பராமரிக்கப்படாத கட்டடம் போன்று இந்த நாடும் விரைவில் விழுந்து விடும் என ஒவ்வொருவரும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர்.

விளக்கங்கள்

தெளிவற்ற பதங்கள்

1. கினி குணகம் - இது வருமான சமத்துவமின்மைகளை அளவிட அதிகளவில் பயன்படுத்தப்படும் குறிகாட்டியாகும். குறித்த நாடொன்றில், வேறுபட்ட மட்டங்களில் உள்ள வருமானம் பெறும் குழுக்களின் இடையே வருமானம் எவ்வாறு பரவிக் காணப்படுகின்றது என்பதை அளவிடுகின்றது (உதாரணமாக, நாட்டின் மொத்த வருமானத்தின் 60% சனத்தொகையின் 20% ஆன உயர் வருமானமீட்டுவோரால் உழைக்கப்படுகின்றது அத்துடன் நாட்டின் மொத்த வருமானத்தின் 05% மிகவும் வறுமையான வருமானமீட்டுவோரால் ஈட்டப்படுகின்றது). இக்குணகத்தின் அளவீடுகள் 0 தொடக்கம் 01 வரை அமைந்துள்ளன, இதில் 0 என்ற பெறுமதி நாட்டின் வருமானம் சனத்தொகை மத்தியில் சமமாக பரம்பலடைந்துள்ளது என்பதை காண்பிக்கின்றது. 01 என்ற கினி குணக அளவீடு நாட்டின் ஒட்டுமொத்த வருமானமும் ஒருவரையே சென்றடைகின்றது என்பதையும் மற்றைய அனைவரும் எதனையும் பெறுவதில்லை என்பதையும் குறிக்கின்றது.

எனவே, கூடிய கினி குணகப் பெறுமதி உயர் வருமான சமத்துவமின்மையைக் குறிக்கின்றது.

2.  மொத்த தேசிய உற்பத்தி (GDP) - இது நாடொன்றில் குறித்த வருடமொன்றில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் பணப் பெறுமதியை குறிக்கின்றது. GDP கணிப்பீடுகளில் வீட்டு வேலை போன்ற சம்பளம் வழங்கப்படாத வேலைகள் மற்றும் கறுப்புச் சந்தை நடவடிக்கைகள் போன்றன உள்ளடக்கப்படுவதில்லை.

3.  தலா வருமானம் - இது நாடொன்றின் சராசரி வருமான மட்டத்தை மதிப்பிட பயன்படுத்தப்படுகின்றது. GDP தலா வருமானம் என்பது மொத்த தேசிய உற்பத்தியை (GDP) ஆண்டின் நடுப்பகுதியின் சனத்தொகையினால் பிரித்து பெறப்படும் பெறுமதியாகும். பொதுவாக GDP  நாட்டின் மொத்த வருமானத்தை பிரதிபலிக்கின்றது. எனவே, GDP  தலா வருமானம் என்பது நாட்டின் சராசரி வருமானத்தை பிரதிபலிக்கின்றது. இக்குறிகாட்டி நாட்டின் வருமான சமத்துவமின்மையை படம்பிடித்துக் காட்டாது.

4.  பொருளாதார வளர்ச்சி வீதம் - இது நாடொன்றின் GDP முந்தைய வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் என்ன சதவீதத்தினால் அதிகரித்துள்ளது என்பதை குறித்துக்காட்டுகின்றது. குறிப்பிட்ட வருடமொன்றில் நாடொன்றினுள் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் அதற்கு முந்தைய வருடத்தில் ஒப்பிடும் போது என்ன சதவீதத்தில் அதிகரித்துள்ளது என்பதை வளர்ச்சி வீதம் பிரதிபலிக்கின்றது.

வரிகளின் வகைகள்

1.  தனி நபர் வருமான வரி – வருடமொன்றுக்கு 3 மில்லியன்களை விட அதிகமாக வருமானம் பெறும் நபர்கள் வருமான வரி செலுத்த வேண்டும். வருமானம் உயரும் வேளை வரி வீதமும் உயரும். உச்ச வரி வீதமாக 24% அமைகின்றது.

2.  குழும வருமான வரி – கம்பனிகள் தாம் பெறும் இலாபத்துக்கு வரி செலுத்த வேண்டும். வியாபாரத்தின் தன்மைக்கு ஏற்ப 4 வகையான வரி வீதங்கள் உள்ளன. அவையாவன: 14%, 18%, 24% மற்றும் 40%

3.  பெறுமதி சேர்க்கப்பட்ட வரி  (VAT)– வருட விற்பனையில் ரூபாய் 300 மில்லியனுக்கும் அதிகமான தொகையை உழைக்கும் எந்தவொரு வியாபாரமும் VAT வரி செலுத்தப்பட வேண்டிய பொருட்களுக்கு 8% VAT  வரி செலுத்தப்பட வேண்டும். இவ்வரியானது அநேகமாக விற்பனையாளர்களால் கொள்வனவாளர்களின் மீது சுமத்தப்படுகின்றது. உயர் VAT  வரி என்பதன் பொருள் உயர் விலை என்பதாகும்.

4.  சுங்க இறக்குமதி தீர்வைகள் - அதிகமான இறக்குமதி பொருட்கள் விடுவிக்கப்பட முன்னர் அவற்றுக்கான வரி சுங்கத்தில் செலுத்தப்பட வேண்டும். அனைத்து பொருட்களுக்கும் வரி விதிக்கப்படுவதில்லை. சுங்க இறக்குமதி தீர்வை செலுத்தப்பட வேண்டிய பொருட்களின் பட்டியல் இந்த இணைப்பில் உள்ளது.

5.  துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரி  (PAL) - இது இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்படும் மேலதிக தீர்வையாகும். அனைத்து பொருட்களுக்கும் இந்த வரி விதிக்கப்படுவதில்லை. PAL  வரி செலுத்தப்பட வேண்டிய பொருட்களின் பட்டியல் இந்த இணைப்பில் உள்ளது.

6.  Cess  – குறிப்பிட்ட பொருட்களின் இறக்குமதியை குறைத்து உள்ளூர் தொழிற்துறைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் விதிக்கப்படும் இன்னொரு தீர்வையாகும். அனைத்து பொருட்களுக்கும் இந்த வரி விதிக்கப்படுவதில்லை. Cess வரி செலுத்தப்பட வேண்டிய பொருட்களின் பட்டியல் இந்த இணைப்பில் உள்ளது. Cess மற்றும் PAL வரிகள் இறக்குமதி மீது விதிக்கப்படும் மேலதிக தீர்வைகள் என்பதால் அவை Para  தீர்வைகள் என அழைக்கப்படுகின்றன.

7. விசேட பண்டங்கள் மீதான வரி (SCL) - இவ்வரியானது அரிசி, உருளைக் கிழங்கு, மற்றும் வெங்காயம் போன்ற தெரிவு செய்யப்பட்ட சில அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்படுவதாகும். இது சுங்க இறக்குமதித்  தீர்வை, Cess மற்றும் PAL என்பவற்றை ஒன்று கூட்டுவதன் மூலம் பெறப்படும் வரியாகும். இவ்வாறு ஒன்று கூட்டப்பட்ட வரி காணப்படுவது அரசாங்கம் இவ்வனைத்து வரிகளையும் ஒரே இடத்தில் சேகரிப்பதை அனுமதிக்கும்.

8. கலால் தீர்வை – வாகனங்கள், மதுபானம், மற்றும் சிகரெட்டுகள் என்பவற்றுக்கு விதிக்கப்படும் வரி. வரி வீதங்கள் பொருளுக்கு ஏற்ப மாறுபடும்.

9. விசேட பொருட்கள் மற்றும் சேவைகள் வரி (SGST) - இதற்குரிய சட்ட மூலம் அண்மையிலேயே வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதால், இவ்வரி இன்னும் அமுல்படுத்தப்படவில்லை. வாகனங்கள், மதுபானம், சிகரெட், சூதாட்டம் மற்றும் விளையாட்டு அத்துடன் தொலைத்தொடர்பு போன்றவற்றுக்கு விதிக்கப்படும் வரிகள் அனைத்தையும் ஒன்று கூட்டி அறவிடுவதாக இவ்வரி அமையவுள்ளது.

👥
Watchdog is an open-source research collective. Learn more about us here. Watchdog යනු විවෘත මූලාශ්‍ර පර්යේෂණ සාමූහිකයකි. අපි ගැන තව දැනගන්න. Watchdog ஒரு திறந்த மூல ஆய்வு நிறுவனம். எம்மைப் பற்றிய அறிய